Tuesday, August 15, 2006

எங்குமிருப்பது

கோவிலில் கூட்டம் அலை மோதியது. பிரகாரமெல்லாம் சுத்தி விட்டு கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணலாமென உட்காருமிடத்தில் அது கிடந்தது.மூர்த்தி உட்கார்ந்த இடத்தில் உறுத்தவே அதை பார்த்தான்.பிரகாரமெங்கும் எல்லாரும் ஆண்டவனிடம் சுறுசுறுப்பாய் குறைகளை கொட்டிக் கொண்டிருந்தார்கள்.யாரும் இவனை பார்த்த மாதிரி தெரியவில்லை.பக்கத்தில் சத்யாவை பார்த்தான், அவள் தூரத்தில் உட்கார்ந்திருக்கும யாராருடைய புடவையையோ ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஆண்டவா யாரும் இதை பாக்க கூடாது"-கண்ணை மூடி ஆண்டவனை வேண்டிக் கொண்டு அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டான்.

"என்னங்க சாமி கும்பிட்டதெல்லாம் போதும்.அங்க எதுதாப்ல இருக்கவுங்களை பாருங்க.அவங்க கட்டிருக்க பொடவைதான் போனவாரம் கோலங்கள்ல வந்தது. அதான் ஆடி வந்திருச்சே. எனக்கு ஓன்னு எடுத்துதான் கொடுங்களேன்."

"சரி சரி அதெல்லாம் பாத்துக்கெல்லாம் கெளம்பு இப்போ"-பயம் மனசிலிருந்து அவசரமாய் காலுக்கு வந்தது.

கோவில் தாண்டுவதற்குள் நாக்கு வரண்டு வேர்த்து இருந்தது.

"என்னங்க ஓங்களுக்கு பிரஷர் செக் பண்ணும் போலருக்கே. இப்படி ஆகுதே.குடிக்காதிங்க சொன்னா கேக்கறிங்களா"-சத்யாவுக்கு கவலை

"சும்மா இருடி. பிரஷருமில்லை. வெங்காயமுமில்லை.சட்டை பையில பாரு.வெளியில எடுக்காதே."

"ஏதுங்க இது. இத ஏங்க நீங்க எடுத்து வந்திங்க. யாரும் பாத்தா என்னா ஆகறது."- சத்யாவுக்கு கோவம் வந்தது.

"அட ஏண்டி கத்தற. சத்தமா பேசாத.சும்மா இருடி. நான் என்னா கழட்டிட்டா வந்தேன். வழியில கிடந்தது எடுத்து வந்தேன். சாமியா பாத்து கொடுத்ததுனு நினைச்சுக்கோ"

"அடிக்காதிங்கப்பா, அடிக்காதிங்கப்பா. எங்கேனு தெரியலப்பா"-அலறல் கேட்டது. மூர்த்தி திரும்பி பார்த்தான். கோயில் வாசலில் யாரோ ஒருவர் தன் குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார்.

சத்யாவுக்கு அதை பார்த்து வயிற்றை இழுத்து ஏதோ பிடித்தது.

"பாவங்க அந்த பொன்னு"-சத்யா

"கொடுத்திடலாமா அவங்ககிட்ட"-மூர்த்திக்கு மனம் இளகியது.

"அதெல்லாம் வேணாம் வாங்க. அந்த பாப்பா எத்த தொலச்சிதோ. நாம போய் உங்களுதானு கேட்டு ஆமாம் சொல்லிட்டா என்ன பண்ணுவிங்க. அவங்க சொல்லறது சரியா,தப்பானு நமக்கு எப்படி தெரியும் ஆண்டவனா பாத்து கொடுத்திருக்கான். அத்தையேன் வேண்டாம்னு சொல்லுவானே. பொழைக்க தெரியாத ஆளா நீங்க இருந்தெல்லாம் போதும். வாங்க போலாம்."

பைக்கை ஸ்டாட் செய்யும் வரையில் மூர்த்திக்கு அந்த குழந்தையின் நியாபகம் இருந்தது.

சத்யா மூர்த்தியின் தோளை இருக்க பிடித்துக் கொண்டாள்.மூர்த்தியும் ஆக்ஸிலேட்டரை அதிகரித்தான். அந்த கோவிலை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போக வேண்டுமென பட்டது. அது பையில் உறுத்தியது.ஆக்ஸிலேட்டரை இன்னும் அழுத்தினான்.

எந்த நொடியில் பைக் நழுவியதுனு மூர்த்திக்கு தெரியவில்லை. வண்டி நழுவுவது தெரிந்தது.சத்யாவின் அலறல் கேட்டது.தலையில் ஏதோ மோதியது.

சண்முகம் அந்த பெட்டிக்கடையில் கவலையாய் இருந்தான்.மாசம் முடிய இன்னும் பத்து நாள் இருக்கு. விஜிலன்ஸ் ரெய்டுனு ஆபிஸ்ல ஓரே அமர்களமா இருக்க கையில காசு வரவு கொஞ்சம் கம்மியா ஆயிடுச்சு. கட்டிக்கிட்டு இருக்ற வீட்டுக்கு மணல் ்விலை ஏறி ்போனதால செலவு எகிறுது. பட்ஜெட்ட ஏத்தியாகனுமுனு காண்ட்ராக்டர் அடிச்சு சொல்லிட்டாரு.

அப்போதுதான் அந்த வழுக்கி ்விழும் அந்த பைக்கை பார்த்தான். அவசரத்துக்கு பொறந்தவனுங்கனு நினைத்துக் கொண்டான். விழுந்தவன் பையிலிருந்து ஏதோ தெரித்து திருப்பத்திலிருந்த குப்பைத் தொட்டியில் விழுந்தது. கடைக்காரனும் இன்னும் கடையிலிருந்ந இரண்டு பேரும் அவசரமாய் விழுந்தவர்களை பார்த்து ஓடினார்கள். இவனும் பதற்றமாய் ஓடினான். கணவன் மனைவி கோவிலில் இருந்து வந்திருப்பார்கள் போல.அர்ச்சனை சாமான்கள் எங்கு பார்த்தாலும்.விழுந்தவனுக்கு அடி பலமாய் இல்லை. அவன் மனைவிக்குதான் கொஞ்சம் தலை உடைந்திருப்பது போல இருந்தது. ஆனால் அவளுக்கும் நினைவு இருந்தது.இவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.இன்னும் கொஞ்சம் அங்கு கூட்டம் கூடியது.

மெல்ல குப்பை தொட்டி பக்கம் வந்தான். அது ஓரு பழைய பேப்பர் கீழே ்கிடந்தது. கர்சீப்பை கீழே போட்டு அதை எடுத்துக் கொண்டான்.ஆண்டவா நன்றி,ஓரு கதவை மூடி இன்னோரு கதவை திறந்திட்டனு மனசுக்குள்ள சாமி கும்பிட்டான்.

கட்டட ்வேலை சுறுசுறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது.சரவணன் கோபமாக இருந்தான். காலையில் கோவிலுக்கு போன ்நேரத்தை நொந்துக் கொண்டான்.அதை ஆசையாக ்வாங்கி மகளுக்கு கொடுத்திருந்தான்.காணாமல் போய்விட்டது.

"ஐயா"-ட்ரைவர் ஆதிகேசவன் குரல் ்கேட்டது.

"என்ன கேசவா?"-சரவணன்

"நீங்க வர சொன்னிங்களாமே?"-கேசவன்

"ஆமாம். உள்ள போனா எலக்டிரிசியன் ஜோசப்பு இருப்பான்,அவனை கூட்டிட்டு நம்ப மலர் எலக்ட்ரிக்கல்ஸ் போய்ட்டு இந்த வீட்டு அக்கவுண்ட்ல இந்த லிஸ்ட்ல இருக்க சாமான வாங்கி கொண்டு போய் நம்ப மாப்ள ்வீட்ல போட்டு கொடுத்திட்டு வந்திருங்க.அவன் ்கூடவே இரு கேசவா. கொஞ்சம் அசந்தா வேற எடத்துக்கு வேலைக்கு ஓடி போய்டுவான்.இவனலாம் நம்ப முடியாது.அப்படியே வெளிய இருக்க மண்ணுல ஓரு அரை லோடு எடுத்திட்டு போய் நம்ப மணியண்ணன் சைட்ல கொடுத்திட்டு அவர்ட்ட காசு ்வாங்கிட்டு வந்திடு.சரியா?" -சரவணன்.

"சரிங்கய்யா. பாப்பா எதையோ தொலைச்சிடுச்சாமே. அம்மா சொல்லிட்டு இருந்தாங்க."-கேசவன்

"பொறந்த நாளுனு ஆசையா வாங்கினேன். எவனோ களவானி பய கெளப்பிட்டு போய்ட்டான். எப்படிதான் ஓரு சின்ன புள்ளைக்கிட்ட இருந்து எடுத்திட்டு போக மனசு வருதோ? ஆண்டவன் இவங்களை சும்மா விடமாட்டான். சரி சரி சீக்கிரம் கிளம்பு அந்தாளு சண்முகம் வந்தா தொந்தரவு."-சரவணன்.

No comments: