Tuesday, August 22, 2006

பசி

என் பேரு சத்தியவாணிங்க. எங்கூரு தெக்கு பக்கமுங்க. இப்ப படிக்கறத்துக்காக சென்னை பட்டினத்துல்ல. எங்களுது ரொம்ப சின்ன ஊரு. ஊரு முழுக்க சொந்தக்காரங்கதான். மொத்தமா என்னுனிங்கனா கோடி வீட்டு சண்முகத்தோட சேத்து இருபத்தி ஐஞ்சு குடும்பந்தான். யாரு வீட்ல விருந்துனாலும் குடும்பமா ஊரே வந்திடுவாங்க.சும்மா ஜே ஜேனு களை கட்டும்.

சென்னைக்கு வந்த புதுசுல நல்லா இருந்துச்சு.அப்போல்லாம் ஹாஸ்டல்லதான் இருந்தேன். அப்புறம் ரண்டே வாரத்தில போர் அடிக்க ஆரம்பிச்சுது. ஹாஸ்டல் சாப்பாடு உடம்புக்கு சேரலை. அம்மா கையால சாப்பிட்டு இந்த ஊர் சாப்பாடு சுத்தம் போங்க. அப்பாதான் பாத்திட்டு ரொம்ப இளைச்சி போய்ட்டடா ராசாத்தினு சொல்லிட்டு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் ஊருலெருந்து கொண்டு வந்து ஐஸ் பாக்ஸில வச்சு சமைச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாள் ஒரு ரூம் மேட் இருந்தா. ஒரு நாள் எங்க ஊர் சாப்பாட்ட பாத்திட்டு லபோதிபோன்னா அத்தோட ரூம் மேட் ஓவர்.அப்பாவும் தனியா இருந்துக்கோடா சொல்லிட்டார்.

கொஞ்ச நாளா எங்க காலேஜ் பிஸிக்ஸ் லெக்சரர் தொந்தரவு தாங்க முடியல்லை. அவரை எனக்கு பிடிக்காதுனு இல்லை.நல்லா கலரா சினிமா நடிகர் மாதிரிதான் இருப்பாரு. ஆனா லெக்சரர் ஆச்சேனு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. அவருக்கும் ஏற்கனவே ஒரு ஸ்டுடன்டுக்கும் தொடர்பு இருந்துச்சு க்ளாஸ்ல சொன்னாங்க.எனக்கு அது ஒன்னும் பெருசா படலே. வயசு அப்படி இப்படிதானே இருக்கும்.

ஒரு நாள் தனியா லேபில இருக்கும் போது கையே பிடிச்சிட்டாரு. எனக்கு பக்னு ஆயிடுத்து. நான் கல்யாணம் பன்னினா உன்னை மட்டும்தான் பண்ணுவேனு சொன்னார். உறுதியா இருந்துச்சு அவர் கை. எனக்கு ஆசையா இருந்துச்சு காட்டிக்கல.யாருகிட்டயும் நம்ம பத்தி சொல்லாதீங்க.ரகசியமாவே இருக்கட்டுமுனு சொல்லிட்டேன்.ரொம்ப ரகசியமாவே இருந்தோம்.

எங்க ஊருல பண்டிகை வந்துச்சு. எங்க வீட்லதான் விருந்து. இவர் இல்லாமல் விருந்து எனக்கு மனசே இல்ல. அப்பாகிட்ட போன் பண்ணி சொன்னேன்.மொதல்ல ஆ ஊனு சப்தம் போட்டாரு.நான் பிடிவாதமா இருக்கவும் வேற வழியில்லாம ஒத்துகிட்டாரு.ஊருலேருந்து காரை எடுத்திக்கிட்டு அண்ணணை கூட்டிட்டு வாரேன்டாரு.நானும் இவரை அப்பாவும்,அண்ணணும் வரத்துக்கு முன்னால வர சொன்னேன். கொஞ்ச நேரம் தனியா இருக்காலாம் வாங்கனு கூப்பிட்டதாலே அவரும் ஆசையா வந்தாரு.

எங்க ஊரு காப்பி ஒன்னு போட்டுக் கொடுத்தேன்.மனுசன் மயங்கிட்டாரு.நான் ப்ளாஸ்டிக் ஷிட்,கத்தி எல்லாம் எடுத்து வச்சிட்டு இப்போ உட்காந்திருக்கேன்.அண்ணனும் அப்பாவும் வந்ததும் விருந்துக்கு கறி அறுக்க வேண்டியதுதான் பாக்கி. இவரென்ன சினிமா நடிகர் மாதிரி இருக்காரே ருசியாதான் இருப்பாரு.

No comments: