Friday, February 23, 2007

சுடர்; த்ரிஷா மற்றும் கொஞ்சம் அரசியல்

முத்துவின் சுடர்

1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை?

யார் வேண்டுமானாலும் ஆளலாம். நாட்டின் குடிமகனாய் அரசியலமைப்பின் அங்கீகாரம் செய்யப்பட்ட தகுதிகள் உடையவராய் இருந்தால் சரி. நடிப்பென்பதும் ஒரு தொழில்தானே, அதை காரணம் காட்டி ஏன் ஒருவரது அடிப்படை உரிமையை மறுக்க வேண்டும்?

நகலுக்கும், அசலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் பகுத்தறிவு குடிகளிடத்து வேண்டும். திரைப்படத்தில் ஏழைகளை அணைத்து, கை காசை வாரி இறைத்து ஏழை குடி உயர்த்தும் நடிகன் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரி பணத்தைதான் இலவச போர்வையில் வாரி இறைப்பார் என்ற புரிதல் வேண்டும். அந்த வித்தியாசம் புரியாமல் இருப்பது நடிகர்களின் குறையன்று. சமூதாயத்தின் குறை. ஆட தெரியாமல் மேடை குறை கூறி பயனில்லை.

பகுத்தறிவு இயக்கங்கள் மக்கள் வரிப்பணம் மற்றும் அதன் செலவீடு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்து உண்டாக்குவதில் முன் வரும் போது இந்த குறைகள் களையப்படும். அது வரை தலைவர்களது பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு தற்கால முடிசூடும் மன்னராய்தான் ஆள்பவர்கள் இருப்பார்கள்.

நமது ஊரில் நிலவும் தனி நபர் துதிபாடும் மனப்பான்மையும் இதன் மற்றொரு முகம். தலைவனாக ஒருவனை உருவகப்படுத்திய பின் கால் நகம் நக்கி சுத்தப்படுத்தவும் தொண்டர் தயங்குவதில்லை. தலைமையின் கொள்கைகாக தொண்டர் இன்றி தலைவனுக்காக தொண்டன் ஆகிறான். ஆண்டவன், அரசன் என்று நகர்ந்த இந்த துதி பாடல் இன்று கட்சி தலைமை, திரைப்பட நடிகர் என்று நகர்ந்து நிற்கின்றது. இது மாறும். சற்று காலமெடுக்கும். சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாக சனநாயகம் விரிய இந்த பண்பில் மாற்றம் வரும்.

********************************************************
2. புரியவே புரியாத கவிதைகளை கண்டிப்பாக எழுதித் தானாக வேண்டுமா? இப்பொழுது கதைகள் கூட புரியாத அளவுக்கு எழுதுகிறார்களே, இது தேவைதானா? மேலும் பெண்ணியம் என்ற பெயரிலும் எதார்த்தம் என்ற பெயரிலும் சொல்லவே நா கூசும் அளவுக்கான வார்த்தைகளை உபயோகித்து எழுதுவது அவசியம் தானா?

புரிகின்றது புரியவில்லை புரியவே புரியவில்லை என்ற நிலைகள் இடம், பொருள், நபர் சார்ந்து மாறும். படைப்பாளிக்கு விருப்பத்திற்கு படைக்கும் உரிமை உண்டு. வாசகனுக்கு தேர்ந்தெடுத்து வாசிக்கும் உரிமை உண்டு. எதுவும் திணிக்கப்படுவதில்லை.

சமூகத்தை பார்ப்பவன் தன் மனத்திற்கு பட்டதை எழுதுகின்றான். நாக்கூசும் வார்த்தை நடுவே உலவுகையில் எழுத்தை மட்டும் மாறுவேடம் கட்டி எழுத வேண்டிய அவசியம் எதற்கு? எழுதாததால் அந்த வார்த்தைகள் புலங்கிய இடங்கள் இல்லாமலா போகின்றது? சமூகத்தின் அதிர்வே எழுத்துகளிடையே பரவுகின்றது , சில இடங்களில் காணும் அதிர்வுகள் அந்த நேரத்தில் அதிர்ச்சி தருவதாய் இருக்கின்றது, ஆனால் அதே அதிர்வில் தொடர்ந்திருப்பவர் நிலையை வேறு எவ்வகையில் நாம் உணர முடியும்?

****************************************
3. உண்மையைச் சொல்லுங்கள் திரிஷா அழகு தானே?

இல்லை மிக அழகு.

ஒரு சந்தேகம். திரிஷாவா? த்ரிஷாவா?

**********************************************
4. காவிரிப் பிரச்சனைக்கு என்னதான் வழி? நதிகளை நாட்டுடைமை ஆக்கலாமா?

எல்லாவற்றையும் நடுவன் அரசில் குவிப்பது தேவையற்ற ஒன்று. ஏரிப்பாசனம் உள்ள விவசாய பூமிகளில் தண்ணீர் பிரச்சனை எப்போதும் இருப்பதாக விழுப்புரம் அருகே கிராமத்தை சார்ந்த விவசாய நண்பன் கூறிக் கொண்டிருப்பான்.

கன்னடம் மற்றும் தமிழ் என்ற ஏடுகளை அகற்றி பேசினால் இரு வேறு விவசாய குழுக்களுக்கு நடுவே நீர் பிரித்துக் கொள்வதற்கான பிரச்சனையாக தெரியும். ஏடுகள் ஏற்றி பார்க்கையில் நீர் பிரச்சனை இனப்பிரச்சனையாக தெரிகின்றது. இனப்பிரச்சனையாக இருப்பதால் கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

மாண்டியா ஹாசனில் உள்ளவன் பிழைப்பும் விவசாயந்தான். அவனுக்கும் குடும்பம் , பிள்ளைக்குட்டி உண்டு. காவிரியை குடிநீருக்கு நம்பும் ஊர்கள் அங்கும் உண்டு. தஞ்சை டெல்டாவிலும் இதே கதைதான்.

மழை அளவு, விவசாய நில அளவு, விளைச்சல் போன்ற பல விடயங்களை பல ஆண்டுகள ஆராய்ந்தான் காவிரி பேராயம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அது சரியானதாக எண்ணிதான் இரு மாநில முதல்வர்களும் முதலிலிருந்தே செயல்பட்டு வந்தார்கள். இரு புறமும் அனல் கிளம்பும் குழுக்களால் அவர்கள் தங்கள் துவக்க முடிவிலிருந்து மாற வேண்டியதாயிற்று. பொலிடிக்கல் ரியாலிட்டி நிஜத்திலிருந்து மாறுபட்டே இருக்கின்றது.

பாசன பகுதிகளில் நீர் சேமிப்புக்கு இரு அரசுகளும் மேலும் செயல் படலாம். நீர் விரயம் தவிர்த்தல் இருவருக்கும் முக்கியம்.

************************************
5. உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கினால் -of course you can act independently!- என்ன செய்வீர்கள்?

பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வேன்.;-)

**************************************
அடுத்த சுடரை கல்வெட்டு அவர்களிடத்து கொடுக்க நினைக்கின்றேன்.

1) சாதி, இனம், மொழி , தேசியம் என்ற வளையங்கள் குறித்து தங்கள் கருத்தென்ன?

2) SEZ- -சீனாவை உயர்த்த உதவியது. இந்தியாவிற்கு உதவுமா?

3) கலாச்சாரம் என்பது சமூகத்தின் மீது பூட்டப்படும் விலங்கா? அலலது அணிகலனா?

4) பொழுது போக்கு கொண்டாட்டங்களில் தங்களுக்கு பிடித்தது எது

5) சிங்குரில் ்விளைநிலத்தில் துவங்கும் டாடா கார் தொழிற்சாலை சிங்குரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா?

7 comments:

பொன்ஸ்~~Poorna said...

//நாக்கூசும் வார்த்தை நடுவே உலவுகையில் எழுத்தை மட்டும் மாறுவேடம் கட்டி எழுத வேண்டிய அவசியம் எதற்கு? //
நல்ல பதில்கள் நிர்மல்.. கல்வெட்டுக்கு நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளும் அருமை.. கல்வெட்டின் பதில்களுக்காக காத்திருக்கிறேன்..

MSV Muthu said...

//எழுதாததால் அந்த வார்த்தைகள் புலங்கிய இடங்கள் இல்லாமலா போகின்றது? சமூகத்தின் அதிர்வே எழுத்துகளிடையே பரவுகின்றது , சில இடங்களில் காணும் அதிர்வுகள் அந்த நேரத்தில் அதிர்ச்சி தருவதாய் இருக்கின்றது, ஆனால் அதே அதிர்வில் தொடர்ந்திருப்பவர் நிலையை வேறு எவ்வகையில் நாம் உணர முடியும்?

நச் பதில்கள் நிர்மல். முதலமைச்சர் கேள்வியை நான் மாற்றிக் கேட்டிருக்கவேண்டும். பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு என்ன செய்வீர்கள் என்று. சேரில் உட்காருவேன் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். த்ரீஷா தான். திரிஷா என்று திரித்ததற்கு :) மன்னிக்கவும். :)

கதிர் said...

நல்ல பதில்கள் நிர்மல்!

சிறில் அலெக்ஸ் said...

நல்ல சுடர் கவிதைகள் பற்றிய பதிலில் உங்க ஆழ்ந்த இலக்கிய, சமூக பார்வை தெரியுது.

வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

நிர்மல்,

நல்ல பதில்கள்.... முதற்கேள்வியை ரசித்து படித்தேன்....

Unknown said...

நிர்மல்,
தற்போதுதான் எனது பதிவில் உள்ள உங்களின் சுடர் சம்பந்தமான அழைப்பைப் பார்த்தேன்.

இன்று இரவுக்குள் பதில் சொல்கிறேன்.

நன்றி.

Unknown said...

நிர்மல்,
சுடர் ஏற்றியாகிவிட்டத்து.
நன்றி!!
http://kalvetu.blogspot.com/2007/02/blog-post_27.html