Tuesday, August 1, 2006

உறவுகள்

கடலை வருடி வரும் காற்று மாலை வெயிலின் இளம் சூட்டோடு இருக்க மெல்ல கடல் கால் தொட கை கோர்த்து நின்றிருந்தார்கள்.

இருபது நாளாச்சு உன்னை பாத்து. இருக்கவே முடியலடா கண்ணம்மா - அவன்

என்னாலயும் தான். வேற சிந்தனையுமே இல்லாம போயிடுச்சு.-அவள்

ஆமாம் ஏன் இன்னைக்கு லேட்?

கிளம்பும் போது அம்மா வந்துட்டாங்க, கண்ண்ன் வேற நொய் நொய்னு.

அடாடா.அப்புறம் என்ன பண்ணின. வர வர கண்ணன் தொந்தரவு தாங்க முடியல.

என்ன பண்றது அவ்வளவுதான் அறிவு.

கவிதையாய் மனசுடா உனக்கு. உன்ன போய் படுத்திக்கிட்டு

கவிதை ஆனதே உன்னாலதானே. கவலை படாதே. இன்னும் பத்து நாள்தான்.

சினிமா போலாமா?

ச்சீ போடா.அங்க போனா கைய வச்சிட்டு இருக்க மாட்டேங்கற.

என் சுடிதார் சொர்க்கமே, அங்கங்க கை பட்டா நீ குறைஞ்சிட மாட்ட.

மானங்கெட்டவனே. உருப்படாம பேசு. போகாட்டி விடவா போற. போலாம் வா.

ஆட்டோ பிடிக்கனும். வண்டியை ரிப்பேருக்கு விட்டுருக்கேன்

வரும் போது ஆட்டோல பயங்கரமா சார்ஜ் பண்ணிட்டான் தெரியுமா. பிராடு பசங்க
சான்ஸ் கிடைச்சா வாய்க்கு வந்த ரேட் கேட்கறாங்க தெரியுமா. ஏமாத்தறதுனா வெல்லக்கட்டி சாப்பிடற மாதிரி. நான் உன்ன பாக்க வர டென்ஷன்ல ஓன்னும் சொல்ல்ல.யாரும் உண்மையாவே இருக்க மாட்டேங்கறாங்க. அடுத்தவங்க அவசரத்தை யுஸ் பண்ணி ஏமாத்ததான் பாக்கறாங்க.

அதனாலதான் இத கலியுகம் சொல்லறாங்க.கவலை படாதே கண்ணம்மா. வண்டி ஓட்ட சொல்லி தாரேன்.ஸ்குட்டி மாதிரி ஓரு வண்டி வாங்கிக்கோ. இந்த அவஸத்தையில்லாம் இருக்காது.

ஸ்குட்டியை சாக்கா வச்சி நீ ரொம்ப கனவு காணாதே. ட்ராபிக்ல வண்டி ஓட்டாதேனு விட்ல கன்டிசனா சொல்லிட்டாங்க. ஆட்டோதான் எனக்கும் பழகி போயிடுத்து.

மெல்ல கடல் மண்ணில் கால் புதைய நடக்க ஆரம்பித்தார்கள்.

அவள் போன் சினுங்கியது.

அடாடா வீட்லருந்து போன். ஓரு நாள் பிரியா இருக்க முடியல.

ஏங்க நொய் நொய் பண்ணாதிங்க. எனக்கு போன் பண்ணாதிங்க ஆபிஸ் மீட்டிங் இருக்குனு சொன்னேன்ல. நான் வர லேட்டாகும். நீங்க இந்தியால இருக்க போற இன்னும் பத்து நாள் வெக்கேஷன்ல குழந்தைகளோட வீட்ல இருங்க. சினிமாலாம் விசிடி வாங்கி பாத்துக்கலாம். அம்மா எனக்கு சாப்பாடு வைக்க வேண்டாம் சொல்லுங்க. ஈவினிங் லேட்டா தங்கறதால ஆபிஸ்லியே சாப்பாடு உண்டு. இப்ப போன வைங்க.நான் வீட்டுக்கு கிளம்பையில கால் பண்ணறேன்.-போனை வைத்தாள்.

யாரு? கண்ணனா-அவன்

ம்-அவள்.

No comments: