Monday, May 7, 2007

மேய்ச்சல்-8

அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதை மேம்படுத்த முயல்வது மக்களாட்சியின் முக்கிய அம்சமாகும். அரசியலமைப்பு என்பது நிர்வாக ரீதியாக குடிகளை காப்பாதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி குடிகளை விட பெரிதாவது கிடையாது. அதனை அடிப்போம், நொறுக்குவோம் என கூறுதல் விடலை பருவத்தில் அப்பா அம்மாவின் விதிகளை மீறுகின்றோம் என பெருமை பேசிக் கொண்டு வெண் சுருட்டு ஊதி உடம்பை கெடுத்துக் கொள்ளுவதுதான்.

அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர். அவர் இதுதான் கடைசி என்றெல்லாம் கெடுவெல்லாம் சொல்லி போகவில்லை. அவர் மாதிரி அரசியலமைப்பை பற்றி பேசும் போது கூறியது இது

"Constitutional morality is not a natural sentiment. It has to be cultivated. We must realise that our people have yet to learn it. Democracy in India is only a top-dressing on an Indian soil, which is essentially undemocratic."( நன்றி; ஆசியன் ஏஜ்


அரசியலமைப்பை சார்ந்த முதிர்ச்சியான அணுகுமுறை டீக்கடையில் கேட்டவுடன் டீ ஆற்றி தருவது போல் உடனடியாக வருவது கிடையாது. வளர்க்கப்பட வேண்டிய குணமே. எதிர்கால தலைமுறைகள் பாடப்புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமில்லாது அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தவும் போதிக்க வேண்டும்.

தனிதனியே சிந்திக்க தெரிந்து கூட்டமாய் வாழும் சமூகத்தை உருவாக்குவதை விட ஒரே பொருள் சிந்திக்கும் மூளை சலவை செய்யப்பட்ட கூட்டம் உருவாக்குதல் எளிது. அதற்கு ஒன்றுபட்ட சமூதாயம் என மேல் பூச்சும் பூசிவிடலாம். வீணாய் பன்முனை சமுதாயம் சேர்ந்திருந்து கண்பட்டு போனால் என்ன செய்வது.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பார்த்தால் தீர விசாரிப்பவன் சொல்வது பொய்யாகிறது. என்கவுண்டர் எனும் காவல்துறை கொலைகள் நாடெங்கும் உண்டு. எண்கவுண்டர் ஒரு கதாநாயக தன்மை கொண்ட குணமாகவே கருதப்படுகின்றது. அரசியலமைப்பை சுண்ணாம்பாய் வெற்றிலையில் மடித்து தின்ன இது போன்ற மனநிலை உதவும். சட்டம் சார்ந்த நியாயங்களின் மீது சாமான்யனுக்கு எப்படி நம்பிக்கை வரும், பயந்தான் வரும். அரசியலமைப்பும் அதை சார்ந்த நிர்வாகமும் சாமான்யனுக்கானதாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிக வலிமை உடையவர் மேலோர் என்ற பாசிச தத்துவமே வளரும்.

மதுரைக்கும், சென்னைக்குமான பங்காளி சண்டையில் களப்பலி இரண்டு (கோபி மற்றும் வினோத்) (தகவல் உதவி:தினகரன்). குடும்பத்தின் மேலாளர் ஏதாவது சிக்கன் குனியா இல்லவே இல்லை என சத்திய முழக்கம் செய்தது போல் ஏதேனும் ஒரு முழக்கம் செய்து விட்டு பொன் விழா, ஒராண்டு விழா, மூவாண்டு விழா என ஏதாவது ஒரு் விழா கொண்டாட போய்விடுவார். தொலைக்காட்சிக்கும் அதில்தான் டிஆர்பி ரேட்டிங் அதிகமாகும். சண்டை காட்சிகள் இரண்டரை நிமிடந்தான் இன்பம். அடுத்து அலுப்பாகிவிடும். பெட்ரோல் குண்டுகள் வீசி பத்திரிக்கை அலுவலகத்தில் தாக்குதலாம். இது போன்ற தகவல்கள் அச்சமூட்டுகின்றது. காவல்துறை பல்குத்தி கொண்டு இருந்தது போல. பல் இடுக்குகள் சுத்தமாயிற்றா இல்லையா என முதல் தகவலறிக்கையில் தெரிந்ததா இல்லையா?

5 comments:

Boston Bala said...

Remotely related... Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu's Law Enforcement - Kalki Editorial

Voice on Wings said...

பண்ணை மன நிலை???

நிர்மல் said...

வோர்ட் பிரஸில் எழுத உத்தேசித்துள்ளதால், ப்ளாகரில் எடுத்து விட்டேன்

நிர்மல் said...

வோர்ட்பிரஸ் பதிவுக்கு இங்கு செல்லவும்
நன்றி

சிறில் அலெக்ஸ் said...

எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.

http://theyn.blogspot.com/2007/06/7-9.html