Thursday, February 15, 2007

கரையும் பனிக்கட்டி--ii

முதல் பகுதி

மூன்றாவது க்யுப் எங்கள் மத்தியில் கதாநாயகி மாதிரி. வேலையில் கொஞ்சம் முன்னே பின்னே என்றாலும் அட்டகாசமான தகவல் தொடர்பு நுட்பம் புரிந்தவள். தான் சொல்ல நினைத்தது, பிறர் சொல்ல நினைப்பது எல்லாம் புரிந்து கொண்டு சூழ்நிலைக்கேற்ப பேசுவதில் நிபுணி.

வாடிக்கையாளர் கையாள்வதில் எங்கள் மேலாளர் கொஞ்சம் போதாதவர். இவள்தான் அவருக்கு தூண், ஊன்று கோல் இன்னும் மற்றும் பல. எங்கள் பிழைப்பின் கோடெலுதி வாழ்வாரே மேலார் எனும் கருத்து அம்மணியை கண்ட நிமித்தம் மாறி விட்டது. பின்குறிப்பாய் சொல்ல வேண்டியது அவளுடைய உடைநயத்தை. She rocks.

அப்பேற்பட்ட அம்மணியின் ஆண்தோழர் என்ற விதத்தில் புதியவர் மேல் இன்னும் மரியாதை வந்தது.

'அதெல்லாம் விளக்கம் சொல்ல முடியாதுனுட்டா பிரதர். இப்போ ஊருக்கு போ. இன்னும் கொஞ்சநாள் இடைவெளி விட்டு நம்ம உறவை பார்க்கலாம் சொல்லறா. எத்தனை மைல் தாண்டி இவளுக்காக வந்திருக்கேன். இப்படி சொல்லிட்டா பாருங்க. கொஞ்ச நாளாவே விலகி போற மாதிரி இருந்துச்சு நான்தான் தப்பா நினைக்கிறேனோனு பயந்துகிட்டு கேட்காம விட்டுட்டேன். இப்ப இரண்டு மாசமா என் கூட பேசறதே இல்லை'- புதியவர். கண்கள் கலங்கின.

'ஏன் பிரதர் கலங்கறிங்க. ஏதாச்சும் சண்டை எதுவும் போட்டிங்களா? ' - நான். எனக்கு அவர் மீது பாவமாக இருந்தது.

மூன்றாவது க்யுபை சமீபமாக வட இந்தியரோடு அடிக்கடி பார்க்க முடிந்தது. புது வருட முதல் இரவில் சான்பிரான்சிஸ்கோ பாரில் பார்த்தேன். அறைத்தோழனுக்கும் தெரியும். புதியவரிடம் சொன்னானா இல்லையா தெரியவில்லை.

'சண்டை என்னங்க. எப்போதும் வழக்கமா வர்ரதுதான். ரெண்டு பேரும் அப்படி ஓரு அண்டர்ஸ்டான்டிங்ல இருந்தோம். என்கிட்ட போன்ல பேசாம அவ தூங்கவே மாட்டா. திடீருனு மாற்றங்கள். இந்த தடவை நான் வர்ரேனு சொன்னப்ப உங்க ரூம்மேட் வேண்டாம் வராதே, ரொம்ப குழம்பிக்காம இதை விட்டுடு சொன்னான். எனக்குதான் மனசே ஆகலை. கிளம்பி வந்திட்டேன். நேரா பார்த்து என்னனு கேட்டுடலாம்னு நினைச்சேன்' - புதியவர்.

'பிரதர் சொன்னா தப்பா நினைச்சிக்காதிங்க. அண்டர் ஸ்டான்டிங்கலாம் பெரிய வார்த்தை. அதலெல்லாம் காலம் இடம் பொருள் வைச்சு மாறும். ஊர்ல இருக்கையில இருந்த் சூழ்நிலை வேற, இப்ப இருக்க சூழ்நிலை வேற. மனசோட தேவைகளும், சந்தோஷங்களும் மாறுபடலாம் இல்லையா?
குடும்பம, நீங்க அத விட்டா பத்து மணி நேர வேலைங்கற வட்டத்தில யோசிக்கறது எப்படி? இங்க வந்து தன் கால்ல நின்னு நிறைய சொந்த நேரம் கிடைக்கறப்ப யோசிக்கறது எப்படி? வித்தியாசம் உண்டு. கொஞ்சம் இடைவெளி கொடுங்க பிரதர். உங்களுக்கும் யோசிக்க நேரம் வேணும்.' - நான்

எனது அலுவலக கதாநாயகி பக்கம் பேசினேன். நொந்து போன இவர் பக்கம் தொடர்ந்து பேசினால் அவரது குழப்பம் தான் அதிகரிக்கும்.

'நானும் இவன் பிரச்சனையை சொன்னப்ப அவள்கிட்ட பேசினேன். தேங்ஸ். பட் நோ தேங்ஸ்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் அவள்கிட்ட என்னத்த சொல்றது' - அறைத்தோழன்

ஸ்காட்ச் சோகமாய் இருந்த போதும் சுகமான மனநிலையை கொடுத்தது. தோழமை உள்ள பானம் அது ஒன்றுதான். ஐஸ் க்யுபின் இடுக்குகளுக்குள் பரவி அதன் சூட்டில் ஐஸ் உருக ஸ்காட்சின் மணம் நாசிக்கு இனிதாய் இருந்தது. ஐஸ் உருகுவதற்குள் பருக வேண்டும். உருகி விட்டால் அதற்கப்புறம் ஸ்காட்ச் இல்லாமல் போய்விடும். ஸ்காட் தெளித்த தண்ணீர்தான் இருக்கும்.

'பிரதர் சொல்லறது இசி. காதல் மாறக்கூடாதுங்க. இடம் மாறினா மனசு எப்படிங்க மாறலாம். எதிர்பார்த்து காதலிச்சாதான் மனசு மாறும். என்னை பொருத்தவரை எதிர்பார்ப்பு இருந்தா அது காதலே இல்லிங்க. ஆனா நாங்க அப்படி இருந்ததில்ல'- புதியவர்.

'பிரதர் எதிர்பார்ப்பிலாம இருக்கனும்னா சவமா இருந்தாதான் உண்டு. எல்லா இடத்திலும் எதிர்பார்ப்பு உண்டு. சமயத்தில நாம நினைக்கிற மாதிரியே எல்லாம் இருக்கையில அதை தாண்டி வேற எதிர்பார்ப்பு வரதில்லை. அதுதான் உண்மை. எண்ணமோ சிந்தனையோ மனசில நிரந்தரம் கிடையாது. ஓடிக்கிட்டேதான் இருக்கும். சில ்விஷயங்கள் நேரமும் இடமும் மாறும் போதுதான் மனசுக்கு புரிய ஆரம்பிக்கும். காதல்ல காம்ப்ரமைஸ் பண்ணறதிலும் அளவிறுக்கில்ல. ஒரு அளவுக்கு மேல காம்பரமைஸ் பண்ணிக்கிறது மூகமுடி போட்டு நாடகம் நடிக்கிற மாதிரி ஆயிடும். எவ்வளவுதான் நடிக்கிறது , கழட்டி போட்டுட்டு எப்படா போவோமுனு ஆயிடும். அவங்களுக்கும் அப்படி பட்டிருக்கலாம். அதுதான் சொல்லியிருக்காங்க'- நான்.

புதியவருக்கு கோபம் வந்துவிட்டது. பட்டென அறைக்குள் சென்று கதவை மூடி தூங்கிவிட்டார். அறைத்தோழன் என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு அடுத்த ரவுண்ட் ஸ்காட்சை ஊற்ற டிவியில் எதையோ பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

' பிரதர் எதிர்பார்ப்பில்லாம வர்ரது அட்வைஸ் இவ்வளவு நேரம் வாரி வழங்கின எதையும் எதிர்பார்த்தா சொன்ன? -சிறிது நேரம் கழித்து அறைத்தோழன் சொன்னான்.

அவன் சொன்னது எனக்கு சரியாகவே பட்டது.

கடந்த வ்ருடம் காய்கறி வாங்க போன போது புதியவரை கடையில் பார்த்தேன். இபபோது மூட்டை முடிச்சுகளோடு அமெரிக்கா வந்து விட்டார். மூன்றாவது க்யுப் அவரது மனைவி இல்லை. வேறு யாரோ இருந்தார்கள். அப்பா ஆக போகிறார் போல. பார்த்து ஹாய் சொல்ல சிரிக்காமல் போய்விட்டார். இன்னும் கோபம் போல இருக்கிறது.

No comments: