Monday, September 18, 2006

கிட்டதட்ட ஒரு காதல் கதை vol 2

vol 1இங்கு

அந்த நேரத்தில் அவனை பார்த்த சொப்ன ப்ரியாவுக்கு இது ஏன் இங்கு இருக்கிறதென்ற மனநிலை இருந்தது. சண்முகத்திற்கு படைவீடு அம்மனிடம் சொப்னாவை காட்டு என்று புலம்பி வேண்டிக் கொண்டது நடந்து விட்டதால் ஆடு வெட்டி பொங்கல் வைத்து தான் சாப்பிடுவதாய் முடிவு செய்தான்.

சண்முகம் இது போல் பல வேண்டுதல்கள் வைத்துள்ளான். எல்லாவற்றையும் நிறைவேற்றினால் ஆடு இனமே உலகில் அழிந்து விடும் அபாயமும் உண்டு. அம்மன் அது தெரியாமல் பாவம்.

"ஹாய் "- சண்முகம். அசடு எல்லாப்புறமும் சுடராய் அவன் முகத்தில் இருந்ததது. அவன் கண்ணாடியில் இந்த மாதிரி முகம் பார்த்தால் ரொமான்டிக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வான்.

"ஹாய்"-சொப்னபிரியா. எரிச்சல் குத்துவிளக்கு போல் முகத்தில் துலங்கியது. உடம்பின் மேலே எதுவும் பூச்சி உட்கார்ந்தால் அதை விரட்டும் போது இப்படிதான் அவள் முகமிருக்கும்.

சண்முகத்துக்கு குத்துவிளக்கு வெளிச்சமெல்லாம் பத்தாது. அவனுக்கு ஹோலாஜனாக இருந்தாலே ஒரு மாதிரி மங்கலாக புரிந்து கொள்வான். அவனுக்கு அவள் திரும்ப பேசியதே பத்து நாள் புரோக்ராம் பூச்சியை(bug) ஒரு நிமிடத்தில் தீர்த்த சந்தோஷம் கொடுத்தது.

"தூக்கம் வரலிங்களா?"-சண்முகம்

"இல்லிங்களே. கொஞ்சமா சாப்பிட்டது சேரலை. அசிடிட்டி ஆயிடுச்சு. அதான் சீரியல். நீங்க என்ன இப்படி?"-சொப்னாபிரியா

சண்முகத்தால் சினிமேக்ஸ் குடும்ப படத்தை பற்றி சொல்ல முடியாமல் நாக்கு தட்டியது. கொஞ்சமாய் முழித்து அப்புறமாய் வீட்டிலிருந்த காதலுக்கு மரியாதை டிவிடியை சொல்லாம் என முடிவு செய்தான்

"பழைய தமிழ் படமொன்னு இருக்குது. வேட்டரையனோடது. இளையராஜா மியுசிக். பாட்டை மட்டும ஒட்டி பாக்கலாமுனு வந்தேன்"-சண்முகம்

அப்படியா என அவள் கேட்க இளையராஜாவின் இசை பற்றி இவனுக்கு தெரிந்த எல்லாவற்றையும் அள்ளி இரைத்தான். அவளும் ஆர்வம் காட்ட பேச்சு வளர்ந்தது. விஜய் சாலினியை சின்சியராய் லப் செய்து பாட இரண்டு பேரும் உருகி உருகி கேட்டார்கள். பேச்சு அப்படியே அஜித் சாலினியில் ஆரம்பித்து சூர்யா ஜோதிகா காதல் வரை வந்ததது. குமுதம் ,விகடன், தமிழ் சினிமா டாட் காம் படிப்பதால் குறைவற்ற அறிவு இவனுக்கு இருந்தது. அவளும் மற தமிழச்சியாய் சினிமாவை பிரித்து மேய்ந்தாள்.

ஒத்த அலை வரிசை கண்டு இவனுக்கு மகிழ்ச்சியாயிற்று. மேய்ச்சல் முடிகையில் விடிந்து விட்டது. இந்த மாச கோட்டா இரண்டாயிரம் டாலர் கரைக்க வேட்டரையன் எழுந்து விடிகாலை நான்கு மணிக்கு தொலை பேசி தேடிய போது இவர்கள் தமிழ் சினியமுதம் பருகி கலைந்திருந்தார்கள்.

வேட்டரையன் விழிப்பால் இவர்கள் தூங்கப் போனார்கள். அவள் ஹஸ்கி வாய்சில் குட்நைட் சொல்ல இவனுக்கு நிலவில் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல் நடந்து போய் படுக்கையில் படுத்த போது எதேதோ எண்ணங்கள் வந்து பாட்டு ஹம்மிங்காய் உடன் நின்றது.

