Saturday, September 9, 2006

பள்ளி

இன்று வீட்டின் அருகில் உள்ள விமானங்கள் வைத்திருக்கும் மீயுசியம் போனோம். அத்தை ஆசிரிய பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள். அவருக்கு இது போன்ற ஒரு மீயுசியம் நம்மூரில் இல்லாதது பெருங்குறையாயிருந்தது. அவரது மாணவர்கள் இதையெல்லாம் பார்த்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்களென சொல்லிக் கொண்டே வந்தார்



எனக்கு ஸ்பைடர்மேன் படத்தில் பீட்டர் பார்க்கர் சக மாணவர்களோடு போன டூர் சம்பந்தமேயில்லாமல் நியாபகம் வந்தது. ஏதாவது ஒரு விமானம் கடித்து வைக்க எனக்கும் பறக்கும் சக்தி வந்தாலென ஒரு ஆசை வந்தது.



நான்அத்தையிருந்த பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எல்லாருக்கும் எல்லோரையும் தெரியும் சிறிய ஊர் அது. கூரையும், ஓடும் வேய்ந்த பள்ளி. மழை பெய்தால் விடுமுறை. எட்டாவது வகுப்புக்கு பெஞ்சு உண்டு. அதற்கு முந்திய வகுப்புகளுக்கு தரைதான். ஆனால் குறையாகவே எதுவும் தெரிந்ததில்லை. பேச்சு போட்டி, திருக்குறள் போட்டி, ஆண்டு
விழாவென கலகலப்பாய் இருக்கும்.


அருமையான ஆசிரியர்களால் ஆன பள்ளி அது. பிரியமான மனிதர்கள். இன்னும் நியாபகம் வைத்து விசாரிக்கிறார்கள். எங்கள் பள்ளி மாணவர் ஒருவரை சான்ரமோனில் சந்தித்த போது அவரும் இதையே கூறினார். அவர் எனக்கு சீனியர். இந்த பள்ளிக்கூடம் வரும் முன் வேறு ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த பள்ளிக்கூடம் பெரிய அளவிலான ஒரு ஒட்டு வீட்டிலிருந்தது. திண்ணையில் முதலிரண்டு வகுப்புகள். கீழ் திண்ணையில் முதல் வகுப்பு. மேல் திண்ணையில் இரண்டாம் வகுப்பு. மூன்றாவதுக்கு மேல் வீட்டின் உள்ளே செல்லலாம். வீட்டின் பின்புறம் விளையாட்டு மைதானம். வீட்டின் நடுவே பெரிய முற்றம். முற்றத்தை சுற்றி வகுப்புகள் நடக்குமென நியாபகம்.


அங்கு படிக்கையில் வித்தியாசமான ஆசிரியர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சினிமா ரசிகர் அவர். அவ்வப்போது பள்ளியின் பின்புறமுள்ள மரத்தடிக்கு கூட்டி சென்று ஏதேதோ ஆங்கில பட கதையெல்லாம் சொல்லுவார். கேட்கவே விறு விறுப்பாயிருக்கும்.

No comments: