Thursday, February 22, 2007

விபத்துகள்


Traffic Accident
Originally uploaded by silas216.

காலையில் அலுவலகம் வரும்போது போக்குவரத்து நெரிசலில் புகுந்து வேகச்சாலையில்(freeway) வருகையில் அமெரிக்கர் ஒருவர் காரின் பின்னால் மோதி விட்டார். அடுத்த நிமிடம் வண்டியை இருவரும் சாலையின் புறம் ஒதுக்கினோம். அவசரமாய் இறங்கியவர் எப்படி இருக்கிறீர்கள். நலமா? வண்டி மோதியதால் தங்களுக்கு எதுவும் பாதிப்புண்டா என்று விசாரித்தார். இருவரும் ஊர்திக்கான காப்புரிமை தகவல்களை பரிமாறிக் கொண்டு காரில் கிளம்பி விட்டோம். ஒரு பத்து நிமிடங்கள் உரையாடல்கள் நடந்திருக்கும். அமெரிக்காவில் விபத்தை காண்பது இது முதல்முறையல்ல. ஆனால் ஓவ்வொரு முறை விபத்து நேர்கையிலும் அதை ்சுற்றி நிகழும் சம்பவங்கள் கிட்டதட்ட இது போலவே இருக்கின்றன. நிற்க.

நான்கு வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த சம்பவம் நியாபகம் வருகின்றது. அப்பா அறுபது வயதை கடந்தவர். அவரிடத்து ஒரு பஜாஜ் நிறுவன ஸ்கூட்டர் அப்போது இருந்தது. கடை கண்ணிக்கு போக உபயோகப்படுத்துவார். பொதுவாக அவர் ஸ்கூட்டர் ஒட்டும் வேகம் 30 கி.மீ தாண்டாது. வரும் போகும் எல்லாவற்றிற்கும் வழி விட்டு ஒட்டும் குணம் உடையவர். ஒரு நாள் காய்கறி கடைக்கு போகையில் அப்பா மேல் ஒரு இருபது வயதை ஒத்த இளைஞன் பைக்கில் வந்து மோதி விட்டார். அப்பா கீழே விழுந்து விட்டார். அந்த இளைஞன் மிக வேகமாக வண்டியில் வந்திருக்கின்றார். அது ஓரு பத்தடி சாலை வண்டி வழுக்கி அப்பா வண்டியின் மீது ்மோதி இருக்கின்றது. கீழே விழந்த இளைஞர் அப்பாவை கோபமாக திட்டியிருக்கிறார். காய்கறி கடைக்காரரும் சுற்றி இருப்பவர்களும் அவசரமாய் ஒடி வந்து இருவரையும் தூக்கி விட்டு அந்த கவனமாய் இல்லாமல் வண்டி ஒட்டியதற்காக இளைஞனை திட்டி இருக்கிறார்கள். அப்பாவின் வண்டி சேதம் அடைந்திருப்பதால் நஷ்ட ஈடு கேட்டும் இருக்கிறார்கள். அப்பா அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். சற்று நேரத்தில் அந்த இளைஞர் ஒரு குழாமோடு (பல வயதினரும் கலந்த) எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவை கண்ட மேனிக்கு திட்டி கலாட்டா செய்திருக்கின்றார். அப்பாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்திருக்கின்றார். மாத சம்பளம்/பென்ஷன் வாங்கும் மத்திய தர வர்க்கம் நிரம்பிய தெருவில் எல்லோருக்கும் பயம். தடித்த வார்த்தைகளும், நிறைய மிரட்டல்களும், அப்பாவின் ஸ்கூட்டருக்கு ஒரு உதையும் விட்டு அந்த இளைஞர் சென்று விட்டார். அப்பாவை தூக்கி விட்ட கடைக்காரருக்கும் இதே சம்பவம் நடந்திருக்கின்றது. காவல்துறைக்கு சென்று புகார் செய்தால் மிரட்டல் அதிகமாகும் ஆகையால் புகார் கொடுக்கவில்லை.

விபத்து எவ்வாறு கையாளப்படுகின்றது மற்றும் விபத்திற்கப்புறம் தவறு செய்தவரின் குணநலன்கள் இவற்றை பார்க்கையில் சமூக நீதி என்றெல்லாம் போராடும்போது சமூக அடிப்படை உணர்வையும் மக்களுக்கு பரப்பவேண்டும் என்று தோன்றுகின்றது.

அந்த இளைஞரை பொறுத்தவரை அவர் செய்ததது அவருக்கு நியாயமாகதான் பட்டிருக்கும். அவர் வண்டி மோதினாலும் அடுத்தவர் ஒன்று சொல்லக் கூடாதென்ற எண்ணமுடன் இருந்தவரை ஒரு சாதாரணக் கடைக்காரர் திட்டக் காரணமானது ஒரு கிழவர் என்பதை அவர் தாங்க இயலவில்லை. ஒரு சப்தம் போட்டேன் அந்த கிழவன் நடுங்கி போய்விட்டான் என்று சவடால் கடைக்காரரிடம் பேசியிருக்கிறார்.

சமூகத்தில் தான் செய்த செயல் தவறு என்ற பார்வையை விட சமூகத்தில் வலிமையை பறைசாற்ற ஒரு இடம் கிடைத்தாக பெருமையோடு இருந்திருக்கிறார். எல்லாருக்கும் சமூகத்ததி்ல் ஒரு பலகீனம் உண்டு. அதை குத்தி அவரை அடக்குவதில் ஆளுமை கொள்வதை விட பலவீனத்தை மதித்து ஆளுமை வளர்ப்பதே உயர்ந்தது. ஆனால் தற்போது விலங்குகளை ஒத்த ஆளுமையே திரைப்படங்களிலும் தெரிகின்றது, சமூகத்திலும் இருக்கின்றது. அதுவே தலைமைபண்பாகவும் காட்டப்படுகின்றது.

தான் வளர்க்கப்பட்ட விதம் , தன்மை, தான் புரிந்து கொண்ட சமூகதன்மைகள் வாயிலாகவே அவ்விளைஞர் தான் தவறிழைத்த போதும் வயதானவரை மிரட்டுதல் வீரம் என்ற கருத்துக்கும், முடிவுக்கும் வந்திருக்க கூடும். சமூகத்திற்கான நீதியை நோக்கி நகருகையில் ஒவ்வொரு சமூக உறுப்பினனும் தன் உரிமையை மதிககும் அதே நேரம் பிறருடையதை மதிக்கும் பண்பினை கற்றிடல் வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் நேரிடையாகவும், மறைமுகமாகவும் அடாவடியான போக்கே இளைய தலைமுறைக்கு போதிக்கப்படுகின்றது. அடிப்படை நாகரிகமும் , ஒழுங்கும் பலகீனமாக கருதப்படுகின்றது.

சமூகநீதி நிறுவும் பகுத்தறிவு வளரும் பொழுதில் அவவிளைஞரின் செயலுக்கும், இன்று அமெரிக்காவில் நான் கண்ட மனிதரின் செயலுக்கும் வித்தியாசம் இருந்திருக்காது. ஆனால் அது நெடுங்கனவு.

பள்ளிகளின் போதனைகளில் அசோகரும், கனிஷகரும் மரம் நட்டதை போதிப்பதை விட்டு விட்டு அடிப்படை நாகரிகம் மற்றும் ஒழுங்கை போதிக்கலாம். நூற்றில் ஒரு பிள்ளையாவது அதை துவக்கத்தில் கற்றுக் கொள்வதால் கடைபிடிக்க முயலலாம்

8 comments:

கதிர் said...

நல்ல பதிவு.

தண்டனைகள் கடுமையாக செய்தாலன்றி இதற்கு வேறு வழியில்லை.

அமெரிக்காவில் இருப்பது போன்ற சட்டதிட்டங்களை இங்கு வைத்தாலும் இதே தவறுகள் நடக்கும்.

Boston Bala said...

சிந்தையைக் கிளறும் பதிவு. பெற்றோரின் வளர்ப்பு முறை, Changing Lanes (2002) என்று சிதறலாய் நிறைய அலைபாய்கிறது :-|

துளசி கோபால் said...

//அடிப்படை நாகரிகம் மற்றும் ஒழுங்கை போதிக்கலாம்.
நூற்றில் ஒரு பிள்ளையாவது அதை துவக்கத்தில்
கற்றுக் கொள்வதால் கடைபிடிக்க முயலலாம்//

இங்கேதான் 'தடி எடுத்தவன் தண்டல்காரன்'ன்னு ஆக்கி வச்சுருக்காங்களே(-:

யாழினி அத்தன் said...

அருமை.

தனி மனித வருமானத்தில் இந்தியா அமெரிக்காவை பன்மடங்கு பின் தங்கியிருக்கும் தருணத்தில், ஏழைகள் பாதுகாப்புரிமை வாங்குவது கொஞ்சம் சிக்கலான விஷயமில்லையா?

நிர்மல் said...

தம்பி,

சமூக உறுப்பினர் தான் தவறு செய்ய நேரும் போது எப்படி அதை சமூகத்தில் எப்படி எதிர் கொள்கிறார் என்பதே கேள்வி.

நடந்தது கொலையோ, கொள்ளையோ அன்று, சிறு விபத்தே. ஆனால் சிறு விபத்து கூட மோசமான முறையிலேயே கையாளப்படுகின்றது. அடாவடியான போக்கே ஆளுமைதனமாக கருதப்படுகின்றது.

பாலா,

நன்றி.

துளசி,

அது மாற வேண்டும் என்பதே அவா.

யாழினி அத்தன்,

வருமானம் இக்தகைய பிரச்சனையில் பெரும் பங்கு வகிக்கும் என்றாலும். அந்த இளைஞரின் குடும்பமோ, எங்களின் குடும்பமோ கிட்டதட்ட ஒரே பொருளாதார சூழ்நிலை உடையதுதான். அவரும் எங்களின் குடியிருப்பை அடுத்து இருப்பவர்தான். அவரது பின்னனி சற்று அரசியல் சார்ந்தமையால் ஆள்படை உண்டு.

இது பொருளாதாரம் தாண்டிய பிரச்சனை. பொது ஒழுக்கம், சமூக நாகரிகம் என்பவை பற்றிய பகுத்தறிவு அற்று போவதால் மிரட்டுவது பற்றிய மேலான சிந்தனைகள் வருகின்றது.

MSV Muthu said...

comஹாய் நிர்மல்,

உங்கள மாட்டிவிட்டுட்டேனே!!! சுடர் ஏத்த வாங்க.

http://kuralvalai.blogspot.com/2007/02/blog-post_22.html

முத்து

பத்மா அர்விந்த் said...

நிர்மல்
சிந்திக்க வைத்த பதிவு. அழகாகவும் எழுதுகிறீர்கள்.

வைசா said...

// இது பொருளாதாரம் தாண்டிய பிரச்சனை. பொது ஒழுக்கம், சமூக நாகரிகம் என்பவை பற்றிய பகுத்தறிவு அற்று போவதால் மிரட்டுவது பற்றிய மேலான சிந்தனைகள் வருகின்றது. //

இது போன்ற சிந்தனைகளை பெரும்பாலான சினிமாக்களும் வளர்த்து வருகின்றன. :-(

வைசா