Wednesday, August 23, 2006

சாமி

திருச்சி ஜங்சனில் இருந்து பைபாஸ் வழியாக போனால் சமயபுரம் பக்கத்தில் எங்கள் பரம்பரை கோவில் உண்டு.மெயின் ரோட்டிலிருந்து முள்ளு காட்டுக்குள் ஜந்து நிமிஷ நடையில் கோபுரம்,மண்டபம் இல்லாத கோவில். ஓரு பெரிய கற்பாறை.அதில் கருப்பு எண்ணை பூசி இருந்தார்கள். வீராச்சாமி எனப் பெயர். பக்கத்தில் நாலு வீரன் சிலை. அதை சுற்றி பெருமாள் கோவில் போல சிவப்பு கோடு வரி வரியாய் போட்ட வெள்ளைச் சுவர். கோவிலை சுற்றி ஆள் நடமாட்டமே இருக்காது. பக்கத்தில் கோவிலுக்கான சுனை.கோவிலுக்கு தலப்புராணமெல்லாம இருக்கிறதா என கேட்டால், சொன்னா நம்பவா போறனு ஒரு வரிதான் அப்பா சொல்லுவார்.எங்கள் பங்காளிகள் மட்டும்தான் கோவிலுக்கு வருவார்கள்.பங்காளிகளுக்குள் பூப்போட்டு பார்த்து பூசாரி வேலை பார்ப்பது வழக்கம்.ஐந்து வருடமாய் அப்பாத்தான் பூசாரி. அதிலே அவருக்கும் ரொம்ப பெருமை.

அப்பாவுக்கு வைரல் ஜூரம் வந்து போய் ஒரு வாரந்தாம் ஆகிறது. தளர்ந்து போய் விட்டார்.பரமசிவம் சித்தப்பா கோவிலுக்கு நேர்த்திக் கடன் செய்யனுமாம்,போன மாசமே சொல்லி ்விட்டார்.நானும் அம்மாவும் போறதாய்தான் ஏற்பாடு. இதற்க்காக ஆபிஸ் லீவு போட்டு சென்னையிலிருந்து வந்தேன். காலை ஜந்து மணிக்கு கார் வந்து நிற்கிறது. நேற்று இரவிலிருந்து அம்மாவுக்கும் ஜூரம்.அம்மாவால் நகர முடியவில்லை. நான் தனியாக போய் பூசை வைச்சிட்டு வரேனென்றால் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை.

கார் கிளம்பும் போது ஐந்தரை மணி. வீணாய் அவருடன் சண்டை போட்டதுதான் மிச்சம். வழக்கம் போல திருச்சியின் வேர்வையோடு மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது.

கோவில் பக்கத்தில் மெயின் ரோட்டில் கார் நிற்க்கும் போது ஆறறை மணி ஆகிவிட்டது. சித்தப்பா ஏழறைக்கு வருவார். ஒரு மணி நேரத்தில் கோவிலை கூட்டி கழுவி விட்டு திருநீறும், சந்தனமும் பூச வேண்டும்.அவசரமாய் கோவிலுக்கு நடந்தால் எதிர்புறம் ஒரு பெரியவர் வந்தார். உழைத்து இறுகி கருத்த தேகம் தோளில் ஒரு நைந்து போன சிவப்புத்துண்டு. சட்டை இன்றி வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அப்பாவுக்கு அவரை பார்த்ததும் சந்தோஷமானது. அவரும் அப்பாவை கண்டதும் சிரித்தார்.

"அட ராசு நீயே வந்துட்டியா? சரசும்,சின்னாளும் வருவாங்க, கூட மாட ஓத்தாசையா இருக்குமுனுதான் காலேலருந்து இங்கன உட்காந்திருந்தேன்"-பெரியவர் சொல்லி என் தோளில் கைப் போட்டார்.ஆலன் ஷாலியில் போன வாரம்தான் வாங்கினேன். என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

அப்பாவுக்கு ஊரேல்லாம் சிநேகிதம். ஊருக்குள்ள வந்திட்டா நண்டு,நத்தையினு எல்லாரையும் பாத்திட்டு அரட்டை போட்டுதான் போவார்.

"சரசுக்கும் நேத்திலேருந்து சரியில்லை. சண்முகம் தனியா வரேன்னான்.நாத்திகம் பேசறவன் வந்து பூசைக் கொடுத்தா பரமசிவத்துக்கு பிடிக்காதுல்ல. அதான் நானே வந்திட்டேன்."-அப்பா

"தம்பி சாமி கும்பிட மாட்டியளோ? நல்லது. நானும் அப்படிதான் இருந்தேன்" - அவர் முகம் மாறி போனது.

"சரி வாங்க நேரமாகுதுல. போய் வேலையை பாப்போம்"-அப்பா

"நீர் உட்காருமையா.நானும் தம்பியும் தண்ணி எடுத்து வந்து கழுவறோம். சும்மா காலை ஆட்டாம அந்த சந்தனத்தை தோச்சு வையி"- பெரியவர்.

கோவில் போனதும் அப்பா வீரன் சிலை பக்கம் உட்கார நானும் அவரும் சுனையிலிருந்து தண்ணீர் பிடித்து பாறையை கழுவி ஊரிலிருந்து கொண்டு வந்த எண்ணையை தடவினோம். வீரன் சிலையெல்லாம் கூட்டி விட்டு மாலை போட்டு சந்தனமும் திருநீரும் பூசினோம். அப்பாவுக்கு அசதி போல வீரன் சிலைகிட்ட படுத்து குறட்டையோடு தூங்கி விட்டார்.

நாங்கள் வேலை முடித்து வீராச்சாமி பாறை பக்கம் உட்கார்ந்தோம்.சித்தப்பா வரும் வரை அப்பா தூங்கட்டும் என ்விட்டு விட்டோம்.

"உங்களுக்கு இந்த கோவில் கதை தெரியுமா?" -நான்

"ஒரு காலத்தில தெரியும். இப்போ முழுசா நியாபகம் இல்லை. வயசாயிடுச்சுல்ல. உங்கப்பாவுக்காகதான் இப்போல்லாம் கோவில் பக்கமெல்லாம் வாரேன். அப்பா பூசாரி ஆகறத்துக்கு முன்னேல்லாம் எப்பயாவதுதான் வருவேன். உன் வயசில எனக்கும் கடவுள் நம்பிக்கை , கோவில் நம்பிக்கை கிடையாதுதான். யாரு சொன்னாலும் கேட்க மாட்டேனுட்டுதான் இருந்தேன். அப்புறம் எல்லாம் மாறி போச்சு"- பெரியவர்.

"ஏங்க?" - நான்

"அதெல்லாம் ராசாமார்கள் காலம்.வீராச்சாமி நீ பேசறது சரியில்லேனு சொல்லி இந்த பாறையில கட்டி யானையே விட்டானுங்க.யானை நெஞ்சில மிதிச்சு மூச்சு நிக்கறப்பவும் சாமியில்லேனுதான் சொன்னேன்" - பெரியவர்

Tuesday, August 22, 2006

பசி

என் பேரு சத்தியவாணிங்க. எங்கூரு தெக்கு பக்கமுங்க. இப்ப படிக்கறத்துக்காக சென்னை பட்டினத்துல்ல. எங்களுது ரொம்ப சின்ன ஊரு. ஊரு முழுக்க சொந்தக்காரங்கதான். மொத்தமா என்னுனிங்கனா கோடி வீட்டு சண்முகத்தோட சேத்து இருபத்தி ஐஞ்சு குடும்பந்தான். யாரு வீட்ல விருந்துனாலும் குடும்பமா ஊரே வந்திடுவாங்க.சும்மா ஜே ஜேனு களை கட்டும்.

சென்னைக்கு வந்த புதுசுல நல்லா இருந்துச்சு.அப்போல்லாம் ஹாஸ்டல்லதான் இருந்தேன். அப்புறம் ரண்டே வாரத்தில போர் அடிக்க ஆரம்பிச்சுது. ஹாஸ்டல் சாப்பாடு உடம்புக்கு சேரலை. அம்மா கையால சாப்பிட்டு இந்த ஊர் சாப்பாடு சுத்தம் போங்க. அப்பாதான் பாத்திட்டு ரொம்ப இளைச்சி போய்ட்டடா ராசாத்தினு சொல்லிட்டு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் ஊருலெருந்து கொண்டு வந்து ஐஸ் பாக்ஸில வச்சு சமைச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாள் ஒரு ரூம் மேட் இருந்தா. ஒரு நாள் எங்க ஊர் சாப்பாட்ட பாத்திட்டு லபோதிபோன்னா அத்தோட ரூம் மேட் ஓவர்.அப்பாவும் தனியா இருந்துக்கோடா சொல்லிட்டார்.

கொஞ்ச நாளா எங்க காலேஜ் பிஸிக்ஸ் லெக்சரர் தொந்தரவு தாங்க முடியல்லை. அவரை எனக்கு பிடிக்காதுனு இல்லை.நல்லா கலரா சினிமா நடிகர் மாதிரிதான் இருப்பாரு. ஆனா லெக்சரர் ஆச்சேனு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. அவருக்கும் ஏற்கனவே ஒரு ஸ்டுடன்டுக்கும் தொடர்பு இருந்துச்சு க்ளாஸ்ல சொன்னாங்க.எனக்கு அது ஒன்னும் பெருசா படலே. வயசு அப்படி இப்படிதானே இருக்கும்.

ஒரு நாள் தனியா லேபில இருக்கும் போது கையே பிடிச்சிட்டாரு. எனக்கு பக்னு ஆயிடுத்து. நான் கல்யாணம் பன்னினா உன்னை மட்டும்தான் பண்ணுவேனு சொன்னார். உறுதியா இருந்துச்சு அவர் கை. எனக்கு ஆசையா இருந்துச்சு காட்டிக்கல.யாருகிட்டயும் நம்ம பத்தி சொல்லாதீங்க.ரகசியமாவே இருக்கட்டுமுனு சொல்லிட்டேன்.ரொம்ப ரகசியமாவே இருந்தோம்.

எங்க ஊருல பண்டிகை வந்துச்சு. எங்க வீட்லதான் விருந்து. இவர் இல்லாமல் விருந்து எனக்கு மனசே இல்ல. அப்பாகிட்ட போன் பண்ணி சொன்னேன்.மொதல்ல ஆ ஊனு சப்தம் போட்டாரு.நான் பிடிவாதமா இருக்கவும் வேற வழியில்லாம ஒத்துகிட்டாரு.ஊருலேருந்து காரை எடுத்திக்கிட்டு அண்ணணை கூட்டிட்டு வாரேன்டாரு.நானும் இவரை அப்பாவும்,அண்ணணும் வரத்துக்கு முன்னால வர சொன்னேன். கொஞ்ச நேரம் தனியா இருக்காலாம் வாங்கனு கூப்பிட்டதாலே அவரும் ஆசையா வந்தாரு.

எங்க ஊரு காப்பி ஒன்னு போட்டுக் கொடுத்தேன்.மனுசன் மயங்கிட்டாரு.நான் ப்ளாஸ்டிக் ஷிட்,கத்தி எல்லாம் எடுத்து வச்சிட்டு இப்போ உட்காந்திருக்கேன்.அண்ணனும் அப்பாவும் வந்ததும் விருந்துக்கு கறி அறுக்க வேண்டியதுதான் பாக்கி. இவரென்ன சினிமா நடிகர் மாதிரி இருக்காரே ருசியாதான் இருப்பாரு.

Monday, August 21, 2006

நாட்டு நடப்பு (தேசியம்)

ஊர் ஆலமரத்தடியில இருந்த சண்முகத்துக்கு எதையுமே பிடிக்கவில்லை. அம்மாவும்,அப்பாவும் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பது எரிச்சலாக இருந்தது. சோறு சமைச்சி போட்டுட்டு, துணி துவைச்சி கொடுத்திட்டு,செலவுக்கு காசு கொடுத்திட்டு வாயை மூடிக்கிட்டு இருக்க தெரியல்லை அவங்களுக்கு என நட்பு வட்டாரத்திடம்(அல்லக்கைகள்) சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அல்லக்கைகளுக்கும் சண்முகம் வருத்தமாய் இருப்பது பிடிக்கவில்லை.தெருமுனை கழைக்கூத்தாடி போனதிலிருந்து சண்முகம்தான் அவர்களை சந்தோஷமாய் வைத்துக் கொண்டிருந்தான். அப்பப்ப அல்லக்கைகளுக்கு டீ வேறு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் டீயும் வாங்கி தருவதில்லை.

"சினங்கொண்ட சிங்கமே.எங்கள் தங்க தலைவா,நீங்க வருத்தப்படலாமா? குடும்பம் அப்பா,அம்மாலாம் சும்மா.துடைச்சி எறி தலை."-அல்லக்கை ஓன்னு.

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

"குடும்பத்தில இருந்து என்னத்த கண்டோம். பொழுதனைக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க. இதை மடிச்சு வை.அத்த க்ளின் பண்ணுனு. நல்லா படி. கேட்டு கேட்டு காதே புளிச்சு போச்சு. வீட்ல என்ன பண்ணறாங்க ்வெட்டியா? சுத்தம் பண்றதுதான் நம்ப வேலையா? எத்தனை வேலைகள் நமக்கு வெளில இருக்கு"-சண்முகத்துக்கு சினிமாவில் வரும் ஹிரோக்கள் போல கண்ணெல்லாம் சிவந்து உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

சண்முகத்துக்கு இவன் ஏன் எப்போதும் இதையே சொல்லறானு கொஞ்சம் டவுட் வர ஆரம்பித்தது. ஆனாலும் அவன் சொல்லறதை கேட்க சுகமாயிருப்பதால் இப்போதைக்கு இதை விட்டுடலாமுனு முடிவு பண்ணிக்கிட்டான்.

"குடும்பமே ஒரு போலி. அப்பா,அம்மா நமக்கு ஏமாத்தி போதனை பண்ணிட்டாங்க. அவங்க அடக்கு முறையை நான் ஒழிக்கனும். எதுக்கேட்டாலும் ஒன்னுக்கொதாவாத ஜடியா கொடுக்கறாங்க.
மூனு வருஷமா பைனல் இயர் பேப்பர் கிளியர் பண்ணலேனு சொன்னா,ட்யுஷன் போனு சொல்லறாங்க. இதுக்குதான் இவங்க இருக்காங்களானு நான் கேட்கறேன். படிக்க வைச்சா போதுமா, பரிட்சைல பாஸ் பண்ண அவங்கதான் ஏதாவது பண்ணனும். அப்புறம் ஒரு வேலை வாங்கி தரனும். அதேல்லாம் ஏன் பண்ணலேனு கேட்கறேன்? அக்கறையே இல்லாத கும்பல். இதெல்லாம் பண்ண பத்து லட்சம் காசு கொடுங்கனு சொன்னா கைல காசு இல்லடா. படிப்புக்கே வட்டிக்கு பணம் வாங்கிதான்டா தாரேனு சொல்லறாங்க. கடன் வாங்கறதெல்லாம் ஒரு பொழப்பா? எனக்கு அவங்க கூட இருக்கறதுக்கே அருவருப்பா இருக்கு. இந்த லட்சணத்தில இவங்க வாங்கின கடனை பின்னாடி நான்தான அடைக்க உதவி பண்ணனுமாம். கிண்டலை பாத்தியா? இந்த கும்பலை நான் என்ன பண்ணறேன் பார்"-சண்முகம் மூச்சிறைக்க பேசி முடித்தான்.

தொடர்ந்து 2 நிமிஷம் பேசினா கை தட்றதா முடிவு பண்ணியிருந்த அல்லக்கைகள் உடனே கைதட்டி விசில் அடிக்க ஆரம்பிச்சார்கள்

"ஆமாம் தலைவா. நீங்க வல்லவரு. ரொம்ப நல்லவரு"-அல்லக்கை ரண்டு.

"தலைவா, புதிசுபுதிசா உனக்கு சிந்தனைகள் கொட்டுது. நீ குடும்பத்துக்கு வை ஒரு வேட்டு"- அல்லக்கை ஒன்னு.

வடிவேலு ்வாத்தியார் எலிமெண்ட்ரி பள்ளிக்கூடத்தில வேலை பாக்கறவரு. அவர்தான் சண்முகத்துக்கும், அவனோட புரட்சிக்கூட்டதுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவரு. வெயிலுக்கு மரத்தடில ஒதுங்கனவர் இந்த வீர உரைகளை கேட்டுட்டார்.

"தம்பி சண்முகம் கோவப்படாதப்பா. அவங்க அம்மா,அப்பாதானெ கொஞ்சம் கொணமாத்தான் பேசேன்"-வடிவேல் வாத்தியார்.

"நீங்க பெரிசா பேச வந்திட்டிங்களே. நீங்களும் இதுல பங்கு வச்சிருக்கிங்க. அப்போ அல்ஜிப்ரா ஒழுங்கா சொல்லிக் கொடுத்திருந்தா இந்த கஷ்டம் வந்திருக்காதில்ல"-சண்முகம் நக்கலாக கேட்டான்.

அல்லக்கைகள் வாத்தியாரை கை காட்டி சிரித்தனர். எப்படி சண்முகம் வாத்தியாரை ஒத்த கேள்வில மடக்கிட்டானு சந்தோஷமாயினர்.

வாத்தியாருக்கு ஒரு நிமிஷம் குழப்பமாயிருந்தது.

"சண்முகம் ஒன்னும் குடிக்கலாமில்லையே. என்னையே அடையாளம் தெரியலையா. நான்தாம்பா வடிவேலு. உன்னோட ரண்டாம் கிளாஸ் வாத்தியாரு.நான் எப்படிப்பா அல்ஜிப்ரா ்சொல்லி தருவேன்?"-வடிவேல்

"என்னை குடிக்காரனு சொல்லறிங்களா? இந்த சமுதாயம் ஒரு புரட்சிக் கூட்டத்தை எப்படி பாக்குது பாருங்க"-சண்முகம் தோழர்களை பார்த்துக் கேட்டான்

்வாத்தியார் பயந்து போய் வீட்டுக்கு கிளம்ப சண்முகமும் அவனது புரட்சிக் கூட்டமும் வட்டமாக உட்கார்ந்து அம்மா அப்பாவோடு வாத்தியாரையும் திட்ட ஆரம்பித்தார்கள்.

பின் குறிப்பு;

"என்ன நீங்க சண்முகத்துக்காக இவ்வளவு செய்யறிங்களே. அவன் உங்களை திட்டிட்டு ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கான்"-வடிவேல்

"ஆயிரம் திட்னாலும் மகன் வாத்தியரய்யா. அவனுக்கும் நல்ல வாழ்க்கை அமையனுமில்ல"-சண்முகத்தின் அப்பா

"கொஞ்சம் கண்டிக்கலாமே?"-வடிவேல்

"சொன்னேன். என்னை போடா பைத்தியக்காரானு சொல்லிட்டாங்க"-அப்பா

Tuesday, August 15, 2006

எங்குமிருப்பது

கோவிலில் கூட்டம் அலை மோதியது. பிரகாரமெல்லாம் சுத்தி விட்டு கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணலாமென உட்காருமிடத்தில் அது கிடந்தது.மூர்த்தி உட்கார்ந்த இடத்தில் உறுத்தவே அதை பார்த்தான்.பிரகாரமெங்கும் எல்லாரும் ஆண்டவனிடம் சுறுசுறுப்பாய் குறைகளை கொட்டிக் கொண்டிருந்தார்கள்.யாரும் இவனை பார்த்த மாதிரி தெரியவில்லை.பக்கத்தில் சத்யாவை பார்த்தான், அவள் தூரத்தில் உட்கார்ந்திருக்கும யாராருடைய புடவையையோ ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஆண்டவா யாரும் இதை பாக்க கூடாது"-கண்ணை மூடி ஆண்டவனை வேண்டிக் கொண்டு அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டான்.

"என்னங்க சாமி கும்பிட்டதெல்லாம் போதும்.அங்க எதுதாப்ல இருக்கவுங்களை பாருங்க.அவங்க கட்டிருக்க பொடவைதான் போனவாரம் கோலங்கள்ல வந்தது. அதான் ஆடி வந்திருச்சே. எனக்கு ஓன்னு எடுத்துதான் கொடுங்களேன்."

"சரி சரி அதெல்லாம் பாத்துக்கெல்லாம் கெளம்பு இப்போ"-பயம் மனசிலிருந்து அவசரமாய் காலுக்கு வந்தது.

கோவில் தாண்டுவதற்குள் நாக்கு வரண்டு வேர்த்து இருந்தது.

"என்னங்க ஓங்களுக்கு பிரஷர் செக் பண்ணும் போலருக்கே. இப்படி ஆகுதே.குடிக்காதிங்க சொன்னா கேக்கறிங்களா"-சத்யாவுக்கு கவலை

"சும்மா இருடி. பிரஷருமில்லை. வெங்காயமுமில்லை.சட்டை பையில பாரு.வெளியில எடுக்காதே."

"ஏதுங்க இது. இத ஏங்க நீங்க எடுத்து வந்திங்க. யாரும் பாத்தா என்னா ஆகறது."- சத்யாவுக்கு கோவம் வந்தது.

"அட ஏண்டி கத்தற. சத்தமா பேசாத.சும்மா இருடி. நான் என்னா கழட்டிட்டா வந்தேன். வழியில கிடந்தது எடுத்து வந்தேன். சாமியா பாத்து கொடுத்ததுனு நினைச்சுக்கோ"

"அடிக்காதிங்கப்பா, அடிக்காதிங்கப்பா. எங்கேனு தெரியலப்பா"-அலறல் கேட்டது. மூர்த்தி திரும்பி பார்த்தான். கோயில் வாசலில் யாரோ ஒருவர் தன் குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார்.

சத்யாவுக்கு அதை பார்த்து வயிற்றை இழுத்து ஏதோ பிடித்தது.

"பாவங்க அந்த பொன்னு"-சத்யா

"கொடுத்திடலாமா அவங்ககிட்ட"-மூர்த்திக்கு மனம் இளகியது.

"அதெல்லாம் வேணாம் வாங்க. அந்த பாப்பா எத்த தொலச்சிதோ. நாம போய் உங்களுதானு கேட்டு ஆமாம் சொல்லிட்டா என்ன பண்ணுவிங்க. அவங்க சொல்லறது சரியா,தப்பானு நமக்கு எப்படி தெரியும் ஆண்டவனா பாத்து கொடுத்திருக்கான். அத்தையேன் வேண்டாம்னு சொல்லுவானே. பொழைக்க தெரியாத ஆளா நீங்க இருந்தெல்லாம் போதும். வாங்க போலாம்."

பைக்கை ஸ்டாட் செய்யும் வரையில் மூர்த்திக்கு அந்த குழந்தையின் நியாபகம் இருந்தது.

சத்யா மூர்த்தியின் தோளை இருக்க பிடித்துக் கொண்டாள்.மூர்த்தியும் ஆக்ஸிலேட்டரை அதிகரித்தான். அந்த கோவிலை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போக வேண்டுமென பட்டது. அது பையில் உறுத்தியது.ஆக்ஸிலேட்டரை இன்னும் அழுத்தினான்.

எந்த நொடியில் பைக் நழுவியதுனு மூர்த்திக்கு தெரியவில்லை. வண்டி நழுவுவது தெரிந்தது.சத்யாவின் அலறல் கேட்டது.தலையில் ஏதோ மோதியது.

சண்முகம் அந்த பெட்டிக்கடையில் கவலையாய் இருந்தான்.மாசம் முடிய இன்னும் பத்து நாள் இருக்கு. விஜிலன்ஸ் ரெய்டுனு ஆபிஸ்ல ஓரே அமர்களமா இருக்க கையில காசு வரவு கொஞ்சம் கம்மியா ஆயிடுச்சு. கட்டிக்கிட்டு இருக்ற வீட்டுக்கு மணல் ்விலை ஏறி ்போனதால செலவு எகிறுது. பட்ஜெட்ட ஏத்தியாகனுமுனு காண்ட்ராக்டர் அடிச்சு சொல்லிட்டாரு.

அப்போதுதான் அந்த வழுக்கி ்விழும் அந்த பைக்கை பார்த்தான். அவசரத்துக்கு பொறந்தவனுங்கனு நினைத்துக் கொண்டான். விழுந்தவன் பையிலிருந்து ஏதோ தெரித்து திருப்பத்திலிருந்த குப்பைத் தொட்டியில் விழுந்தது. கடைக்காரனும் இன்னும் கடையிலிருந்ந இரண்டு பேரும் அவசரமாய் விழுந்தவர்களை பார்த்து ஓடினார்கள். இவனும் பதற்றமாய் ஓடினான். கணவன் மனைவி கோவிலில் இருந்து வந்திருப்பார்கள் போல.அர்ச்சனை சாமான்கள் எங்கு பார்த்தாலும்.விழுந்தவனுக்கு அடி பலமாய் இல்லை. அவன் மனைவிக்குதான் கொஞ்சம் தலை உடைந்திருப்பது போல இருந்தது. ஆனால் அவளுக்கும் நினைவு இருந்தது.இவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.இன்னும் கொஞ்சம் அங்கு கூட்டம் கூடியது.

மெல்ல குப்பை தொட்டி பக்கம் வந்தான். அது ஓரு பழைய பேப்பர் கீழே ்கிடந்தது. கர்சீப்பை கீழே போட்டு அதை எடுத்துக் கொண்டான்.ஆண்டவா நன்றி,ஓரு கதவை மூடி இன்னோரு கதவை திறந்திட்டனு மனசுக்குள்ள சாமி கும்பிட்டான்.

கட்டட ்வேலை சுறுசுறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது.சரவணன் கோபமாக இருந்தான். காலையில் கோவிலுக்கு போன ்நேரத்தை நொந்துக் கொண்டான்.அதை ஆசையாக ்வாங்கி மகளுக்கு கொடுத்திருந்தான்.காணாமல் போய்விட்டது.

"ஐயா"-ட்ரைவர் ஆதிகேசவன் குரல் ்கேட்டது.

"என்ன கேசவா?"-சரவணன்

"நீங்க வர சொன்னிங்களாமே?"-கேசவன்

"ஆமாம். உள்ள போனா எலக்டிரிசியன் ஜோசப்பு இருப்பான்,அவனை கூட்டிட்டு நம்ப மலர் எலக்ட்ரிக்கல்ஸ் போய்ட்டு இந்த வீட்டு அக்கவுண்ட்ல இந்த லிஸ்ட்ல இருக்க சாமான வாங்கி கொண்டு போய் நம்ப மாப்ள ்வீட்ல போட்டு கொடுத்திட்டு வந்திருங்க.அவன் ்கூடவே இரு கேசவா. கொஞ்சம் அசந்தா வேற எடத்துக்கு வேலைக்கு ஓடி போய்டுவான்.இவனலாம் நம்ப முடியாது.அப்படியே வெளிய இருக்க மண்ணுல ஓரு அரை லோடு எடுத்திட்டு போய் நம்ப மணியண்ணன் சைட்ல கொடுத்திட்டு அவர்ட்ட காசு ்வாங்கிட்டு வந்திடு.சரியா?" -சரவணன்.

"சரிங்கய்யா. பாப்பா எதையோ தொலைச்சிடுச்சாமே. அம்மா சொல்லிட்டு இருந்தாங்க."-கேசவன்

"பொறந்த நாளுனு ஆசையா வாங்கினேன். எவனோ களவானி பய கெளப்பிட்டு போய்ட்டான். எப்படிதான் ஓரு சின்ன புள்ளைக்கிட்ட இருந்து எடுத்திட்டு போக மனசு வருதோ? ஆண்டவன் இவங்களை சும்மா விடமாட்டான். சரி சரி சீக்கிரம் கிளம்பு அந்தாளு சண்முகம் வந்தா தொந்தரவு."-சரவணன்.

Wednesday, August 9, 2006

பயம்

சத்தியவாணி பூச்சி மருந்தைக் குடிச்சி செத்து போச்சு. சண்முகத்துக்கு சத்தியவாணி பக்கத்து வூடு.சண்முகத்தை எப்போதும் குரங்குனுதான் கூப்பிடுவா.அதனால அவனுக்கு அவளை கண்டாலே பிடிக்காது

ரண்டு நாள் முன்னாடிதான் கோடி வீட்டு கார்த்தி அவ தாவணி புடிச்சி இழுத்துட்டு தொடக்கூடாத எடத்த தொட்டுப்புட்டான்.அந்த கார்த்தி கலாட்டா செய்யயில சண்முகமும் கூட இருந்தான். நா போய் சாவ போறேனு மிரட்டிடு சத்தியவாணி ஓடினா.அன்னைக்கு அம்மா கையால விழுந்த வெளக்குமாத்து அடி சண்முகத்துக்கு தழும்பாய் இருந்துச்சு.அடி தாங்காம வூட்டை வுட்டு ஓடி போய், பக்கத்தூருல அவனோட மாமா ஊட்ல ஓக்காந்துக்கிட்டான்.சண்முகத்தோட அப்பா அன்னைக்கு நைட்டு அவனை தேடி மாமா வூட்டுக்கு சைக்கள்ல வந்து ரண்டு அடி வுட்டு போனாரு.

சனி,ஞாயிறு தாண்டி திங்ககெழம மாமா வூட்லெருந்து நேரா பள்ளிக்கூடம் போனாதான் அவனுக்கு தெரிஞ்சது. சத்தியவாணி ஞாயித்துகெழம நைட்டு செத்து போயிட்டானு. கார்த்தி பயலெயும் காணோம்.வூட்டு பக்கம் போனா ஓரே எழவு சத்தம்,ஓப்பாரி.

சண்முகத்துக்கு வயத்தை கலக்கிடிச்சு.அடாடா வூட்டுக்கு இப்ப போனா மாட்டிடுவோமுனு ஊர் கடைசில இருக்க மாந்தோப்புக்கு போய்ட்டான்.

பசிக்கு ரண்டு பழத்த அடிச்சி தின்னுட்டு,சட்டையை கழட்டி மரத்தடில போட்டு படுத்தான்.திடிருனு அவனுக்கு சலக்கு சலக்குனு கொலுசு சத்தம் கேட்டுச்சு. அலறி அடிச்சு சுத்துக்கும் பாத்தான்.யாருமில்லை.நெஞ்சு வலி அதிகமா இருந்துச்சு.கையை வேற வலிச்சுது.
யாரது? யாரதுனு கத்திக்கிட்டே தோப்புக்குள்ள ஓடுனான். கண் வேற அவனுக்கு மங்கிச்சு. அப்ப தூரத்துல அந்த ரோஸுக்கலர் தாவணி தெரிஞ்சுது. சண்முகத்துக்கு அழுகையா வந்திச்சு. சத்தியவாணி என்ன உட்டுடுனு கத்திக்கிட்டே ஓடினான். கால வேற ஏதோ இழுக்க அப்படியே கீழ விழுந்தான்.

அன்னைக்கு சாயங்காலம் சண்முகத்து வூட்லியும் எழவு இருந்திச்சி. சாமி எறங்கி செத்து போன சண்முகத்தையும், சினிமாக்கு போக காசு கொடுக்காத அம்மாக்காக பூச்சி மருந்து குடிச்ச சத்தியவாணி பத்தியும் எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. மாந்தோப்புக்கு சுள்ளி பொறுக்க போன லட்சுமி சண்முகம் சாமி வந்து மாந்தோப்புக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தத கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தா.