Saturday, September 30, 2006

ஆசை

விடுதலை கடவுள் பக்தன். வீரனை கும்பிடாமல் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டான். அவனது அப்பா தமிழக அரசியலில் ரொம்ப ஈடுபாடுள்ளவர். அவனது சேரியில் கழகங்களின் கொடி என்றைக்கு ஏறினாலும் அவர்தான் முன்னே நிற்பார். சொந்த காசை செலவு செய்து கட்சி வேலைக்கு காய்ந்ததால், இன்றைக்கு அடுத்த வேளை உலை வைக்க கட்சி ஆபிஸ் வாசலில்தான் நிற்க வேண்டிய வாழ்க்கை.

விடுதலைக்கு அப்பாவை ஒரு பிழைக்க தெரியாத மனிதராய்தான் தெரியும். இன்னமும் மேடைப் பேச்சு, கைத்தட்டலுக்கான ஏங்கல், கட்சி பெருந்தலைகள் வருகையில் கார் கதவை பிடித்து அவர்களது முதுகு தட்டலுக்கு காத்திருப்பு என இவர் இன்னமும் வாழ்க்கையை புரிந்து கொள்ளாமலே இருக்கிறார் என வருத்தம் உண்டு.

அவன் இருபதொன்றாம் நூற்றாண்டின் ஒரே நிதர்சனமாய் கண்டது பணத்தை மட்டுந்தான். அவனை பொருத்தவரை அது மட்டுமே ஒருவனது தலை எழுத்தை திருப்பி போடும் ஆற்றலுடையதாய் இருந்தது. அதில் மட்டுமே யாரும் தீட்டு பார்ப்பதில்லை,சேரியிலும், அக்ரகாரத்திலும், ஆண்டைகளின் வீட்டிலும் ஒரே மதிப்பு உள்ளது என்பது அவனது கணிப்பு. இன்றைக்கு சாதி பார்த்து வீட்டு திண்ணையில் மழைக்கு ஒதுங்க விட மறுப்போறும், காசு வரும் போது முகம் முழுதும் சிரிப்பை கொண்டு வந்து கூழை கும்பிடு போட மறப்பதில்லை என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

அது ஒரு தேர்தல் நேரம். விடுதலையின் அப்பா ஏறாத மேடை இல்லை. பேசாத பேச்சு இல்லை. குடும்பத்திற்கும் நல்ல வருமானம். விடுதலை அவன் தந்தையுடன் எல்லா இடத்திற்கும் போவான். அதிகம் அவர் குடிக்காமல் பார்த்துக் கொள்வது அவன் வேலை.

உள்ளூர் புளியமரத்தடி கூட்டம் பரபரப்பாய் போய்க் கொண்டிருந்தது. தலைவர் வழக்கம் போல் நான்கு மணி நேரம் தாமதமாய் பத்து அம்பாசிடர் கார்களில் ரத கஜ துரகபதாதிகள் சகிதமாய் வருவதால் அது வரை விடுதலையின் அப்பா வாய் வலிக்க பேசிக் கொண்டிருந்தார். எதிர்கட்சிகாரர்களின் குடும்பம் அவர் வாயில் அவலாய் மெல்லப் பட்டுக் கொண்டிருந்தது. போகும் போது அவர் சாராயமும் கொஞ்சம் போட்டு விட்டுதான் போனார். வர வர ரொம்ப நேரம் அவரால் நிற்க முடிவதில்லை. மூட்டு வலி அதிகமாய் இருந்தது. மருத்துவர் பரிசோதித்து விட்டு வாய்க்கு வராத வியாதியை சொல்லி இவர்கள் ஆண்டு வருமானத்தை ஒரு மாத மாத்திரையாய் சொல்லி விட்டார். இவர்கள் மாத்திரையெல்லாம் வாங்கவில்லை,மூட்டு வலி மறக்க சாராயம் ஒன்றே அவருக்கு மருந்தாய் இருந்தது.

அந்த கூட்டத்தில் வைத்தீஸ்வரனையும் பார்த்தான். வைத்தீஸ்வரன் தேசிய கட்சியை சேர்ந்தவர். பணம் அதிகம் புரளும் கட்சி அது. ஆனால் அவர் என்ன அணியிலிருக்கிறார் என விடுதலைக்கு நியாபகம் இல்லை. அணியை பொறுத்து பண புழக்கம் ஏற்ற இறக்கமாயிருக்கும். சமீப காலமாய் விடுதலையின் தந்தையின் கட்சியோடு கூட்டணி வைக்க முயற்சியில் இருக்கிறார்.

"விடுதலை எப்படியிருக்க? அப்பாவுக்கு மூட்டு வலிலாம் எப்படி இருக்கு? "-வைத்தீஸ்வரன்

"என்னத்த சொல்ல சார்? இதெல்லாம் காசுள்ளவனுக்கு வந்திருக்கனும். எங்க குடும்பத்துக்கு வந்திடுச்சு. இந்த எலக்சன் வந்ததுல கொஞ்சம் இசியா இருக்கு, அப்பாவுக்கு வருமானம் அதிகமாயிருக்கு. எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்களேன். உங்களுக்குதான் ரயில்வே காண்ட்ராக்ட்ர்ஸ் எல்லாம் பழக்கமாச்சே. நானும் பார்மாலிட்டிஸ் எல்லாம் உங்களுக்கு செஞ்சிடறேன்"-விடுதலை

"ஆமாண்டா.வேலைக்கு மட்டும் என் தயவு வேணும். கட்சி மட்டும் அங்கேயா? உங்கப்பாவை எங்க பக்கம் கொண்டு வா. இல்லாட்டி உங்க சேரில இருந்து ஒரு நூறு ஆளை கூட்டி வந்து நீ எங்க கட்சிக்கு வந்திடு. நானும் சேரில ஒரு கொடியை எங்க தலைவரை வைச்சி ஏத்திடறேன். அப்புறம் உன் வேலைக்கும் ஏற்பாடு பண்ணிடறேன். பார்மாலிட்டிஸ்ல கொஞ்சம் தள்ளுபடி வேற தர்ரேன். நீதான் முடிவு பண்ணனும்"- வைத்தீஸ்வரன்

"சார் எங்க சேரி ஆளுங்களை ஒரு காலத்தில உங்க தெருவுக்கே விட மாட்டிங்க. இன்னைக்கு நூறு ஆளுங்களோட வா அழைப்பு கொடுக்கறிங்க. சனநாயகத்தோட ஒரே நல்லது இதான். ஆளா கண்ணுக்கு தெரியலேனாலும் ஒட்டாவாச்சும் உங்கள் கண்ணுக்கு படுவோம். அப்பாட்ட சொல்லி பாக்கறேன் சார். உடம்பு நல்லா இருந்த வரைக்கும் இது மாதிரியெல்லாம் சொன்னா குதிப்பாரு. இப்போதான் சுத்தமா எதுவும் முடியலியே. சொல்லி பாக்கறேன். எனக்காக சரினு சொல்லுவாருனு நினைக்கிறேன்"-விடுதலை

"நல்லா உரைக்கிற மாதிரி அவர் கிட்ட சொல்லு. நீங்களாம் சுத்த பத்தமா இருந்தா நாங்க ஏண்டா சேர்த்துக்காம இருக்கப் போறோம். சாக்கடையும் சகதியுமால இருக்கிங்க? "- வைத்தீஸ்வரன்

"எங்களுக்கு மட்டும் இப்படி இருக்க ஆசையா சார்? சுதந்திரம் ஆகி ஐம்பது வருஷத்தில தெக்கால போற சாக்கடை வடக்காலையும் நகர்ந்திருக்கு அவ்வளவுதான். மத்தபடி ஒன்னும் கிடையாது. கவர்மெண்ட்லாம் உங்களுக்குதான் சார். எங்களுக்கு நாங்கதான். கவர்மென்ட் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதோட சாறு எல்லாம் மேல உள்ளவங்க எடுத்திக்கிட்டு எங்களுக்கு சக்கைதான் வருது. ஆனா இப்ப விவரம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கு, ரிஷர்வேஸன்ல படிச்சிட்டு டவுனுக்கு கொஞ்ச குடும்பம் பிழைப்பு தேடி போய் இப்போ கொஞ்சம் தலை எடுத்திருக்காங்க. இத பத்தி பேசி என்னா சார் ஆக போகுது. வேலையை மறந்திடாதிங்க"-விடுதலை

"சரி சரி நான் போய் உங்க கட்சி தலைவரை பாத்திட்டு வர்ரேன். நீ நாளை மறுநாள் கட்சி ஆபிஸூக்கு வா"-வைத்தீஸ்வரன்

அவர் போவதை பார்த்துக் கொண்டே இருந்தான்.மனதுக்குள் சிரித்துக் கொண்டான். சாக்கடை சகதி இல்லையென்றால் இவர் சேரிக்கு வந்து வீட்டில் விருந்தா சாப்பிட போகிறார், வேறு ஏதாவது காரணம் சொல்லுவார் என்று நினைத்துக் கொண்டான். காரியம் ஆக வேண்டுமானால் இதை எல்லாம் பார்த்தால் ஆகாது. அப்பா கட்சி மாவட்ட செயலாளரை நான்கு வருடமாய் வேலைக்கு கேட்டு அரித்ததில், அவர் அவருக்கு வேண்டப்பட்ட பெண் வீட்டில் இவனுக்கு ட்ரைவராக வேலை வாங்கி தந்ததுதான் மிச்சம். சம்பளமும்,பேட்டாவும் வயிறுக்கு பத்தவில்லை. வேறு வேலை தேடிக் கொண்டுள்ளான்

விடுதலையின் அப்பா இன்னமும் பிரச்சார பீரங்கியா முழங்கி கொண்டிருந்தார். இவனுக்கு அவரை பார்த்து சலிப்பாக இருந்தது. வெறும் அலங்காரமான பேச்சு, கூட்டத்திற்கு நல்ல தீனியாய் இருந்தது. புளிய மரத்தடி பெட்டிக் கடைக்கு வந்தான்.

அப்பாவின் கட்சி வட்ட செயலாளர் ஈஸ்வரபக்தன் பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாய் கிடையாது என்று சொல்லிக் கொள்வார். ஈஸ்வரபக்தன் என்ற பெயரையும் நியுமராலஜி பார்த்து மாற்றாமல் உள்ளார்.
ஆனால் யாரும் கேட்டால் அம்மா, அப்பா வைத்த பெயர் அதனால் மாற்றவில்லை என்று கூறிவிடுவார். ஆனால் ஊரில் வேறு யாராவது அம்மா, அப்பா தங்கள் குழந்தைக்கு ஆண்டவன் பெயர் வைத்தால் அதை மாற்ற சொல்லி மறக்காமல் அறிவுரை சொல்லுவார்.

"வணக்கம் சார்"- விடுதலை

"என்னடா. என்ன வேணும். அப்பா பேசறதை பார்த்து கத்துக்கோ. நீயும் நாளைக்கு கட்சி பேச்சாளராய் ஆகிடலாம். நம்ப இன பெருமையை பேச நிறைய ஆள் வேணும்டா"- ஈஸ்வரபக்தன்

"கட்சியெல்லாம் வேண்டாம் சார். வெளில தான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். "-விடுதலை

"என்னடா இப்படி பேசற. என்ன வேலை உனக்கு வெளில கிடைக்கும். வேலையாம் வேலை. நீ ஒரு வேளை சோறு சாப்பிடறேனா அது கட்சி போடற சோறுடா. நம்ப இனம் போடற சோறு. அதோட கனலாய் நீ வரனும். தீயா பேச கற்றுக் கொள்ளனும். அப்பாவை பாருடா. அது சரி வைத்தி கிட்ட என்ன பேசிகிட்டு இருந்த? "-ஈஸ்வர பக்தன்

அவரிடம் எதிர்த்து பேச அவனுக்கு பயமாய் இருந்தது. மீட்டிங் முடிஞ்சதும் அவரிடந்தான் காசு வாங்க வேண்டும்.

"சும்மாதான் சார். அப்பாவோட மூட்டு வலி பற்றி விசாரிச்சார். அவ்வளவுதான்"-விடுதலை

"பாத்துடா. அவன் கிட்டே எல்லாம் பேசாதே. இன்றைக்கு நம்ப இனம் சாதி சாதியா பிரிஞ்சி இருக்குனா அதுக்கு அவன்தாண்டா காரணம். கவனமா இருக்கனும் சரியா?"- ஈஸ்வரபக்தன்

விடுதலைக்கு பல சிந்தனைகள் ஒடின.சாதியை அவன் கொண்டு வந்தா என்ன, எவன் கொண்டு வந்தா என்ன இவரும்தானே அதை வச்சி பொழைப்பு நடத்திகிட்டு இருக்காரு. இவர் வீட்ல பொண்ணு கேட்டா சேரி ஆள் கழூத்தைதானே வெட்டுவாரு. பொண்ணை கூட விடலாம், ஊர் தேர் வடம் கூட சேரி ஆள் தொட முடியாது. சேரி பொணத்துக்கு கூட தனி காடுதான். இந்த இனப்பேச்செல்லாம் வாய் பந்தல்தான். ஆனா பந்தல் போடறதில்ல இவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. இவர் வைத்தீஸ்வரனுக்கு மண்டகபடி போட்டே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கார். இவரும்,வைத்தீஸ்வரனும் ஆடும் கூத்து ஒன்றுதான்,வேறு வேறு முகமூடி போட்டுகிட்டு பிழைப்பு போகிறது.

"ஐயா சொன்னா சரிதான்"- விடுதலை. ஒரு வரியில் முடித்துக் கொண்டான்.

மெல்ல கடையை தாண்டி முட்டு சந்துக்குள் வந்தான். தூரத்தில் அப்பாவின் பேச்சும் கேட்டது. அது பழசாக,அழுக்காக இருந்தது. இவர்கள் வீட்டின் நிலையையும், சேரியின் நிலையையும் நினைத்தான். அதுவும் பழசாக, அழுக்காகதான் இருந்தது. இவனுக்கு வேலைக்கு போயே தீர வேண்டுமென்ற ஆசை இன்னும் அதிகமானது.வீரனிடம் வேண்டிக் கொண்டான் .

No comments: