Wednesday, August 9, 2006

பயம்

சத்தியவாணி பூச்சி மருந்தைக் குடிச்சி செத்து போச்சு. சண்முகத்துக்கு சத்தியவாணி பக்கத்து வூடு.சண்முகத்தை எப்போதும் குரங்குனுதான் கூப்பிடுவா.அதனால அவனுக்கு அவளை கண்டாலே பிடிக்காது

ரண்டு நாள் முன்னாடிதான் கோடி வீட்டு கார்த்தி அவ தாவணி புடிச்சி இழுத்துட்டு தொடக்கூடாத எடத்த தொட்டுப்புட்டான்.அந்த கார்த்தி கலாட்டா செய்யயில சண்முகமும் கூட இருந்தான். நா போய் சாவ போறேனு மிரட்டிடு சத்தியவாணி ஓடினா.அன்னைக்கு அம்மா கையால விழுந்த வெளக்குமாத்து அடி சண்முகத்துக்கு தழும்பாய் இருந்துச்சு.அடி தாங்காம வூட்டை வுட்டு ஓடி போய், பக்கத்தூருல அவனோட மாமா ஊட்ல ஓக்காந்துக்கிட்டான்.சண்முகத்தோட அப்பா அன்னைக்கு நைட்டு அவனை தேடி மாமா வூட்டுக்கு சைக்கள்ல வந்து ரண்டு அடி வுட்டு போனாரு.

சனி,ஞாயிறு தாண்டி திங்ககெழம மாமா வூட்லெருந்து நேரா பள்ளிக்கூடம் போனாதான் அவனுக்கு தெரிஞ்சது. சத்தியவாணி ஞாயித்துகெழம நைட்டு செத்து போயிட்டானு. கார்த்தி பயலெயும் காணோம்.வூட்டு பக்கம் போனா ஓரே எழவு சத்தம்,ஓப்பாரி.

சண்முகத்துக்கு வயத்தை கலக்கிடிச்சு.அடாடா வூட்டுக்கு இப்ப போனா மாட்டிடுவோமுனு ஊர் கடைசில இருக்க மாந்தோப்புக்கு போய்ட்டான்.

பசிக்கு ரண்டு பழத்த அடிச்சி தின்னுட்டு,சட்டையை கழட்டி மரத்தடில போட்டு படுத்தான்.திடிருனு அவனுக்கு சலக்கு சலக்குனு கொலுசு சத்தம் கேட்டுச்சு. அலறி அடிச்சு சுத்துக்கும் பாத்தான்.யாருமில்லை.நெஞ்சு வலி அதிகமா இருந்துச்சு.கையை வேற வலிச்சுது.
யாரது? யாரதுனு கத்திக்கிட்டே தோப்புக்குள்ள ஓடுனான். கண் வேற அவனுக்கு மங்கிச்சு. அப்ப தூரத்துல அந்த ரோஸுக்கலர் தாவணி தெரிஞ்சுது. சண்முகத்துக்கு அழுகையா வந்திச்சு. சத்தியவாணி என்ன உட்டுடுனு கத்திக்கிட்டே ஓடினான். கால வேற ஏதோ இழுக்க அப்படியே கீழ விழுந்தான்.

அன்னைக்கு சாயங்காலம் சண்முகத்து வூட்லியும் எழவு இருந்திச்சி. சாமி எறங்கி செத்து போன சண்முகத்தையும், சினிமாக்கு போக காசு கொடுக்காத அம்மாக்காக பூச்சி மருந்து குடிச்ச சத்தியவாணி பத்தியும் எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. மாந்தோப்புக்கு சுள்ளி பொறுக்க போன லட்சுமி சண்முகம் சாமி வந்து மாந்தோப்புக்குள்ள ஓடிக்கிட்டு இருந்தத கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தா.

Monday, August 7, 2006

எதிர்மறை நியாயங்கள்

வாசலில் ஓரு வயதானவர் ஓருவரும், நடுத்தர வயது பெண்மணி ஓருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் கிரில் கேட்டில் கையை வைத்தவுடன் நிமிர்ந்து பார்த்தார்கள்.

"யாருங்க வேணும்?"

"என் பேர் கணேசுங்க. இங்க சண்முகமுனு ஓருத்தர் குடியிருக்காருங்களா? நான் அவர் பிரண்டுதாங்க."

"வாங்க வாங்க. நீங்க வருவிங்க சொல்லியிருந்தாரு.இப்பதான் டூட்டி முடிஞ்சு வந்தாரு.நீங்களும் அகரமுங்களா?"

"ஆமாங்க."

"நாங்களும் அகரம்தான். இவங்க எங்க அப்பா. "

"வணக்கமுங்க." -நான்

அந்த வயதானவர் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அவங்களுக்கு காது கேட்காது. விடுங்க."

"எங்க வூட்டுகாரரும் மாடில இருக்கவர் கூடதான் வேல பாக்குறார். நீங்களும் அவங்க கூடதான் இருக்கிங்களா?"

"இல்லிங்க.நான் ரயில்வேஸில வேலை பாக்கறேன்."

"அப்படியா? சரி நீங்க போங்க.போறவங்களை புடிச்சி ஏதாச்சும் கேட்டுட்டே இருக்கேன்."

மாடி ஏறி போனேன். ஓரு பத்துக்கு பதினொன்னு ரூம்.அதில் ஓரு சுருட்டிய பாய் ஓன்னு, கொஞ்சமாய் மடிக்கப்பட்ட துணிகள.ரூமை ஓட்டி ஓரு ஏழுக்கு பத்து சமயலறை சன்னல் இல்லாமல. சண்முகம் கதவை திறந்து வைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருந்தான்.

"சண்முகம் என்னடா பண்ணிட்டு இருக்க?"

"வாடா. இன்னிக்கு நைட் ஷிப்டும் போறேன்.அதான் இப்பவே சமையல முடிச்சிடலாமுனு.உள்ளுக்கு பொகையா இருக்கும். மொட்டை மாடில சேர் ஓன்னு கெடக்கும் பாரு அதில உட்காரு."

சண்முகம்,நான்,ராசு மூன்று பேரும் அகரத்தில் ஓன்னா ஐஞ்சாம் வகுப்பு வரை படிச்சோம்.அப்புறம் எங்கப்பாவும், ராசுவோட அப்பாவும் டவுனுக்கு வந்து வட்டிக் கடை வைக்க நாங்க டவுனுக்கு வந்திட்டோம்.சண்முகம் மட்டும் ஊரோட இருந்திட்டான்.நான் டிப்ளமோ படிச்சிட்டு ரயில்வேஸுக்கு வந்திட்டேன்.ராசு அப்பா தவறின பிறகு ராசு எங்கப்பாவோட சேந்து வட்டிக்கடைக்கு வந்திட்டான்.சண்முகம் ஐடிஐ வெல்டருக்கு முடிச்சிட்டு அவங்க அப்பா அண்ணணோட விவசாயம் பாத்திட்டு இருந்தான். அப்புறம் எங்கப்பாதான் ரயில்வேஸ் சப்காண்ட்ராக்டர் ஓருத்தர் ஷாப்பில வேலை வாங்கி கொடுத்தார். கொஞ்ச நாள் கழிச்சு அவனோட அக்கா மகளை அவனுக்கு கல்யாணம் கட்டிட்டாங்க.ஊர்லெருந்து வேலைக்கு வந்திட்டிருந்தவன் திடிருனு தனியா வீடெடுத்து தங்கவும் பிரச்சனை ஆகிடுத்து.அவங்கப்பா எங்கப்பாவை பஞ்சாயத்துக்கு கூப்பிட அவர் என்னை இங்க அனுப்பி வைச்சார்.

சமைச்சிட்டு வேர்த்து விறுவிறுத்து வெளியே வந்தான். ஓரு அலுமினிய சட்டியில் தண்ணி மோந்து முகம் கழுவினான்.

பக்கத்தில் மொட்டை மாடிக் கட்டையில் உட்கார்ந்தான்.

"என்ன கணேசு கீழ சிபிஐ என்குயரி முடிஞ்சுதா?"

"ஏண்டா கேட்கற. என் தலபுராணத்தையை கேட்டுதான் மாடிப்படி ஏற விட்டாங்க."

"நம்ம வூட்ல ரண்டு வயசுக்கு வந்த பொண்ணிருந்தா,நமக்கும் அப்படிதான். சரி வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?"

"நல்லாருக்காங்க. நீ ஏண்டா இப்படி கஷ்டபடுற? ஊர்லெருந்து வந்திட்டு இருந்தெனா,சமையலெல்லாம் படுத்தாதுல.வாடகை கெடையாது. அங்கென பாவம் இப்போ வளர் தனியா கெடக்கு. அப்பா அம்மாலாம் தனியா இருக்காங்க."

"ஊர்ல கம்ளெய்ண்ட் பண்ணாங்களா? சரி இங்கென நின்னு ரொம்ப அரட்டை அடிக்க வேண்டாம். பக்கத்தில போய் ஓரு டீ சாப்பிட்டுடெ பேசலாம்."

மொட்டை மாடியில் கொடியில் இருந்த சட்டையை உதறி மாட்டிக் கொண்டான்.டீக்கடைக்கு போகும் வரையில் அவன் ஓன்னும் பேசவேயில்லை.அப்புறம் கொஞ்சமாய் யோசித்த ்பின் பேச ஆரம்பித்தான்

"கணேசு வெல்டிங் பண்ணிருக்கியா?"

"ஏண்டா கேட்கற? நீ கடையில பண்ணி பாத்துருக்கேன். அவ்வளவுதான்."

"விடாம நீ ஓரு நாலு மணி நேரம் வெல்ட் அடிச்சாலே கண்ணு எரியும். ஓன்னும் புரியாது. படுத்தா தூக்கம் வராது. கண்ணை மூடினாலும் வெளிச்சம் சனியன் மாதிரி வந்து நிக்கும். தெரியுமா?"

என்ன சொல்லனும்னே எனக்கு தெரியவில்லை. பொதுவா ம் என்றேன்.

"பன்னென்டு வருஷமா வெல்ட் அடிக்கிறேன். ஓரு நாளைக்கு பத்து பன்னென்டு மணி நேரம் வேலை.சமயத்தில கண்ணு ரண்டையும் புடுங்கி போட்டுலாமா தோனும் தெரியுமா?"

நான் மவுனமாக இருந்தேன். அப்போதைக்கு அதுதான் முடிந்தது.

"என் பசங்க இந்த கஷ்டம் படக்கூடாதுடா. நல்ல பள்ளிக்கூடம் போகனும்.நல்லா படிக்கனும். பேரிய வேலைக்கு போகனும்.அகரத்தில இதெல்லாம் இல்லடா. கஷ்டப்பட்டு சம்பாரிச்சாலும் ஆசையா புள்ளைக்கு ஓன்னும் வாங்க முடியல. மாச சம்பளம் வந்தா அப்பாட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. அன்னைக்கு பையன் திருவிழால ஓரு கிலுகிலுப்பை கேட்கறான். வாங்க முடியல. இவனுக்கு வாங்கினா அண்ணண் பசங்களுக்கும் வாங்கனும்,முப்பது ரூபா ஆகும், சும்மா வானு அப்பா சொல்றாரு. இவனை மட்டும் அகரத்திலேருந்து கான்வண்ட் அனுப்பக்கூடாது,பெரியவன் புள்ளைங்க ஏங்கிடும்கறாரு. நான் படிச்ச படிப்புக்கு இவ்வளவுதாண்டா சம்பாதிக்க முடியும்.மூனு பசங்களை கான்வெண்ட் போடுறதுக்கு வருமானமில்லை. அண்ணன் மாசம் அப்பாட்ட எவ்வளவு தாராரு, அப்பாட்ட எவ்வளவு காசு இருக்குனு கேட்டா ஏண்டா என்னியவே கணக்கு ்கேட்கறியானு அவருக்கு கோவம் வந்து கன்னா பின்னானு திட்டறாரு.அதான் வந்திட்டேன்.ஓன்னைய பதினெட்டு வருஷம் வளத்ததுக்கு இதான் பலனாங்றாரு. நான் என்ன பேங்க் டெப்பாஸிட்டா மெச்சூர் ஆனதும் அவருக்கு வருமானம் ்கொடுக்கறதுக்கு. அ்ப்படியே ்பாத்தாலும் பன்னென்டு வருஷம் அவருக்கு சம்பாரிச்சு கொடுத்திருக்கேன். எனக்கு ஓன்னும் வேணானுமிட்டு வந்திட்டேன்.ராசுட்ட கொஞ்சம் பணம் வாங்கியிருக்கேன் வட்டி வேண்டாம், அசல் மட்டும் முடிஞ்சப்ப கொடுனுட்டான்.ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்கேன்.வந்தா கம்பேனி முதலாளி கேஸ் கனெக்ஷன் ்வாங்கி தாரேன்னாரு. வளருதான் என்கிட்ட ்கோவிச்சிட்டு வர மாட்டேன்டு இருக்கு. அக்காட்ட சொல்லிருக்கேன், அக்கா நான் பாத்து கூட்டிடு வரேனுச்சு. பாப்போம் என்னாகுதுனு."

அவன் சொல்லி முடிக்கும் வரையில் 'ஙே'னு பாத்திட்டு இருந்தேன். எனக்கு இவன் ்சொன்னதும் நியாயமா இருந்துச்சு. நேத்திக்கு இவங்கப்பா எங்கப்பாட்ட புலம்பினதும் நியாயமா இருந்துச்சு.

டீ சாப்டுட்டு நான் அப்படியே நான் கிளம்பிட்டேன்.அவன்ட்ட போய் என்னனு சொல்ல அவன்தான் தெளிவா இருக்கானே.

Friday, August 4, 2006

பயணம்

அசாத்தியமான அமைதியுடன் இருந்த விண்வெளியில் அந்த ஓடம் தன் பாதையை தேடி மெதுவாக திரும்பிக் கொண்டிருந்தது. ஓடத்தின் வெளியிலிருக்கும் அமைதி அதன் உள்ளே இல்லை.ஓடத்தின் மூன்று உறுப்பினர்களும் மிக அவசரத்தில் இருந்தனர்.

"மேஜர் நாம் டைட்டனின் ஆர்பிட்டை விட்டு வெளியே வரும் நேரத்தை குறைக்க வேண்டும். மின்காந்த புயல் நம்மை இன்னும் இரண்டு மணி நேரத்தில் நெருங்கிவிடும். ஓடத்தின் இன்ஜின்களை அதன் முழு வேகத்துக்கு முடுக்குங்கள். பூமியுடன் ஏற்கனவே நாம் தொடர்பை இழந்து விட்டோம். "

"கேப்டன் மின் காந்த புயல் வடக்கில் இருந்து வருகிறது.ஆனால் வேறோரு விசை நம்மை நம் பயண பாதைக்கு நேர் எதிராக கிழக்கு நோக்கி இழுக்கிறது. இஞ்சினை முழு வேகத்திற்க்கு முடுக்கியும் பயனில்லை. கீழ் தளத்திலிருந்து சார்ஜண்ட் இஞ்சின் அதன உச்சக்கட்ட உபயோகத்தில் உள்ளதென கூறுகிறார். இப்போது என்ன செய்யலாம்? "

"சார்ஜண்ட் இஞ்சின் குளிர்பான்களை முழுதுமாக திறவுங்கள். மேஜர் இஞ்சினின் வேகம் மட்டுபடுத்தி கிழக்கு நோக்கி திருப்புங்கள். மின்காந்த புயல் வருவதற்கு முன் நாம் இங்கிருந்து அகல வேண்டும்."