மறுநாள் எட்டு மணிக்கு எழுந்த போது சொப்ன பிரியாவின் அறை வாசலில் காப்பி சண்முகத்தோடு காத்துக் கொண்டிருந்தது. மடி கணிணியோடு அலையும் மென்பொருளாளன் போல் காலையில் அவள் குளிக்க செல்லும் முன் அயர்ன் ஸ்டேண்டோடு அவள் பின்னே அலைந்து அவள் துணியை பிடுங்கி அவள் வேண்டாம் வேண்டாமென சொல்லியும் தேய்த்து கொடுத்தான்.

யுனிவர்சல் ஸ்டுடியோவில் பகலெலாம் கழிந்தது. அவளுக்கும் இவனுக்கும் நான்கு முதல் ஐந்து இன்ச் இடைவெளியியே இருக்க படாது பாடு பட்டான். இவள் இல்லாமல் நானில்லை என பாட்டு ஹம்மிங் செய்ய அவள் திரும்பி சிரித்தாள். இவனுடைய மொத்த நாளும் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டது. உலகத்தின் ஆடுகளில் மிச்சமிருக்கும் இன்னோன்றும் படை வீடு அம்மனுக்கு நேர்ந்து விடப் பட்டது

அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் வேட்டரையன் தொலை பேசியோடு பெங்களுர் இருக்கும் திசை நோக்கி பிரார்த்திக்க செல்ல இவனும் இவளும் தனியே விடப்பட்டார்கள்.

நேற்றைக்கு சினிமா மேயப்பட்டதால் இன்று பாலகுமாரனும், சுஜாதாவும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆங்காங்கே ஊறுகாய் போல் பாக்கெட் சைஸ் நாவல் எழுதிய எழுத்தாளர்களும். அசதியாய் இருந்ததால் கொஞ்ச நேரத்தில் சொப்னப்பிரியா தூங்கி விட பேகன் மயிலுக்கு போர்வை போர்த்தியது போல் அவளுக்கு கம்போர்ட்டர் போர்த்தி விட்டு தூங்க போனான்.

போன இடத்தில் பெங்களுர் கிளியிடம் பேசி முடித்து விட்டு மாடு மெல்வது போல் பேசியதை மென்று கொண்டு வேட்டரையன் இருந்தான்.

"என்னடா பேசி தள்ளிட்டியா?"- சண்முகம்

"மச்சி சொன்னாலாம் புரியாது. வந்தாதான்டா தெரியும் இந்த சீக்கு. "-வேட்டரையன்

"எனக்கும் புரிய ஆரம்பிச்சி இருக்குடா. சொப்னாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. செம்புல பெயல் நீர் போல எங்கள் நெஞ்சமும் கலக்க ஆரம்பிச்சு இருக்குனு நினைக்கிறேன்"- சண்முகம்

"அப்படி போடு. அதான் காலைல இருந்து அதிதி உபச்சாரமா? சொப்னா ரொம்ப நல்ல பொண்ணுடா. பிரிலியண்ட். எல்லா சப்ஜக்ட்டும் தெரியும். இந்த வயசிலியே சைட் இன்சார்ஜ் அவ. எவ்வளவு கஷ்ட படுற குடும்பம் தெரியுமா அவளுது. செருப்பு தைச்சிதான் அவங்கப்பா பொண்ணை படிக்க வைச்சாரு. இவ வேலைக்கு போய்தான் குடும்பத்தை தூக்கி நிறுத்தினா" - வேட்டரையன்

அத்தோடு சண்முகம் பேச்சை நிறுத்தி தூங்க போய்விட்டான். காலையில் வேட்டரையனும், கம்போர்ட்டர் கொடுக்கப்பட்ட மயிலும் எழுந்து குளித்து முழுகி டிஸ்ணி லேண்ட் கிளம்பிய போது பேகனான சண்முகம் படுக்கையை விட்டு எழவில்லை. கேட்டால் தலைவலி பிளப்பதாய் சொல்லி விட்டான். அதற்கப்புறம் இரவு அவள் ஊருக்கு கிளம்பும் போது அலுவலக வேலையென கிளம்பி போய் இன்டர்நெட்டில் வழக்கம் போல் தமிழ் மேட்ரிமோனியலில் முழுகி விட்டான். அதுதான் அவனுக்கு வசதியாய் இருந்தது.

(முற்றும்)

1 comment:

Unknown said...

romba arumaiyaana kadhai, kadhaiyin ottathil hasya unarvu odinaalum, iruthiyil azhutham. Matra sirukathaigalum nalla irunthathu.