Wednesday, August 23, 2006

சாமி

திருச்சி ஜங்சனில் இருந்து பைபாஸ் வழியாக போனால் சமயபுரம் பக்கத்தில் எங்கள் பரம்பரை கோவில் உண்டு.மெயின் ரோட்டிலிருந்து முள்ளு காட்டுக்குள் ஜந்து நிமிஷ நடையில் கோபுரம்,மண்டபம் இல்லாத கோவில். ஓரு பெரிய கற்பாறை.அதில் கருப்பு எண்ணை பூசி இருந்தார்கள். வீராச்சாமி எனப் பெயர். பக்கத்தில் நாலு வீரன் சிலை. அதை சுற்றி பெருமாள் கோவில் போல சிவப்பு கோடு வரி வரியாய் போட்ட வெள்ளைச் சுவர். கோவிலை சுற்றி ஆள் நடமாட்டமே இருக்காது. பக்கத்தில் கோவிலுக்கான சுனை.கோவிலுக்கு தலப்புராணமெல்லாம இருக்கிறதா என கேட்டால், சொன்னா நம்பவா போறனு ஒரு வரிதான் அப்பா சொல்லுவார்.எங்கள் பங்காளிகள் மட்டும்தான் கோவிலுக்கு வருவார்கள்.பங்காளிகளுக்குள் பூப்போட்டு பார்த்து பூசாரி வேலை பார்ப்பது வழக்கம்.ஐந்து வருடமாய் அப்பாத்தான் பூசாரி. அதிலே அவருக்கும் ரொம்ப பெருமை.

அப்பாவுக்கு வைரல் ஜூரம் வந்து போய் ஒரு வாரந்தாம் ஆகிறது. தளர்ந்து போய் விட்டார்.பரமசிவம் சித்தப்பா கோவிலுக்கு நேர்த்திக் கடன் செய்யனுமாம்,போன மாசமே சொல்லி ்விட்டார்.நானும் அம்மாவும் போறதாய்தான் ஏற்பாடு. இதற்க்காக ஆபிஸ் லீவு போட்டு சென்னையிலிருந்து வந்தேன். காலை ஜந்து மணிக்கு கார் வந்து நிற்கிறது. நேற்று இரவிலிருந்து அம்மாவுக்கும் ஜூரம்.அம்மாவால் நகர முடியவில்லை. நான் தனியாக போய் பூசை வைச்சிட்டு வரேனென்றால் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை.

கார் கிளம்பும் போது ஐந்தரை மணி. வீணாய் அவருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். வழக்கம் போல திருச்சியின் வேர்வையோடு மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது.

கோவில் பக்கத்தில் மெயின் ரோட்டில் கார் நிற்க்கும் போது ஆறறை மணி ஆகிவிட்டது. சித்தப்பா ஏழறைக்கு வருவார். ஒரு மணி நேரத்தில் கோவிலை கூட்டி கழுவி விட்டு திருநீறும், சந்தனமும் பூச வேண்டும்.அவசரமாய் கோவிலுக்கு நடந்தால் எதிர்புறம் ஒரு பெரியவர் வந்தார். உழைத்து இறுகி கருத்த தேகம் தோளில் ஒரு நைந்து போன சிவப்புத்துண்டு. சட்டை இன்றி வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அப்பாவுக்கு அவரை பார்த்ததும் சந்தோஷமானது. அவரும் அப்பாவை கண்டதும் சிரித்தார்.

"அட ராசு நீயே வந்துட்டியா? சரசும்,சின்னாளும் வருவாங்க, கூட மாட ஓத்தாசையா இருக்குமுனுதான் காலேலருந்து இங்கன உட்காந்திருந்தேன்"-பெரியவர் சொல்லி என் தோளில் கைப் போட்டார்.ஆலன் ஷாலியில் போன வாரம்தான் வாங்கினேன். என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

அப்பாவுக்கு ஊரேல்லாம் சிநேகிதம். ஊருக்குள்ள வந்திட்டா நண்டு,நத்தையினு எல்லாரையும் பாத்திட்டு அரட்டை போட்டுதான் போவார்.

"சரசுக்கும் நேத்திலேருந்து சரியில்லை. சண்முகம் தனியா வரேன்னான்.நாத்திகம் பேசறவன் வந்து பூசைக் கொடுத்தா பரமசிவத்துக்கு பிடிக்காதுல்ல. அதான் நானே வந்திட்டேன்."-அப்பா

"தம்பி சாமி கும்பிட மாட்டியளோ? நல்லது. நானும் அப்படிதான் இருந்தேன்" - அவர் முகம் மாறி போனது.

"சரி வாங்க நேரமாகுதுல. போய் வேலையை பாப்போம்"-அப்பா

"நீர் உட்காருமையா.நானும் தம்பியும் தண்ணி எடுத்து வந்து கழுவறோம். சும்மா காலை ஆட்டாம அந்த சந்தனத்தை தோச்சு வையி"- பெரியவர்.

கோவில் போனதும் அப்பா வீரன் சிலை பக்கம் உட்கார நானும் அவரும் சுனையிலிருந்து தண்ணீர் பிடித்து பாறையை கழுவி ஊரிலிருந்து கொண்டு வந்த எண்ணையை தடவினோம். வீரன் சிலையெல்லாம் கூட்டி விட்டு மாலை போட்டு சந்தனமும் திருநீரும் பூசினோம். அப்பாவுக்கு அசதி போல வீரன் சிலைகிட்ட படுத்து குறட்டையோடு தூங்கி விட்டார்.

நாங்கள் வேலை முடித்து வீராச்சாமி பாறை பக்கம் உட்கார்ந்தோம்.சித்தப்பா வரும் வரை அப்பா தூங்கட்டும் என ்விட்டு விட்டோம்.

"உங்களுக்கு இந்த கோவில் கதை தெரியுமா?" -நான்

"ஒரு காலத்தில தெரியும். இப்போ முழுசா நியாபகம் இல்லை. வயசாயிடுச்சுல்ல. உங்கப்பாவுக்காகதான் இப்போல்லாம் கோவில் பக்கமெல்லாம் வாரேன். அப்பா பூசாரி ஆகறத்துக்கு முன்னேல்லாம் எப்பயாவதுதான் வருவேன். உன் வயசில எனக்கும் கடவுள் நம்பிக்கை , கோவில் நம்பிக்கை கிடையாதுதான். யாரு சொன்னாலும் கேட்க மாட்டேனுட்டுதான் இருந்தேன். அப்புறம் எல்லாம் மாறி போச்சு"- பெரியவர்.

"ஏங்க?" - நான்

"அதெல்லாம் ராசாமார்கள் காலம்.வீராச்சாமி நீ பேசறது சரியில்லேனு சொல்லி இந்த பாறையில கட்டி யானையே விட்டானுங்க.யானை நெஞ்சில மிதிச்சு மூச்சு நிக்கறப்பவும் சாமியில்லேனுதான் சொன்னேன்" - பெரியவர்

No comments: