Thursday, November 9, 2006

உத்தமர்

இலவச வேட்டி ஓன்று
இரு கோவணமாச்சு
இடையில் நடந்த ஊழலில்

ஆதியில் உடுத்தது இதுதானென
ஆள்பவன் பிரச்சாரம் பேச
வழக்கம் போல் தலையாட்டி
வக்கணையாய் கைதட்டி நாங்கள்

இவனாவது வேட்டியை கோவணமாக்கினான்
அவனிருந்தால் கட்டியிருப்பதும் காணாமல் போகும்
அவனோடு பார்க்கையில் இவன்
என்றும் உத்தம கொளுந்து

Monday, November 6, 2006

கிப்ரா எனும் புரதம்

ஞாபகம் என்பது மூளையில் எங்கிருக்கிறது? எது ஞாபகத்தை உருவாக்குகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலாக ஜெனிடிக் அறிவியலார்கள் ஞாபகத்துக்கு சொந்தமான ஜீனை கண்டறிந்து விட்டார்கள்.

கிப்ரா எனும் அந்த அற்புதமான ஜீன் ஞாபகங்களின் காரணமாக அடையாளம் காண பட்டதன் விளைவாக மருத்துவ உலகில் பல புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.ஆயிரம் வேறு வேறு ஞாபக திறனுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஜெனிடிக் ப்ளுபிரிண்ட்களை ஆராய்ந்து இந்த ஜினை கண்டுபிடித்துள்ளார்கள்.

ஞாபகம் ஒரு மனிதனையும், மனிதத்தையும் வரையறுக்கிறது.ஞாபகத்தின் மூலம் வழியே இனி ஞாபகத்திற்கும் அளவுகோல் கொணர முடியும்.

இந்த ஜீன் மூளையின் ஞாபகங்களுக்கான பாதையென வழங்கப்படும் ஹிப்போகேமஸ் என்னும் இடத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஹிப்போகேமஸ் மூளையின் டெம்போரல் லோபுக்கு கீழே இருபுறமும் உண்டு. அல்சைமர் நோயினால் பாதிப்பு வருகையில் ஹிப்போகேமஸ்தான் முதலில் சேதம் ஆகிறது. இந்த பகுதியின் பாதிப்பு அண்டேராகிரேட் அம்னிசியா என்ற புதிய ஞாபகங்களை சேமிப்பதை தடுக்கும் வியாதியையும் உருவாக்கலாம்.

அல்சைமர் நோய் உடையவர்களுக்கு கிப்ரா மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.கிப்ராவை பற்றிய இந்த ஆராய்ச்சி கடைகளில் கிடைக்கும் மருந்தாக மாற சிறிது காலம் எடுக்கும்.

இந்த ஆராய்ச்சியை டி ஜென் என்னும் அரிசோனாவை சேர்ந்த ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.இந்த சோதனையின் முடிவுகளை மறு ஆய்வின் மூலம் உறுதியும் படுத்தப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு

Friday, November 3, 2006

கடலுணவு

வீட்டில் அம்மா சைவமாக இருந்ததால் அசைவம் சாப்பிட பழகின காலங்களில் முழுக்க முழுக்க ஹோட்டல்களில் மட்டன் வகையறாவில்தான் வாழ்க்கை இருந்தது. ஓரு நாள் அக்கா கையால் வறுத்த மீன் சாப்பிட எல்லாமே மாறி போனது. சாப்பிட்டது என்ன மீன் என்று நியாபகம் இல்லை. ஆனால் அந்த ருசி இன்னமும் மனசில் உண்டு. அப்போது தஞ்சை பக்கம் வீடு. அக்கா வீட்டு மீனுக்காக திருச்சி வர ஏக்கமிருக்கும்.

அமெரிக்கா வந்து பிரம்மசாரியாய் இருந்த போது கோழிதான் பிராதான அசைவ உணவு. அறை நண்பர்களின் அற்புத சமையல்களில் வகை வகையாய் கிடைத்தது. மீன் சமையல் செய்தல் யாருக்கும் புலப்படவில்லை. நல்ல மீன் வருவல் வெளியிலும் கிடைப்பதில்லை. அப்போது கிரிலில் வாட்டி எடுத்த அமெரிக்க மீனிற்கு நாக்கு பழகவில்லை.

ஆரம்ப காலத்தில் கிராப் கேக் என்ற நண்டு உணவு மட்டும் மிக பிடிக்கும். அதை மட்டும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்போது இந்த ஊர் கடல் உணவும் பழகி விட்டது.

இன்று காலை அலுவலகம் வரும் போது என்.பி.ஆர் வானோலியில் அதிர்ச்சி தரும் செய்தியை கேட்க நேர்ந்தது. 2048ல் கடலுணவு எல்லோருக்கும் சாத்தியமில்லை என்று சொன்னார்கள். அதிகப்படி மீன் பிடிப்பும், மாசுப்படுத்தப்பட்ட இயற்கை சூழல்களும் கடல்வாழ் உயிரிகளின் இருப்பை பெரிதும் பாதிக்கின்றன. 1960ல் இருந்து மீன் பிடிப்பது கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இந்த நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். காரை நிறுத்தி விட்டு நடந்து செல்லாமா என்று யோசித்தேன். என் காரும்தானே சுற்று சூழலின் மாசுக்கு ஒரு காரணம்.நடைமுறையில் சாத்தியமானது அலுவலக பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தி அலுவலகத்திற்கு நடப்பது மட்டுமே.

மீன் பிடித்தல் பலரின் வாழ்க்கை முறையாய் உள்ளது. அவர்களது அன்றாட வாழ்வும் இது போல் கடல் உயிர்கள் அரிதாவதால் பாதிக்கப்படும். கவலையான விஷயம்.

இதை தவிர்க்க கடலுக்குள் கடல் உயிர்களுக்கான சரணாலயமும், மீன் பிடிப்புகள் தடை செய்யப்பட்ட பகுதிகளும் வர வேண்டியிருக்கும். இது போல் கொணர்தலின் பயன் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் வெளிப்படையாக உள்ளது.

ஏற்கனவே மாசுப்பொருள்களால் உலகில் ஏறி வரும் வெப்பம் துருவ முனைகளில் பனி உருகுதலை அதிகப்படுத்தி உள்ளது. அதன் விளைவுகளையும், கட்டுப்படுத்தும் முறை பற்றியும் விவாதங்கள் போய் கொண்டிருக்கின்றன. அதன் பக்க விளைவுகளாய் ஏற்படும் கடல் உயிரிகளின் பாதிப்பும் எதிர்கால மாசுக்கட்டுப்பாடு பற்றிய திட்டமிடல்களின் அவசியத்தை இன்னமும் அதிகமாய் வலியுறுத்துகின்றன.

Thursday, November 2, 2006

இலவசம்

இலவசமாய் கிடைத்தால்
இனிப்பாய்தான் இருக்கிறது
பனி போல் கரைந்தாலும்
பாவனையாய் சுகமுன்டு

மூன்று நாள் மழையில்
மூழ்கி போன வீட்டுக்குள்
ஓரு வேளை உணவுக்கும்
ஓட்டாண்டியாய் ஆக
வரிசையில் நின்று
வக்கனையாய் அரைபடி அரிசியோடு
வேட்டி சேலை வாங்கையில்
வாயெல்லாம் பல்தான் வருகிறது

இலவசமாய் கொடுத்தேன் என்றும்
இறைவன் நானே என்றும்
சுவரோட்டியில் சிரிக்கிறார்
சுந்தரமாய் தலைவர்
கையெடுத்து கும்பிட்டு
அடுத்த வருட மழைக்கு
அடியெடுத்து நாங்கள்

கர்ணணுக்கு பிறப்பில் உண்டு
கவச குண்டலம் உடலோடு ஒட்டி
எங்களுக்கும் பிறப்பில் உண்டு
வழிந்தோடும் தெருக்களும்
வாய்க்கரிசி இலவசமும்
வாழ்வோடு ஒட்டி

தண்ணீருக்குள் தலை முங்கி
மூச்சு தடுமாறும் வேளையில்
முடி பிடித்து அழுத்துபவன்
சிறிதேனும் வெளி இழுத்தாலும்
தயை கொண்டு
தானம் செய்தவனாகிறான்
இங்கு சலவை செய்த
சட்டை இல்லையானாலும்
மூளைகள் நிறைய உண்டு

Wednesday, November 1, 2006

ரெஸ்வெர்டால்

ஆராய்ச்சியாளர்கள் சிகப்பு வைனில் உள்ள ரெஸ்வெர்டால் என்ன மூலக்கூறு ஆயுளை கூட்டும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

குண்டு வெடிப்பு, கொசுக்கடியெல்லாம் இது போக்காது. அதையெல்லாம் தாண்டி பிழைத்து இதை அருந்தும் போது ஆயுள் நீளும்.

டையட் இருந்து உடம்பை காய்த்து நாக்கு செத்து போவது தண்டனைதான். ரெஸ்வெர்டால் இது போன்ற டையட் முறைக்கு மாற்றாயும் வரும்.

நாம் சாப்பிடும் அதிக கலோரி உணவின் கெடுதல்களை கட்டுப்படுத்தும் திறனும் இந்த மூலக்கூறுக்கு உண்டு. ஆந்திரா மெஸ் போகும் போது முழு மீல்ஸ் சாப்பிட்ட யோசிக்க வேண்டாம்.

எலிக்கு கொடுத்து பரிசோதித்து பார்த்துள்ளார்கள். நன்கு வேலை செய்துள்ளது. இன்னமும் இதிலிருந்து மருந்து செய்யவில்லை.

ரத்தத்தில் சக்கரை அளவையும் கட்டுப்படுத்தும் திறனும் இந்த மூலக்கூறுக்கு உண்டு. டையாபடீஸ் பயம் உள்ளவர்களும் இது நல்ல செய்தி.