"கேப்டன் பயணபாதையை விட்டு விலகுவதை பூமியில் உள்ள தளம் விரும்பாது.கிழக்கில் என்னவிருக்கும் என யாருக்கும் தெரியாது. அதில் எனக்கு விருப்பமில்லை. தொடர்ந்து இஞ்சினை உச்ச வேகத்தில் வைத்து மேற்க்கு நோக்கி முயற்ச்சிக்கலாமே?"

"காந்த புயல் வீரியம் மிக்கது. நம் ஓடத்தின் கம்பியுட்டர் அதை கண்டு கதறுகிறது. கிழக்கு குறித்து எந்த எச்சரிக்கையும் அது தரவில்லை,இன்னும் சிறிது நேரம் நாம் விவாதித்து கொண்டிருந்தால் நமக்கு மூன்று மலர் வளையங்களே பூமியில் மிஞ்சும்.பாதுகாப்பான தூரம் சென்ற உடன் பூமியை தொடர்பு கொண்டு பாதையை வரையலாம். இப்போது ஓடத்தை திருப்புங்கள்."
ஓடம் கிழக்கு நோக்கி திரும்ப ஆரம்பித்தது. கிழக்கிலிருந்து வரும் அந்த ஈர்ப்பு விசையை கொண்டு டைடனின் ஆர்பிட்டிலிருந்து ஓடம் விலக ஆரம்பித்தது.

மேஜர் ஆதவன்,கேப்டன் ஈஸ்வரி,சார்ஜன்ட் தினேஷ் மூவரும் சனி கிரகத்துக்கான துணைக்கோளான டைடனுக்கு பயணம் தொடங்கி ஓரு வருடம் ஆகிறது. வெற்றிகரமான கள ஆய்வுக்கு பிறகு இன்று பூமி திரும்பும் முதல் நாள். ஓரு மணி நேரத்தில் ஓடம் பாதுகாப்பான தொலைவு சென்றுருந்தது.

"கேப்டன் நாம் பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறோம். ஆனால் பூமியுடன் தொடர்பு கொள்ளமுடியவிலையே. கிழக்கின் இழுவிசையும் அதிகரிக்கிறது."-ஆதவன்.

"கிழக்கில் என்ன இருக்கிறது. எது நம்மை இழுக்கிறதுவென பார்க்கவேண்டும்.சார்ஜன்ட் கம்பியுடரை எலக்டரானிக் தொலைநோக்கியை கிழக்கில் திருப்ப சொல்லுங்கள்"-ஈஸ்வரி

"கேப்டன் அதற்க்கு அவசியமில்லை என நினைக்கிறேன்.தாங்கள் இருவரும் கீழ் தளம் வாருங்கள். இந்த அதிசயத்தை பாருங்கள்"-தினேஷ்.

"மேஜர் நீங்களும் வாருங்கள், ஓடத்தை கம்பியுட்டரின் கட்டுப்பாட்டில் விட்டு வாருங்கள். "

கீழ் தளம்.மூவரும் தங்கள் கண்களை நம்ப முடியாமல் நின்றிருந்தனர். கரிய வான்வெளியில் பிரகாசமான ஓரு வெள்ளை நிற சுழல் ஓன்று இருந்தது.அது இவர்களை நோக்கி வருவது போல இருந்தது.

"தினேஷ் அது எவ்வளவு தொலைவில் உள்ளது"-ஈஸ்வரி

"பத்தாயிரம் ஓளி வருடத்திற்க்கு அப்பால் உள்ளது. அது மிக வேகமாய் நகருகிறது."-தினேஷ்

"இதனை நம் கம்பியுட்டர் பதிவு செய்கிறதல்லவா.ஆகா அற்புதமாய் இருக்கிறது."-ஆதவன்.

"அதன் பிரகாசம் அதிகமாகிறதே. கேப்டன் நமக்கும்,அதற்க்குமுள்ள இடைவெளி குறைகிறது.
இப்போது எட்டாயிரம் ஓளி வருடமே இடைவெளி உள்ளது. நிமிடத்திற்க்கு ஆயிரம் ஓளி வருடமென்பது நம்ப முடியா வேகம்"-தினேஷ்

"மேஜர் நம்ப முடியாத விஷயங்கள் இங்கு நடக்கின்றன. கம்பியுட்டரை பாருங்கள், நகருவது அந்த சுழல் அல்ல. அது நாம். இந்த ஓடம் இத்தனை வேகத்திற்கு எப்படி எரிந்து போகாமல் உள்ளதென தெரியவில்லை. இந்த ஜீ-போர்ஸை நம் உடம்பு எப்படி தாங்குகிறதென்பதும் தெரியவில்லை. இனி நாம் செய்ய எதுமிருக்காதென நினைக்கிறேன்"-ஈஸ்வரி.

