அவர் சொன்னது
சொந்தமாய் சிந்தி
சுயபுத்தியுடன் இரு
அடிமையாகாதே
அடிமையாக்காதே என்று
அடிமையானோம்
அவர் பேச்சுக்கு
அவர் சிந்தனையை
வெறும் பேச்சாய்
திரித்ததில் இருந்து
கருத்து நிலையில்
கனலாய் இல்லாமல்
வெற்று உணர்ச்சிகளில்
வேக ஆரம்பித்தோம்
அவர் விட்ட இடத்தின்
கோடுகளை பற்றி
தொங்கி கொண்டு
அடுத்த இரண்டடிக்கு
துப்பில்லாமல் நாங்கள்
மினுமினுக்கும் வெள்ளைவேட்டி
வானுயர அட்டை பலகையோடு
கவைக்குதவா பேச்சு எடுத்து
கஞ்சிக்கு காய்ந்தவனிடம்
பேசுகையில் இடையிடையே
எடுத்துவிட அவரையும்
எடுத்து வைத்தோம்
எங்கள் சிலரின்
சட்டைப்பையில் மேற்கோளாய்
ஆராயும் அறிவின்
முதல் நிலையாய்
சிலை வைத்தோம்
பக்தி கொண்டோம்
பரவசமானோம் துதிப்பாடும்
கோஷங்கள் எழுப்பினோம்
இதை எவனும்
ஏனேன்று கேள்வி
கேட்டால் கல்லாலும்
சொல்லாலும் அடித்தோம்
கேள்வி கேட்டால்
வளர்ந்திடுமா பகுத்தறிவு
அவர் ஆவி இறங்கி
சன்னதம் சொல்லவும்
மொட்டைகள் அடிப்பதுமே பாக்கி
அப்பனும் அம்மையும்
ஆக்கிய பெயரழைத்தலில்
கிழிந்திடும் சுயமரியாதை
இது எங்கள் கண்டுபிடிப்பு
ஆகவே கொடுத்தோம்
அவருக்குமொரு பட்டப்பெயர்
மற்றபடி எப்போதும போல
வாழ்க பகுத்தறிவு
வளர்க நாங்கள்
No comments:
Post a Comment