Wednesday, February 7, 2007

கொந்தளிப்பின் ஊடே

நாசாவின் அஸ்ட்ராநாட் ஆவதற்கு கடுமையான பயிற்சி உண்டு. முக்கிய முடிவுகளை விநாடி நேரத்தில் எடுப்பதற்குண்டான பயிற்சிகளும் உண்டு. நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரத்தில் லிசா மேரி நோவாக் எனும் பெண் ஷிப்மென் எனும் இன்னொரு பெண்ணை காரில் தாக்கி அவர் கண்ணில் மிளகு தூளை தூவி அவரை கடத்த முயற்சி செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. இருவருக்கும் இடையேயான பிரச்சனை அவர்களுக்கும் பில் ஒப்லின் என்பவருக்கும் இடையேயான உறவை பற்றியது. இது காதல் சம்பந்தப்பட்ட விஷயம். உரிமை கோரி மோதி கொள்வது பரம்பரை பரம்பரையாக உண்டே என்று தோன்றும் அதே கணம் இவர்களது பின்புலத்தை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது.

லிசா மேரி நோவாக் ஒரு அஸ்ட்ராநாட் சென்ற ஜீலையில் விண்வெளிக்கு சென்று 22 நாட்கள் இருந்து வந்திருக்கின்றார். கடுமையான மனப்பயிற்சிகளை பயின்றவர். ஆனாலும் பின் விளைவுகளை யோசிக்காமல் உணர்வுகளின் கொந்தளிப்பில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கின்றார். இந்த பிரச்சனையை தீர்க்க பல வன்முறை சாரா வழிகள் இருந்து அந்த வழிகளை பற்றி அவர் யோசிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு பல்வேறு விதமான தீர்வுகளை யோசித்து அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அவர் அந்த நேரத்தில் யோசிக்கவில்லை.

கர்நாடகத்திற்கும் , தமிழகத்திற்கும் இடையேயான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிரச்சசனையை கையாண்டு யார் வளர்வது என்ற நோக்கில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பிற்கு மக்களை தயார் செய்வதில்தான் பத்திரிக்கை தலைப்பு செய்திகளும், மக்கள் தலைவர்களாக இன்று அறியப்படுபவர்களும் முன் நிற்கிறார்கள். பேருந்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. வரிப்பணத்தில் வந்த பொது சொத்துகள் நொறுக்கப்படுகின்றன. அந்த படங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டு இந்திய இறையாண்மையை நோக்கிய தேவையற்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருப்பவனும் விவசாயிதான், கர்நாடகாவில் இருப்பவனும் விவசாயிதான். பகிர்ந்து கொண்டால் வளமை இருவருக்குந்தான். சொத்து பிரிப்பதில் இருக்கும் பங்காளி பிரச்சனைதான் ஆனால் அந்த நிலையை முன் வைத்தால் கவர்ச்சி குறைந்து போகிறது.

எவனேனும் முடியை பிடித்துக் கொண்டு சண்டை போட்டால்தான் பார்க்க நன்றாக இருக்கின்றது. ரோம பேரரசின் போது மைதானங்களில் சாகும் வரை சண்டையிட சொல்லி வேடிக்கை பார்த்து கை கொட்டுவார்களாம். அந்த மனநிலை சற்று மருவி இன்று இங்கு வந்திருக்கின்றது.

இந்த முறை உயிர் சேதம் எதுவும் காவிரி பிரச்சனையால் ஏற்படவில்லை. இரு மாநில நிர்வாகத்தையும் இதன் பொருட்டு பாராட்ட வேண்டும். ஏற்பட்டிருந்தால் செய்தியாளர்கள் இரங்கல் வார்த்தைகளை அச்சில் ஏற்றி மனமெங்கும் மகிழ்ச்சியோடு செய்திகளை தண்டோரா அடித்திருப்பார்கள். தங்கள் நோக்கங்களை நோக்கி நிகழ்வுகளை திரிப்பதில் காட்டும் கவனத்தை நிகழ்வுகளை உள்வாங்குவதில் செலுத்தினால் நலம்.

தமிழகத்திலும், கர்நாடகத்திலும் எதிர்கட்சியாய் இருப்பவர்களின் ஒரே அரசியல் நிலை ஆளும் கட்சியை எதிப்பதே. இறையாண்மையும், அமைதியான மாநில சூழ்நிலையும், விவசாயிகளின் உண்மை பிரச்சனையும் அவர்களுக்கு முக்கியமில்லை, அக்கறையுமில்லை. மாநில நலன் என்பதை விட ஒட்டு வங்கியின் அசைவே முக்கியம்.

கொந்தளிக்கும் நிலையில் பயிற்சி அளிக்கப்பட்ட அஸ்ட்ராநாட் நிலையிழக்கிறார், சராசரி மனிதர் எம்மாத்திரம். சிந்திக்கும் நிலை மக்களமைப்பு அரசியலமைப்புகளுக்கு பிரச்சனை. ஆகவே அவர்களை உணர்ச்சிவசப் பட வைக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகின்றார்கள். மக்கள் கொந்தளிக்கும் நிலையில் ஆளுங்கட்சியாய் இருப்பவர்களும் கொந்தளிப்பிற்கு ஆமாம் போட வேண்டியிருக்கிறது. கொதிக்கும் தணலுக்கு மற்றுமொரு விசிறி.

7 comments:

VSK said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

அந்த அஸ்ட்ரோனாட் இன்று கைது செய்யப்பட்டதாகத் தகவல் வந்திருக்கிறது.

உணர்ச்சி என வருகையில், பயிற்சியாவது, மண்ணாவது!

இந்திய இறையாண்மையைப் பற்றி நீங்கள் எழுப்பிய கேள்வி கவலையளிக்கிறது!


[கடைசி வரியில் த'ன'லை த"ண"லாக மாற்றவும்!]

Vassan said...

astronaut astro'nut' aaka mArinAL ;(

Boston Bala said...

ஹ்ம்ம்ம்ம்ம் : |

கப்பி | Kappi said...

+

:(

கதிர் said...

சீரான எழுத்து ஆழ்ந்த சிந்தனையுடன் எழுதப்பட்ட பதிவு.

அருமையான அலசல்.

உணர்ச்சி வேகத்தில் செய்யும் செயல்களில் சிந்திக்கும் திறனை மனிதன் இழக்கிறான். பயிற்சிகளை பெற்றிருந்தும் அந்த பெண் அப்படி செய்திருக்கிறார் சாதாரண மக்கள் எம்மாத்திரம்.

யோசிக்க வைத்த இடம்.

நன்றி

நிர்மல் said...

sk,

எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டுள்ளது. நன்றி.

வாசன், கப்பி, பாலா, தம்பி,

நன்றி

மணியன் said...

அருமையான பதிவு. அரசியல் தலைவர்கள் மக்களை வழிகாட்டி அவர்களுக்கு நன்மைகள் விளைவதை கருதாமல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு குடுமிச்சண்டையில் குளிர் காய்கிறார்கள். நவீன பத்திரிகை தர்மமும் விலைபோகும் செய்திக்கே முதன்மை கொடுக்கிறது :((

இருமாநிலங்களிலும் காவிரியின் பாசன நிலத்தைப் பற்றி குறிப்பிடாமல் அகில இந்திய ஊடகங்களும் தமிழ்நாட்டிற்கு அதிகநீர் கொடுக்கப் பட்டதுபோல் தலைப்பிடுவதும் கொந்தளிப்பை குறைக்கும் செயலாக இல்லை.