மூவரும் கண்ணிமைக்க முடியாமல் அந்த பிரமாண்டத்தை பார்த்துக் கொண்ருந்தனர். அந்த ஓளி சுழல் அவர்களுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தது. அவர்கள் உடல் லேசாக ஆரம்பித்தது.நினைவு குறைய ஆரம்பித்தது. எங்கும் வெள்ளை நிற ஓளி இருந்தது,உடலுக்கு உள்ளேயும்,வெளியேயும் அது பரவுவது அவர்களுக்கு தெரிந்தது.பனி சூரியனில் உருகுவது போல அவர்களது உடல் உருக ஆரம்பித்தது. ஆனால் வலியில்லா ஓரு நிலையில் இருந்தார்கள்.
நினைவு சுத்தமாக போனது.

ஆதவன் கண் விழித்தான். அந்த வெண்ணிற சுழல் காணாமல் போயிருந்தது. அகண்ட வெளியின் கரு நிறம் எங்குமிருந்தது. கம்பியுட்டர் சீராக இயங்கி கொண்டிருந்தது. அதற்க்கு உயிருட்டும் போட்டா செல்கள் செத்துக் கொண்டிருந்தன.என்ன மாயமோவென அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தான் தினேஷை காணவில்லை. ஈஸ்வரி மட்டும் அரை நினைவில் முனகி கொண்டு இருந்தாள். மெல்ல நகர்ந்து அவளின் அருகே சென்றான்.

"கேப்டன் மெல்ல கண் திறங்கள்.இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம். "

"எங்கே இருக்கிறோம்?"

"ஆண்டவனுக்கே வெளிச்சம். ஓடம் குற்றுயிரும் குலை உயிருமாய் உள்ளது.தினேஷைதான் காணவில்லை. "

"நமக்கு சிறிது ஓய்வும் உணவும் தேவை. தினேஷ் முதல் தளம்தான் சென்றிருப்பார்.நாம் அனைவரும் அந்த சுழலில் உருகுவதை கண்ணால் பார்த்தேன்.எப்போது இது போல் முழுதானோமென தெரியவில்லை. "

"ஆதவன் வெளியே பாருங்கள். பூமியை போல் ஓரு கிரகம் தெரிகிறது. அதே நீல நிறமாய் நாம் அதனிடமிருந்து மிக அருகிலிருக்கிறோம்."

"கேப்டன் அது என்னவென்று தெரியவில்லை. இது பூமியாக இருந்திருந்தால் நம் ஓடத்தின் கம்யுட்டர் பூமியின் சாட்டிலைட்டுகளும் தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே. இன்னமும் நமக்கு எந்த தொடர்பும் இல்லையே. "

"இது பூமிதான் இங்கு பாருங்கள்.கம்பியுட்டரின் அளவுக்குறியிடுகளும்,எஞ்சி இருக்கும் போட்டோ செல்களும் சூரியனை தெளிவாக காட்டுகிறன. "

"கேப்டன் போட்டோ செல்கள் மிக குறைவான அளவே உள்ளன. நாம் அவசரகால ஊர்தியைதான் பயன்படுத்த வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் கம்பியுட்டர் சாக போகிறது.அதன் பின் இந்த ஓடம் மிக பெரிய சவப்பெட்டியாகதான் பயன்படும். நான் தினேஷை தேடி வருகிறேன்.நீங்கள் அவசர ஊர்தியை தயார் செய்யுங்கள். "

ஈஸவரி அவசர ஊர்திக்கு விரைய, ஆதவன் தினேஷை தேடி முதல் தளம் சென்றான்.அங்கு அவனை காணவில்லை. கம்பியுட்டரும் அவனையும்,ஈஸ்வரியையும் தவிர யாருமில்லை என்று சொல்ல குழப்பமாய் கீழே வந்தான்.

"கேப்டன் தினேஷை காணவில்லை.கம்பியுட்டர் அவர் ஓடத்தில் இல்லை என்கிறது. "

"தேட நேரமில்லை மேஜர்.இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓடத்தின் போட்டோ செல்கள் தீர போகிறன. உடனே வாருங்கள்"

ஆதவன் விரைவாய் வந்து கலத்தில் ஏறிக்கொண்டான்.

கேப்டன் ஊர்தியை எங்கு செல்ல பணிந்துள்ளிர்கள்.?

இந்து மகா சமுத்திரத்திலுள்ள நமது தளத்திற்க்கு செல்லுமாறு பணித்துள்ளேன். எல்லா தகவல் தொடர்பு சானல்களும் திறந்து வைத்துள்ளேன்.நீங்கள் தயாரா

நான் தயார். நீங்கள் கலத்தை செலுத்தலாம்.

அவசர ஊர்தி ஓடத்தை விட்டு வெளியேறியது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கலத்தில் அவர்கள் கண்ணை மூடி தினேஷிற்கு அஞ்சலி செலுத்தினர்.

அவசர ஊர்தியின் இஞ்சின்கள் அணைய கதவை திறந்து பார்த்தனர். தண்ணீருக்கு பதில் தரையில் இருந்தனர். அவர்களால் நம்ப முடியவில்லை. ஊர்தியின் குறியிட்டு கருவி அவ்விடத்தை இந்து மகா சமுத்திரவெனவே காட்டியது.

கேப்டன் என்னவிது கடல் காணாமல் போகிவிட்டது.

ஆமாம் ஆதவன்.இது பெருங்காடாக இருக்கிறதே.

வானம் தெளிவாக.காற்று சுகமாக இருக்கிறதே.

தொடர்பு கருவிகள் ஓன்று கூட பணி புரியவில்லை.

சாட்டிலைட்டுகள் எங்கே போயின

ஆதவன் இந்த ஊர்தியின் கணக்குபடி சாட்டிலைட்டுகளே இல்லை.

மக்களை தேடி நடக்க வேண்டியதுதான்.

நீங்கள் அந்த பயணத்திற்க்கு எடுத்து வையுங்கள். நான் அங்கு தெரியும் ஆப்பிள் மரத்திலிருந்து கொஞ்சம் பழங்களை எடுத்து வருகிறேன்.

ஈஸ்வரி போன இடத்தில் ஓரும் பேசும் பாம்பை பார்த்தாள்.

பின் ஆதவனும், ஈஸ்வரியும்,ஆப்பிள் பழத்துடன் ஓரு நெடும்பயணம் தொடங்கினர்.

Thursday, August 3, 2006

அவளும் நானும் மற்றும் ஓரு கேள்வியும்

இரவு அடித்த ஓல்டு மாங்க் இன்னும் கிறுகிறுவென்று இருந்தது. இன்னோரு கட்டிங் விட்டு கிங்ஸ் அடித்தால் பரவாயில்லையாக இருக்குமென தோனியது.

"ஆரத்தி எடுத்துக்கங்கோ"-குரல் கேட்டு கண்ணை திறந்தால் குருக்கள் ஆரத்தியை காட்டிக் கொண்டு நின்றிருந்தார். தொட்டு கண்ணில் ஓற்றிக் கொண்டு சன்னதி விட்டு வெளியே வந்தேன்

"டேய் தூங்காதேடா. இந்த கருமத்துக்குதான் வராதேனு சொன்னேன்"-சண்முகம் கோபமாக கூறினான்.

"குளிச்சியாடா" - அரவிந்தன்

"பாத்ரூம்குள்ள போய்ட்டுதான் வந்தான்"- சண்முகம்

யாரும் என் பதிலை எதிர் பார்த்ததாய் தெரியவில்லை. எனக்கும் பதில் சொல்ல முடியவில்லை. தலைவலி பின்னி எடுத்தது. ஒரு கட்டிங் விட்டே ஆக வேண்டும்

அது கல்லுரியின் கடைசி வருடம். காம்பஸ் இன்டர்வியுவில் சண்முகத்துக்கு வேலை கிடைத்திருந்தது. கோவில் போய் விட்டு சினிமா போகலாமென பேசிக்கொண்டதால் நானும் கிளம்பி விட்டேன். சண்முகத்தோடு வெளியே வந்தால் எல்லா செலவும் அவனதே. சாப்பாடு, சினிமாக்கு ஆசை. அதனால் கோவிலுக்கும் வர வேண்டியதாயிற்று. சண்முகத்திற்கு தோழர்,தோழியர் வட்டம் சற்று பெரிது. எனக்கு வட்டமே கிடையாது. ஓரு புள்ளி மட்டுமே இருந்தது. அதுக்குள்ள ஓல்டு மாங்க் மற்றும் ஓசி தம் பக்தர்கள் கொஞ்சம் இருந்தார்கள். அவர்கள் அன்னியில் சண்முகம் மட்டும் அந்த புள்ளிக்குள் வேறு வழியில்லாமல் இருந்தான்.

அன்று கோவிலுக்கு சண்முகத்தின் நட்பு வட்டம் முழுதும் வந்து இருந்தார்கள். பஸ்டான்ட் பக்கத்திலுள்ள ஓரு கடையில் சாப்பாடு. இரண்டு கடை தள்ளி ஓரு ஓய்ன் ஷாப் இருந்தது.சண்முகத்திடம் காசு கேட்க முடியாது. திட்டுவான்.

"சண்முகம் ஓரு நெய் ரோஸட் சொல்லிடு. நான் ஓரு தம் போட்டு வரேன்"-நான்

"வெறும் ரோஸ்ட் சாப்பிடமாட்டியோ?"

"சும்மா சொல்லுடா.ஏன் கரையிற?"

"சரி . சரி வந்து தொலை."

தம்மை பத்து வைச்சி இழுத்தால் தலை வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. அப்போது அவள் என்னை பார்த்து வந்தாள்.அவள் பெயர் ரம்யா.என் வகுப்புதான். இந்த நான்கு வருடங்களில் நாங்கள் அதிக பட்சம் நான்கைந்து வார்த்தைகள் பேசி இருப்போம்.என் யோசனை எக்ஸ்பிரஸ் வேகம் எடுப்பதற்க்குள் மிக அருகில் வந்துவிட்டாள். வாயில் இருந்த புகையை எந்த பக்கம் ஊதுவது என நான் முடிவெடுப்பதற்க்குள் ஹாய் என்றாள்.

"என்ன ரம்யா,சாப்பிடலயா?"- அவசரமாக கேட்டதில் புகை அவள் முகத்தில் பட்டது.அவள் முகம் சுருங்கியது.

எனக்கு என்னவோ போல் ஆனது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதுமென இருந்தது.

"நான் இப்பதான் ஆர்டர் பண்ணிணேன்.வர கொஞ்ச நேரமாகுமாம்.அதான் காத்தோட்டமா இருக்குமேனு வெளில வந்தேன்"-ரம்யா

"சாரி ரம்யா.புகை மேல பட்டிடுச்சு"-வேறு வழியில்லாமல் சிகரட்டை கீழே போட்டேன்.காலையில்தான் ரூம் மேட் சட்டை பாக்கெட்டிலிருந்து இரண்டு எடுத்து வந்திருந்தேன். ஓன்று போய் விட்டது.மனசுக்கு கஷ்டமாக இருந்தது. இவளை என்ன பண்ணலாமென யோசிக்கையில் திரும்ப ஓயின் ஷாப் கண்ணில் பட்டது.

"ரம்யா ஓரு இருபது ருபாய் சில்லறையாய் கொடேன்.வீட்டுக்கு ஓரு போன் பண்ணனும்.நூறு ரூபாய்க்கு கடையில் சில்லறை இல்லை. தியேட்டர்ல மாத்தி தாரேன்"- கேட்டு பார்த்தேன்.

"இந்தா வைச்சுக்கோ"-யோசிக்காமல் கொடுத்தாள். மனசாட்சி உறுத்த ஆபத்துக்கு பாவமில்லையென வாங்கி கொண்டேன்.

"நீ உள்ள போ ரம்யா. நான் போன் பண்ணிட்டு வந்திதிடரேன். சண்முகத்திட்ட சொல்லி என்னோட ஆர்டர் கேன்சல் பண்ண சொல்லிடு."

அவள் கடைக்குள் திரும்ப காத்திருந்து அவசரமாக போய் ஓரு கட்டிங் விட்டு வெளியே வந்தால் நல்ல வேளையாக யாரும் கடைக்கு வெளியே இல்லை. சரி தோசையிருந்தால் இரண்டு வாய் போடலாமென சாப்பாடு கடைக்குள் நுழைந்தால் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பினால் ரம்யா.

"எல்லாரும் பஸ்டான்ட் போயாச்சு. நான்தான் நீ போன் பண்ணிட்டு வருவேனு வெய்ட் பண்ணினேன்.வா போகலாம்."

எனக்கு அவளை பார்த்ததும் வாய் வழியா இதயம் வந்திடும் போல இருந்தது.

சண்முகம் சிவனாக மாறி என்னை எரித்து விடுவது போல் பஸ்ஸ்டான்டில் நின்றிருந்தான். பஸ் காலியாக இருந்தது. எல்லாரும் முன் வழியாக ஏற நான் அவனுக்கு பயந்து கடைசி சீட்டில் முலையில் உட்கார்ந்து கொண்டேன். முன்னால் உட்கார்ந்தவர்கள் எல்லாம் சிரிப்பும் பாட்டுமாக வந்தார்கள்.

"முன்னால வாடா"-அரவிந்தன்

"அவன் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கிமினு அங்க இருக்கான். இருந்திட்டு போறான் விடு"-சண்முகம்.

நான் வழக்கம் போல எதுவும் சொல்லவில்லை. நேற்றைய களைப்பும்,இன்றைய மப்பும் கலக்க எனக்கு அவர்கள் பேசுவது கொஞ்சம் மந்தமாய்தான் கேட்டது.

"எனக்கும் கொஞ்சம் காத்து வேணும்"-ரம்யா.

சொன்னதோடு மட்டுமில்லாமல் எழுந்து என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.கொஞ்ச நேரம் கழித்து அவள் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். மிக மெதுவாக பேசினாள்.மிருதுவாக பேசினாள். என்னை பார்த்து ஏதோ வேறு கேட்டாள். பஸ் ஓடும் சத்தம், பசியோடு வேறு காதை அடைக்க அவள் உதடு அசைவது மட்டும்தான் எனக்கு தெரிந்தது , பேசுவது புரியவில்லை.என்னால் ஓரு மாதிரி மையமாக தலை ஆட்டதான் முடிந்தது.அவ்வபோது அவளுக்கு கண் வேறு கலங்கியது.யாரும் பார்க்காத போது கண்ணை துடைத்துக் கொண்டாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை.பேசினால் நாக்கு குளருமோவென பயம் வேறு.அடுத்த அரை மணி நேரம் ஓரு யுகமாய் இருந்தது. அவளை பார்க்கவும் பாவமாய் இருந்தது.என்ன கஷ்டமோவென இரக்கமாகவும் இருந்தது.

பஸ் விட்டு இறங்கவும் தலை சுத்தலும்,மன பாரமும் அதிகரித்து இருந்தது.ரம்யா பக்கத்திலியே இருந்தாள்.தியேட்டர் போய் படம் பார்த்து ஹாஸ்டல் போகும் வரை அவள் என்னை விட்டு நகரவில்லை,ஆனால் நல்ல வேளையாக எதுவும் பேசவில்லை. சண்முகம் மட்டும் என்னை அடிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.நானும் அவன் திட்டுக்கு பயந்து அவன பக்கம் போகவேயில்லை.

அதற்கப்புறம் இரண்டே மாதம்தான். கல்லுரி முடிய ஆளுக்கு ஓரு பக்கம் போயிவிட்டோம்.
கல்லுரியில் இருந்த மீதி நாட்கள் எல்லாம் பார்த்தால் சிரிப்பாள். நானும் ஓரு தூரத்தில் இருந்து சிரித்து விட்டு ஓட்டி விட்டேன்.அன்றைக்கு என்ன சொன்னாளோ அது ஓரு கேள்வியாகவே இருந்தது.

மூன்று வருடங்கள் கழித்து ரம்யாவை ப்ராங்பர்ட்டில் ஓரு கான்பரன்ஸில் பார்த்தேன். அதே சிரிப்பு. பழைய தோழர்களை பற்றி அக்கப்போர் பேசி முடிக்கையில் மீண்டும் அதே கேள்வி விக்ரமாதித்தனின் வேதாளமாய் வந்தது.அவளிடம் கேட்கலாமா? வேண்டாமா?

Tuesday, August 1, 2006

உறவுகள்

கடலை வருடி வரும் காற்று மாலை வெயிலின் இளம் சூட்டோடு இருக்க மெல்ல கடல் கால் தொட கை கோர்த்து நின்றிருந்தார்கள்.

இருபது நாளாச்சு உன்னை பாத்து. இருக்கவே முடியலடா கண்ணம்மா - அவன்

என்னாலயும் தான். வேற சிந்தனையுமே இல்லாம போயிடுச்சு.-அவள்

ஆமாம் ஏன் இன்னைக்கு லேட்?

கிளம்பும் போது அம்மா வந்துட்டாங்க, கண்ண்ன் வேற நொய் நொய்னு.

அடாடா.அப்புறம் என்ன பண்ணின. வர வர கண்ணன் தொந்தரவு தாங்க முடியல.

என்ன பண்றது அவ்வளவுதான் அறிவு.

கவிதையாய் மனசுடா உனக்கு. உன்ன போய் படுத்திக்கிட்டு

கவிதை ஆனதே உன்னாலதானே. கவலை படாதே. இன்னும் பத்து நாள்தான்.

சினிமா போலாமா?

ச்சீ போடா.அங்க போனா கைய வச்சிட்டு இருக்க மாட்டேங்கற.

என் சுடிதார் சொர்க்கமே, அங்கங்க கை பட்டா நீ குறைஞ்சிட மாட்ட.

மானங்கெட்டவனே. உருப்படாம பேசு. போகாட்டி விடவா போற. போலாம் வா.

ஆட்டோ பிடிக்கனும். வண்டியை ரிப்பேருக்கு விட்டுருக்கேன்

வரும் போது ஆட்டோல பயங்கரமா சார்ஜ் பண்ணிட்டான் தெரியுமா. பிராடு பசங்க
சான்ஸ் கிடைச்சா வாய்க்கு வந்த ரேட் கேட்கறாங்க தெரியுமா. ஏமாத்தறதுனா வெல்லக்கட்டி சாப்பிடற மாதிரி. நான் உன்ன பாக்க வர டென்ஷன்ல ஓன்னும் சொல்ல்ல.யாரும் உண்மையாவே இருக்க மாட்டேங்கறாங்க. அடுத்தவங்க அவசரத்தை யுஸ் பண்ணி ஏமாத்ததான் பாக்கறாங்க.

அதனாலதான் இத கலியுகம் சொல்லறாங்க.கவலை படாதே கண்ணம்மா. வண்டி ஓட்ட சொல்லி தாரேன்.ஸ்குட்டி மாதிரி ஓரு வண்டி வாங்கிக்கோ. இந்த அவஸத்தையில்லாம் இருக்காது.

ஸ்குட்டியை சாக்கா வச்சி நீ ரொம்ப கனவு காணாதே. ட்ராபிக்ல வண்டி ஓட்டாதேனு விட்ல கன்டிசனா சொல்லிட்டாங்க. ஆட்டோதான் எனக்கும் பழகி போயிடுத்து.

மெல்ல கடல் மண்ணில் கால் புதைய நடக்க ஆரம்பித்தார்கள்.

அவள் போன் சினுங்கியது.

அடாடா வீட்லருந்து போன். ஓரு நாள் பிரியா இருக்க முடியல.

ஏங்க நொய் நொய் பண்ணாதிங்க. எனக்கு போன் பண்ணாதிங்க ஆபிஸ் மீட்டிங் இருக்குனு சொன்னேன்ல. நான் வர லேட்டாகும். நீங்க இந்தியால இருக்க போற இன்னும் பத்து நாள் வெக்கேஷன்ல குழந்தைகளோட வீட்ல இருங்க. சினிமாலாம் விசிடி வாங்கி பாத்துக்கலாம். அம்மா எனக்கு சாப்பாடு வைக்க வேண்டாம் சொல்லுங்க. ஈவினிங் லேட்டா தங்கறதால ஆபிஸ்லியே சாப்பாடு உண்டு. இப்ப போன வைங்க.நான் வீட்டுக்கு கிளம்பையில கால் பண்ணறேன்.-போனை வைத்தாள்.

யாரு? கண்ணனா-அவன்

ம்-அவள்.