Wednesday, July 18, 2012

தமிழ் திருவிழாவும் , ஆசிரியர் பதிலும் -ii

நான் ஆசிரியராக நினைக்கும் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதமும் , அதற்கு ஆசிரியர் எழுதிய பதிலும்.

இந்த கடிதம் அதன் தொடர்ச்சியும், இறுதியும். இது ஆசிரியரின் கருத்து நிலையை மாற்ற வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு எழுத பட்டது அல்ல. ஒரு மாற்று கருத்து என்ற அளவில் சொல்ல படுகின்றது. உலகம் கருப்பு , வெள்ளை அன்று என்பதும் ஆசிரியர் சொன்னதே.

ஆசிரியருக்கு,


  வணக்கம். தங்கள் பதில் கண்டேன். நன்றி. தமிழின் மசாலா பண்பாடு , மேடை பேச்சு மேல்தான் வளர்ந்தேன். தங்களது  "யூத்"  கட்டுரையில் எழுதப்பட்ட  "யூத்"  என்னும் அளவில்தான் அறிவு முதிர்ச்சி இருந்தது. அந்த தவறுகள் முதலில் உள்ளத்தில் ஒரு போதாமையை கொடுத்தன. நிறைவு இல்லை. அந்த போலித்தமான பூச்சு வேலைகள் கொடுத்த மனச்சோர்வினை தங்களது சங்க சித்திரங்கள், விஷ்ணுபுரம் போன்றவை கடக்க  உதவின. அன்பு மனைவி இந்த புத்தகங்களை அறிமுக படுத்தி  இந்த பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தாள். இந்த வாசிப்பு ஒரு மன நிறைவினை கொடுத்தது. தொடர்ந்து உங்களை வாசித்து வருகின்றேன்.  நான் பழகி வந்த  மசாலா பண்பாட்டினை முடிந்த அளவில் தாண்டவே முயன்று வருகின்றேன்.

   இப்போது இந்திய பண்பாடு , மரபு முதலியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி உண்டு. என் பழம் மரபின் மேல் ஒரு அதிகார அரசியல் படர்ந்து உள்ளது. அதை ஒதுக்கி இலக்கியத்தையும், இசையையும் காணுதல் தற்போதைய முயற்சி. நான் கடிதம் எழுதுவது பெட்னாவினை குறித்த தங்கள் கருத்தினை மாற்றி அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அல்ல.உங்களது கருத்து  உங்களது அனுபவதின் மீது , நம்பிக்கையின் மீது நீங்கள் உருவாக்கியது. நான் சொல்ல விழைவது ஒரு மறுபக்கம் உண்டென்பதினை மட்டுமே.
பெட்னாவில் சினிமா நிகழ்வுகள் இல்லை என சொல்ல மாட்டேன். இருந்தது. அது வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. எனவே அது இருக்கும். ஆனால் கீழ் கண்ட நிகழ்வுகளும் இருந்தன என்பதை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.


http://www.youtube.com/watch?v=vssynAcaLT0 ---- காவிய தலைவிகள் நாட்டியம்


http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk&feature=relmfu-- கண்ணதாசன் பாடலுக்கு நடனம்


http://www.youtube.com/watch?v=lmXGB4YYn4I&feature=related-- நீயூ ஜெர்சி தமிழ் சங்க நடனம்


http://www.youtube.com/watch?v=h1xyhDk1lAA-- சிலம்பாட்டம்


http://www.youtube.com/watch?v=icq_ahXTROk&feature=related- தமிழிசை (இதை நான் தவற விட்டு விட்டேன். இதில் நிறைய குழந்தைகள் பங்கு கொண்டன. நிகழ்ச்சி நிரல் பார்த்து  தெரிந்து கொண்டேன்)


http://www.youtube.com/watch?v=BQGqQ_Lw_HM&feature=related- வீணை இசை (இதை நான் பார்க்க வில்லை )


இன்னும் ஒரு அருமையான நாட்டிய நிகழ்வு இருந்தது. அதை பார்த்தேன். அதன் ஒளி காட்சி கிடைக்கவில்லை. இந்த நாட்டிய நிகழ்வுகள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் உச்ச வெளிப்பாடு அல்ல.
ஒரு தொடக்க நிலை அனுபவங்களே. ஆனால் இவை புலம் பெயர் குழந்தைகளின் வெளிப்பாடு. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க மண்ணில் வேறுபட்ட இடங்களில் வாழும் தமிழ் பிள்ளைகள் தங்களை முன்வைக்க அமைக்க பட்ட தளத்தில் நிகழ்த்தும் வெளிப்பாடு.இங்கு நாம் காண வேண்டுவது மரபு கலை வடிவங்களில் மன மகிழ்வை , கலை வடிவின் நுணுக்கத்தினை அல்ல. தமிழ் நாட்டில் வாழும் பெற்றோருக்கு இல்லாத ஒரு சிரமம் இங்கு புலம் பெயர் தமிழனுக்கு உண்டு. தமிழ் வெளிப்பாட்டு தளங்கள் எங்கள் குழந்தைகளுக்கோ, எங்களுக்கோ எளிதானது கிடையாது. அவர்கள் ஒரு சாதாரண உரையாடலை தமிழில் நிகழ்த்துவது அதிசயமாக உள்ள இடத்தில் மரபு கலை வடிவங்களில் தமிழ் காண விழைவது மிக கடினமான ஒரு காரியம்.


இதை தவிர குழந்தைகளுக்கான தமிழன் தமிழச்சி நிகழ்வு, இலக்கிய வினாடி வினா நன்றாக இருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். அதன் ஒளி காட்சியும் கிடைக்கவில்லை. நான் குடும்பதோடு செல்லவில்லை. என் நோக்கம் எஸ்.ராவோடு நேரதினை செலவிடுவது. நான் பால்ட்டிமோரிலும் தங்கவில்லை. எனவே மூன்று நாட்களும் தினசரி ஒரு வழி 60 மைல் கார் ஓட்டம் , எஸ்.ராவுக்கு அருகில் இருக்க முயற்சிப்பது என நேரம் செலவாகியது.


நான் மிக மதிக்கும் சில குடும்பங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றன . நான் இந்திய இசை  மரபின் தொடர்ச்சியாக மதிக்கும்  , தமிழ் கல்வி செயல்பாட்டில் பெரும் நேரம் செலவிடும் எனக்கு தெரிந்த குடும்பங்கள் தன்முனைப்போடு பங்கு பெற்றன. இங்கு உணவு கூடத்திலும் ,அரங்கிலும் ,அரங்குக்கு வெளியிலும் நான் பலரது உழைப்பையும் கண்டேன். இவர்களது செயல் எனக்கு பிடித்த விதத்தில் , எனக்கு பிடித்த தளங்களில் மட்டும் இருக்க வேண்டுமென நான் கோர இயலாது. ஆனால் எனக்கு விருப்பமான தளங்களிலும் கூட  உண்டு என்பதை கண்டேன். முன்பே சொன்னது போல இது ஒரு மன மகிழ் நிகழ்வு. தமிழ் நாட்டில் உள்ள உங்களுக்கு பெரும் கூட்ட சூழலில் பல தமிழ் குடும்பங்கள் ஒன்றாய் காண வேண்டும் என்பது ஒரு சிறு ஆசை போல இருக்கலாம் , ஆனால் அது புலம் பெயர் சூழலில் கொடுக்கும் மன நெகிழ்வு சொல்ல இயலாது. திரை கடலோடி திரவியம் தேட வந்து எங்கள் அம்மா ,அப்பா ,உடன் பிறப்புகள் விட்டு தள்ளி வாழ்கிறோம். இந்த வாழ்வு எங்கள் தேர்வே,யாரும் கட்டாயாய படுத்தவில்லை. இந்த தேர்வின் காரணமாய்   நிறைய திருமணங்கள் தவறவிட்டிருக்கின்றேன்.  மொட்டை அடித்தல் , காது குத்துதல் போன்ற சிறு நிகழ்வுகள் தவற விட்டிருக்கின்றேன். இங்கு மொத்தமாய் இத்தனை தமிழ் குடும்பங்கள் காண்கையில் கங்கையின் சங்கமதில் நீங்கள் சொன்ன மன நெகிழ்வே உண்டாயிற்று. கங்கையின் அசுத்தமோ. காசியின் நெரிசலோ முக்கியமில்லை. மனம் ஒரு விஸ்வரூப காட்சியை உருவாக்கி தருகின்றது. அது போலவே இங்கிருந்தது.


இங்குள்ள சில அரசியல்,அதன் வாதங்கள் , சினிமா வேகம் எனக்கு உடன்பாடில்லாமல்  இருக்கலாம் .ஆனால் அவை மட்டுமே அங்கே இல்லை.பிறவும் இருந்தன.  ஆனால் அவை இல்லாத ஒரு தமிழ் இடத்தினை தேடி காணுதல் புலம் பெயர் சூழலில் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. நிச்சயம் என் பெண் இழிவாக காணாத ஒரு தகப்பனாக இருப்பேன் என நம்புகின்றேன். நீங்கள் எனது ஆசிரியர், உங்கள் வார்தைகள்   சரஸ்வதி வடிவம். இது போல என்னை குறித்து சொல்லும் பொழுது சிறிது உறுத்துகின்றது .


ஏதோ ஒரு வகை அரசியலும் , அரசியல்பால் உண்டாகும் குறைபாடுகளும் எல்லா இடங்களிலும் உண்டு. எல்லா மக்கள் திருவிழாவிலும் உண்டு. வேறு வேறு வடிவங்களில், ஆனால் அதை காட்டி திருவிழாக்களை நிராகரிக்க வேண்டுமா?


அன்புடன்
நிர்மல்

No comments: