Tuesday, September 26, 2006

குறை

மருந்து வாடையடிக்கும் நீரருந்தி
ஏதேதோ வியாதி வாங்கி
என் வீட்டு பிள்ளைகள்
தனக்கும் சாக்கடைக்கும்
பிரிவினை பேசாமல் எங்கள் தெரு
வேலை செய்ய ஆசையுண்டு
களத்து வேலையோ கட்டட வேலையோ
கூலி கிடைத்தால் வயிறு நிறையும்

விளங்கினப் பயல்கள் ரண்டு பேர்
பஞ்சம் தீர்ப்பதாய் வந்தார்கள்
ஒருவன்
பாரம்பரிய பூமியிது
நாமெல்லாம் சகோதரர்கள்
வந்தே மாதரம் சொல்லு
வண்ண வண்ண மிட்டாயுண்டு
மனம் நிறையும் மயிர் சிலிர்க்குமென்றான்
மற்றொருவன்
கசங்காத வேட்டி சட்டையோடு
ஏழைப் பங்காளன் தானேன சொல்லி
மொழி பேசி இனம் பேசி
திரைப்படங்கள் சில அலசி
சாக்கடையோடு தெரு முடியுமிடத்தில்
கட்சிக் கொடியேற்றி
வாழ்கவென வாழ்கவென கூவு
மனம் நிறையும் மயிர் சிலிர்க்குமென்றான்

எங்களுக்கு மயிர் சிலிர்க்காதது
மட்டுந்தான் இவன்களுக்கு
குறையாய் தெரிகிறதாக்கும்

No comments: