Thursday, September 14, 2006

எது நிஜம்

நிலத்தில் நாம்
நிற்பதால் இறக்கைகள்
கொடுத்தோம் கடவுளுக்கு
அளக்க இயலாமல்
விரிந்து கிடந்ததால்
வானத்தில் வீடு கட்டினோம்
வசதியாய் கடவுளுக்கு
அதற்கப்புறம்
அசரீரியும் கட்டளைகளும்
அங்கிருந்தே வழங்கப்படுகின்றன

பொன்னும் மணியும்
தின்னும் சோறும்
கலவியின் சுகமும்
தேடி தீர்த்தோம் நிதமும்
தேடல்கள் நமக்கானதால்
இருக்கையில் வணங்கினால்
இம்மையில் கொடுப்பவரே
கடவுளானார்

வேண்டினால்தான் கொடுப்பவனென்றால்
தேவைகளுண்டு கடவுளுக்கு
தேவைகள் தீர்ந்த
கடவுள் தேடி
இனியாவது
வேண்டுதல் கேட்டவனை
விட்டு விடுவோம்
நீண்டதொரு கற்பனையை
நிஜமாய் நினைத்தல் சாத்தியமே
அது எல்லாரிடமும்
இருக்கும் பொழுதில்

Wednesday, September 13, 2006

கிட்டதட்ட ஒரு காதல் கதை

சண்முகம் சாப்பிட்டு விட்டு மற்றும் சாப்பிடும் போது வேர்த்து விட்டு கிளையன்டுக்கு பணி புரிபவன். அவனை சில சமயம் சாப்பிடுவேர் எஞ்சினியர் என்றும் சொல்லுவார்கள். டிவியின் எல்லா புரோக்கராம்களையும் தலைகீழாக மனப்பாடம் செய்து விடிய விடிய பார்ப்பதால் புரோக்ராமர் என்ற பெயரும் உண்டு.

இந்த வேலை இப்போதெல்லாம் செய்ய அலுப்பாக உள்ளதால் அதிக நேரம் பேசும் வேலைக்கு போக ஆசைப்பட்டான். தமிழனாய் பிறந்து இதைக்கூட செய்ய ஆசைப் படவில்லையென்றால் என்ன ஆவது? அதனால் பிசினேஸ் அனாலிஸ்ட் ஆக அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

குறுக்குப்பட்டியில் அப்பா மகன் அமெரிக்காவில் அமெரிக்கனாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அரசாங்க வேலையிலிருக்க இங்கே இவன் சீட்டை தேய்த்துக் கொண்டு பத்து முறை காப்பி (டீ பிடிக்காது) இடைவேளை எடுத்து வேலை அளவுக்கு குறைவாக செய்து சன் டிவீ பார்த்து தமிழ் பட டிவிடிக்காக நடையாய் நடந்து தமிழ் நண்பர்களுடன் அளஅளாவி அப்பாவுக்கு போட்டியாக கடமையாற்றிக் கொண்டிருந்தான்.

சண்முகமும், பெரு வேட்டரையனும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் செர்மன் ஒக்ஸ் என்னும் புண்ணிய பூமியில் இருந்தார்கள். வேட்டரையனுக்கு பெண் தோழி உண்டு. சண்முகத்துக்கு பெண் தோழி வேண்டுமென்ற ஆசை உண்டு. பொதுவாக வேட்டரையனின் புரோக்ரமாக இருந்தால் வெட்டி ஒட்டிக் இவன் பெயரை எழுதிக் கொள்வான். வேட்டரையனின் தோழியை எல்லாம் வெட்டி ஒட்டி இவன் பெயரை ஒட்டிக் கொள்ள முடியாதே. அந்த தோழியின் ஒன்று விட்ட சித்தி மகளின் தோழி நியுயார்க்கிலிருந்து செர்மன் ஓக்ஸ் வர ஆசைப்பட்டதால் வரும் பெண்ணுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வேலை இவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது. மாதம் இரண்டாயிரம் போன் பில் கட்டி பெங்களுரிலிருக்கும் அந்த பெண்ணுக்கு பெருவேட்டரையன் கொத்தடிமையாக இருந்தான் என சண்முகம் இரக்கப்படுவான்.

சண்முகத்தின் குடும்ப பாசப்பிணைப்பு ஒரு ஐந்து ரூபாய் போன் கார்டில் ஆறுமாதம் பேசுமளவுக்கு இருக்கும். பெரும்பாலும் அவனுக்கும் ஊருக்குமிருக்கும் தகவல் தொடர்பு மணிரத்தினம் படத்தின் டயலாக் போல இருக்கும். பொண்ணு பாத்தாச்சா என்று இவன் கேட்க இல்லை என்று அவர் ஊரிலிருந்து சொல்லுவார். அடுத்த நொடி இவனோ இல்லை அவரோ போன் வைத்து விடுவார்கள். பெருவேட்டரையனுக்கு ஒரு வருடம் முன்னால் அவன் அறைத்தோழனாக வந்த நாள் முதல் இதுதான் நடந்துக் கொண்டிருந்தது.

சொப்ன பிரியா என்ற நாமம் கொண்ட அப்பெண்ணும் நியுயார்கிலிருந்து வந்து பார்க்க ஏதுவாய் இருந்தாள். அவளை பார்த்த கணத்தில் சண்முகத்திற்கு அவளை பிடித்து விட்டது. சண்முகத்திற்கு ஒரு வருடமாக எல்லாப் பெண்களையும் பார்த்தவுடன் பிடித்திருந்தது. அதற்கு முன் பெண்கள் பெயரை கேட்டாலே அவனுக்கு அந்த பெண்ணை பிடித்து விடும். இப்போதெல்லாம் மெச்சூர் ஆகி விட்டான்.

அவளை பார்த்த நிமிடம் முதல் சண்முகம் சிரித்த முகமாய் இருக்க முயல அவனுக்கு கான்ஸ்டிபேசனா என அவள் கேட்க நேர்ந்தது. அவள் கேட்ட முதல் கேள்வியே இவ்வாறிருக்க சண்முகத்து தலைக்குள் பட்டாம் பூச்சிகள் முட்டைப் போட்டது போலிருந்தது.

இரவு உணவு சாப்பிட்டு முடிக்கும் வரையில் இவனது சம்பாசணைகள் ஆமாம் , இல்லை , அது எனக்கும் பிடிக்கும் , சே சே சுத்தமாக பிடிக்காது என்ற ரீதியில் பெருவேட்டரையனுக்கும், சொப்ன பிரியாவுக்கும் இடையே நடந்துக் கொண்டிருந்த உரையாடலுக்கு நடுவே நகர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எதற்கு என்ன பதில் சொல்கிறோமென்றே அவனுக்கு புரியவில்லை. அலுவலகத்தில் நடந்த ஸ்டேடஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட மாதிரி அவனுக்கு உணர்விருந்தது. அவர்களும் இவனுடைய பதிலை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஆங்கில இசை, இலக்கியம், சினிமா பற்றி பேசியதாக வேட்டரையன் உறங்கும் நேரத்தில் கூறினான்.

இவனுக்கு தெரிந்த உலக சினிமா ஜாக்கிசான் மற்றும் ஆர்னால்ட் நடித்தாகவே இருந்தது. அவர்கள் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை. இவனுக்கு தெரிந்த ஆங்கில புத்தகங்கள் பி எல் தெரஜா மற்றும் பாலகுருசாமி எழுதியதாகவே இருந்தது. இசையில் கமல்ஹாசன் மற்றும் எஸ்.பி.பியை தெரியும். இந்த பெயர்களே அவர்கள் உரையாடலில் வரவில்லை. மனதை தேற்றி படுத்தால் சொப்னமெங்கும் சொப்ன ப்ரியாவே இருந்தாள்.

மனசு சரியில்லாமல் கொஞ்சம் இரவு நேர சினி மேக்ஸ் சானல் குடும்ப படம் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் வெளியே வந்தான். சொப்ன பிரியாவும் சீரியல் டப்பாவிலிருந்து சீரியலை பௌலில் கொட்டி அதை வெறும் வாயில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பாவம் இலையையும் தழையையும் டயட் என்ற பெயரில் இரவு உணவுக்கு சாப்பிட்டது பத்தவில்லை போலிருக்கிறது என நினைத்துக் கொண்டான். சண்முகத்தை கண்டவுடன் பேந்த பேந்த முழித்தாள். கிளையன்ட் சைட்டில் க்ராஷ் ஆன புரோக்ராம் மாதிரி இமேஜ் ஆகி விட்டதே என அவளுக்கு வருத்தமாய் இருந்தது.

(தொடரலாம்)

Monday, September 11, 2006

தேவை

அங்கு ஒரு பிணம்
இருந்தது
நாங்களெல்லாம் கூடி
அது கொலையா
படுகொலையா
களையெடுப்பா
தற்கொலையா
யுத்ததின் எச்சங்களாவென
விவாதம் கொண்டோம்
விவாதத்துக்கு தொந்தரவாய்
கண்ணீரும் கம்பலையுமாய்
அடிவயிற்றின் எரிச்சலோடு
சப்தம் கிளப்பி சிலர்
குடும்பமாம் அழுகையாம்
வேடிக்கை மனிதர்களென
அங்கதம் பேசி
விவாதம் தொடர்கையில்
நடு நடுவில்
அங்காங்கே புதுப்பிணங்கள்
பிறந்துக் கொண்டிருந்தன
அவை புது விவாதங்களுக்கு
கொண்டு சென்றன
வர வர
பிண நாற்றத்தில்
எதை விவாதிக்கிறோமென
தெரியவில்லை
தீர்வுகளின் தேவைகள் மறந்து
போனதால்
விவாதங்களே தேவை ஆனது
அதனால்..

Sunday, September 10, 2006

கைனடிக் எனர்ஜி

வேகமும் கனமும் ஒரு திசையில் தள்ள இயங்கு ஆற்றல்(kinetic energy) உருவாகிறது. பௌதிக ரீதியாக எழுதினால் இதனை E=1/2 mv2 என சொல்ல்லாம். m கனத்தையும், v வேகத்தையும் குறிக்கும். உருவான இயங்கு ஆற்றல் எதிர் வேலையினால் (negative work) சமன் செய்யப் படுகிறது. இந்த சூத்திரம் எல்லா அறிவியல் தளத்திற்கும் அடிப்படையாகும்.

நமது மனோபாவத்திற்குமே இந்த சூத்திரம் பயன் படுத்தலாம். சோகமா, சந்தோஷமோ, வெறுப்போ, கோபமோ திசைகளாயிருக்க நிகழ்வுகளின் கனம் மற்றும், வேகத்தின் காரணமாக நம் உணர்வுகள் நகர்கின்றன. தொடர்ந்து இயங்கும் பிற நிகழ்வுகள் நமக்கு எதிர் வேலையாக செயல்பட்டு நம்முடைய உணர்வுகளை கட்டுப் படுத்துகின்றன. இந்த நிகழ்வுகளின் வேகத்தையும் , கனத்தையும் கணித வடிவில் ்மாற்றுவது எதிர்காலத்தில் நிகழ சாத்தியமே. மனிதன் கற்றுக் கொள்ளுதலை இந்த சூத்திரம் தற்சமயம் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் தனி மனிதன் சார்ந்து இந்த சூத்திரம் சற்று மாறுபடலாம். ஆனால் அடிப்படை மாறாது. குழந்தை பிறக்கையில் அதன் மரபணு பரிசோதிக்கப்பட்டு அதற்கான சூத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்குள் பொருத்தப்படலாம்.

