Tuesday, December 12, 2006

மேய்ச்சல் 4

புது வருடம் வரப் போகிறது. கலிபோர்னியாவில் குடியிருந்த போது புது வருட இரவை கொண்டாட சான்பிரான்சிஸ்கோ யுனியன் ஸ்கோயர் போவது வழக்கம். ஆர்ப்பாட்டமாய், ஆரவாரமாய் போகும். வர்ஜினியா வந்த பின் யார் யாரோ ஆரவாரமாய் கொண்டாடுவதை தொலைக்காட்சியில் பார்த்து முடித்துக் கொள்வதே திருப்தியாய் உள்ளது.

விதர்ப்பாவில் கிராமத்தை விற்பதற்கு விவசாயிகள் முன் வந்துள்ளனர். டோரிலி கிராமத்தை சேர்ந்த அவர்கள் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக தங்கள் கிராம நிலங்களை விற்க முன் வந்துள்ளனர். இதற்காக மத்திய அமைச்சர் சரத்பவாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பருத்தி விவசாயிகளான அவர்களுக்கு நல்ல மழை இருந்தும் இந்த வருடம் விளைச்சல் போதவில்லை. கடன் சுமை தாங்காமல் கூலி வேலைக்கு போய் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம் வாழ்க்கை முறையாகவும் இல்லாமல், தொழிலாகவும் இல்லாமல் இடை நிலையில் நின்று கொண்டிருக்கிறது.

விதர்ப்பாவை பொறுத்தவரை எதனால் இந்த வருடம் விளைச்சல் சரியில்லை? போன வருடமும் இதே பிரச்சனையா? கடன் யாரிடம் வாங்கியிருக்கிறார்கள்? கடன் தொகை எதில் செலவு செய்யப்பட்டுள்ளது? யார் அவர்களை இவ்வருடம் பருத்தி பயிரிட ஆலோசனை கொடுத்தது? என்ற பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. அதை பற்றி சிஎன்என்-ஐபின் செய்திகளில் விவரம் இல்லை.

தஞ்சை பக்கம் சொந்தக்காரர்கள் விவசாயத்தை பார்த்த போது மழை அதிகம் பெய்தால் பயிர் மழையில் மூழ்கிவிடும். குறைவாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் பிரச்சனை. மழை ஒரு அளவாக பெய்தால் மட்டுமே பிரச்சனை இல்லை. என் உறவினர் இது தாள முடியாமல் இந்த முறை சவுக்கு போட்டு விட்டார். இன்னோரு பிரச்சனை என்னவென்றால் குறுகும் நில அளவு. உதாரணத்திற்கு தாத்தாவிடம் 10 ஏக்கர் இருந்தது. அடுத்த தலைமுறையில் அது இரு மகனிடம் 5 ஏக்கராய் பிரிந்தது. அதற்கு அடுத்த தலைமுறையில் இரண்டரை ஏக்கராய் பிரிந்தது. இவ்வாறு நிலம் குறுகி கொண்டே போகிறது.குறுகிய நிலத்தில் பயிரிட லாபம் குறையும் என்றும் உறவினர் கூறினார்.

மிதமான மழை வருவது இனி குறையும் என வானிலை ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். மழை பொழிவு இனி குறைவாக இல்லையென்றால் மிக அதிகமானதொரு நிலையிலியே இருக்கும். பூமியின் வெப்ப அதிகரிப்பே இதற்கு காரணம். இதெல்லாம் பற்றி கவலைப்பட என்ன உள்ளது? ஏதோ சிலை வைத்தோமா மாலை போட்டோமா என போய் கொண்டே இருப்பதுதான் கலாச்சாரத்தின் அடையாளமாய் உள்ளது.

இந்த வாரம் என்பிஆர் வானாலியில் சக்கரை வியாதிக்கான முக்கிய மருந்து இந்த வருடத்தில் மூன்றாம் நிலை சோதனைக்கு வந்ததுள்ளதை பற்றி அறிவித்தார்கள். 2008 இறுதியில் இந்த மருந்து நடைமுறை படுத்தப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. ஊசி வடிவில் இன்சுலினை செலுத்தாமல் இன்ஹேலர் வடிவில் இன்சுலினை கொண்டு வந்துள்ளனர். இந்த மருந்தை மான்கைன்ட் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. பொதுவாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வோரின் எடை அதிகரிக்கும். ஆனால் மான்கைன்ட் நிறுவனத்தாரின் மருந்தினால் அப்பிரச்சனை இல்லை என்று தெரியவருகின்றது.

மேலும் தகவல்களுக்கு

மரம் நடுவதால் பூமியின் வெப்ப அதிகரிப்பை மட்டுறுத்தலாம் என்பதேல்லாம் நடைமுறையாகாது என அமெரிக்கன் ஜியோபிசிக்கல் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில் கோவிந்தசாமி பாலாவின் ஆய்வு பதிப்பிக்கபட உள்ளது. பாலாவின் கூற்றுப்படி அட்ச ரேகை மிதமானது முதல் அதிகமாகும் பகுதிகளில் நடப்படும் மரங்களும் பூமியின் வெப்பநிலையை அதிகப்படுத்தும். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள மழைக்காடுகளை பாதுக்காப்பதன் மூலமும் , அக்காடுகளை விரிவு படுத்தலுமே பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும். அவரது ஆய்வுகளை காடொழித்திலால் கடல், நிலம்,வெளி எனப்படும் மூன்று இடங்களில ஏற்படும் பாதிப்பை முப்பரிமாண சூழல்-கார்பன் மாடல்களை கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் நிறுப்பித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு

No comments: