இலவசமாய் கிடைத்தால்
இனிப்பாய்தான் இருக்கிறது
பனி போல் கரைந்தாலும்
பாவனையாய் சுகமுன்டு
மூன்று நாள் மழையில்
மூழ்கி போன வீட்டுக்குள்
ஓரு வேளை உணவுக்கும்
ஓட்டாண்டியாய் ஆக
வரிசையில் நின்று
வக்கனையாய் அரைபடி அரிசியோடு
வேட்டி சேலை வாங்கையில்
வாயெல்லாம் பல்தான் வருகிறது
இலவசமாய் கொடுத்தேன் என்றும்
இறைவன் நானே என்றும்
சுவரோட்டியில் சிரிக்கிறார்
சுந்தரமாய் தலைவர்
கையெடுத்து கும்பிட்டு
அடுத்த வருட மழைக்கு
அடியெடுத்து நாங்கள்
கர்ணணுக்கு பிறப்பில் உண்டு
கவச குண்டலம் உடலோடு ஒட்டி
எங்களுக்கும் பிறப்பில் உண்டு
வழிந்தோடும் தெருக்களும்
வாய்க்கரிசி இலவசமும்
வாழ்வோடு ஒட்டி
தண்ணீருக்குள் தலை முங்கி
மூச்சு தடுமாறும் வேளையில்
முடி பிடித்து அழுத்துபவன்
சிறிதேனும் வெளி இழுத்தாலும்
தயை கொண்டு
தானம் செய்தவனாகிறான்
இங்கு சலவை செய்த
சட்டை இல்லையானாலும்
மூளைகள் நிறைய உண்டு
No comments:
Post a Comment