இது நடக்கும் பட்சத்தில் மற்றவரது சூத்திரங்கள் திருடினால் கடவுளை தூக்கி அந்த பக்கம் உட்கார சொல்லி விட்டு குறி சொல்லி பிழைக்கலாம். வருமானம் வ்ரும். நிகழ்வுகளை அளக்க முடிவதால் அதை கட்டுப்படுத்துவதற்கான எதிர் நிகழ்வுகளை சரியாக உருவாக்க முடியும். அரசியலில் தலைவர்கள் உணர்ச்சி வசப்படும் வேளையில் தொண்டர்கள் தலைவரின் உணர்ச்சிகேற்ப துல்லியமாய் எதிர் நிகழ்வுகளை நடத்தி தலைவரை மகிழ்விக்கலாம். தீக்குளிக்க வேண்டிய இடத்தில் கிடைக்கும் கேனையர்களை குளிக்க செய்து தலைவரை மகிழ்விக்க செய்யலாம். தலைவர் பஸ் கொளுத்துவது மட்டும் போதுமென்று நினைக்கையில் வீணாய் எவனையும் கொளுத்திவிட்டு நிவாரணமாய் கட்சி நிதியை கரைக்க வேண்டாம்.

Saturday, September 9, 2006

பள்ளி

இன்று வீட்டின் அருகில் உள்ள விமானங்கள் வைத்திருக்கும் மீயுசியம் போனோம். அத்தை ஆசிரிய பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள். அவருக்கு இது போன்ற ஒரு மீயுசியம் நம்மூரில் இல்லாதது பெருங்குறையாயிருந்தது. அவரது மாணவர்கள் இதையெல்லாம் பார்த்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்களென சொல்லிக் கொண்டே வந்தார்



எனக்கு ஸ்பைடர்மேன் படத்தில் பீட்டர் பார்க்கர் சக மாணவர்களோடு போன டூர் சம்பந்தமேயில்லாமல் நியாபகம் வந்தது. ஏதாவது ஒரு விமானம் கடித்து வைக்க எனக்கும் பறக்கும் சக்தி வந்தாலென ஒரு ஆசை வந்தது.



நான்அத்தையிருந்த பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எல்லாருக்கும் எல்லோரையும் தெரியும் சிறிய ஊர் அது. கூரையும், ஓடும் வேய்ந்த பள்ளி. மழை பெய்தால் விடுமுறை. எட்டாவது வகுப்புக்கு பெஞ்சு உண்டு. அதற்கு முந்திய வகுப்புகளுக்கு தரைதான். ஆனால் குறையாகவே எதுவும் தெரிந்ததில்லை. பேச்சு போட்டி, திருக்குறள் போட்டி, ஆண்டு
விழாவென கலகலப்பாய் இருக்கும்.


அருமையான ஆசிரியர்களால் ஆன பள்ளி அது. பிரியமான மனிதர்கள். இன்னும் நியாபகம் வைத்து விசாரிக்கிறார்கள். எங்கள் பள்ளி மாணவர் ஒருவரை சான்ரமோனில் சந்தித்த போது அவரும் இதையே கூறினார். அவர் எனக்கு சீனியர். இந்த பள்ளிக்கூடம் வரும் முன் வேறு ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த பள்ளிக்கூடம் பெரிய அளவிலான ஒரு ஒட்டு வீட்டிலிருந்தது. திண்ணையில் முதலிரண்டு வகுப்புகள். கீழ் திண்ணையில் முதல் வகுப்பு. மேல் திண்ணையில் இரண்டாம் வகுப்பு. மூன்றாவதுக்கு மேல் வீட்டின் உள்ளே செல்லலாம். வீட்டின் பின்புறம் விளையாட்டு மைதானம். வீட்டின் நடுவே பெரிய முற்றம். முற்றத்தை சுற்றி வகுப்புகள் நடக்குமென நியாபகம்.


அங்கு படிக்கையில் வித்தியாசமான ஆசிரியர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சினிமா ரசிகர் அவர். அவ்வப்போது பள்ளியின் பின்புறமுள்ள மரத்தடிக்கு கூட்டி சென்று ஏதேதோ ஆங்கில பட கதையெல்லாம் சொல்லுவார். கேட்கவே விறு விறுப்பாயிருக்கும்.